ஐவரிகோஸ்ட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு இரண்டு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திய உயர் மட்டக் குழுவினர் திங்கட்கிழமை அங்கிருந்து வெளியேறினர். ஆபிரிக்க நாடுகளின் நான்கு தலைவர்கள் அண்மையில் இங்கு வந்தனர். பக்போ குவற்றா ஆகியோருடன் பேசி இது தொடர்பான அறிக்கையை நைஜீரியாவிடம் கையளிக்கவே இக் குழு இங்கு வந்தது.
ஆபிரிக்க நாடுகளின் அமைப்புக்கு நைஜீரியாவே தலைமையேற்றுள்ளது. இதன் முடிவே இறுதி முடிவாக அறிவிக்கப்படவுள்ளது. பேச்சுவார்த்தைகள் இனிமையாக இருந்தன விரைவில் அனைவரும் இனிப்புப்பண்டம் உண்டு ஒற்றுமையுடனிருப்பதைக் காண்பீர்கள் எனப் பேச்சுவார்த்தையிலீடுபட்ட குழுவினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் குவற்றா பேச்சுக்கள் யாவும் நிறைவடைந்துவிட்டன. முடிவுகள் ஆபிரிக்க தலைமையகத்தால் மேற்கொள்ளப்படுமென்றார்.
பதவி விலக மறுக்கும் பக்போ வெளிநாடுகள் தன்னைப் பதவி கவிழ்க்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார். நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு வேட்பாளர்களும் வெற்றியீட்டியதாக அறிவித்தனர் இருவரும் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
இதனால் நிலைமைகள் அங்கு மோசமடைந்தன. மேற்கு நாடுகள் குவற்றாவின் வெற்றியையே ஏற்றுக்கொண்டதுடன் வாக்கு மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டையும் நிராகரித்தன.
ஆனால் ஐவரிகோஸ்ட் அரசியலமைப்பு மன்றம் பக்போ வெற்றிபெற்றதாகத் தெரிவித்தது. இதனாலுண்டாகியுள்ள இழுபறிகளை நீக்கும் பொருட்டே ஆபிரிக்க குழு ஐவரிகோஸ்ட் வந்தது.
இதற்கிடையில் பக்போ பதவி விலக வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அமெரிக்கா விரும்பினால் ஜோர்ஜியாவில் பக்போ புகலிடம் பெற முடியுமென்றும் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடுகளின் இராணுவத் தளபதிகள் ஒன்று கூடி பக்போவை பதவி விலக்குவதற்கான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவது தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர். இம்மாதம் 17, 18ம் திகதிகளில் இது சம்பந்தமான இறுதிக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்குப் பின்னர் பக்போ வலுக்கட்டாயமாக பதவி கவிழ்க்கப்படும் சாத்தியம் உள்ளதாக அவதானிகள் தெரிவித்தனர்.
0 commentaires :
Post a Comment