ஆனால் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அந்நாட்டில் தேசிய இனமாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபையின் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மூன்று முக்கிய இடங்களில் தமிழ் பிரிவினைவாதத்தின் தலைமைத்துவம் உருவாகலாம். கொழும்பில் எனது நண்பர் சுமந்திரன் அவ்வாறு உருவாகலாம். வடக்கு கிழக்கில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அவ்வாறு உருவாகலாம். புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அலி ஜின்னா போன்றதொரு கதாபாத்திரத்தைக் கொண்ட ஒரு தலைவர் உருவாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு நேற்று நடைபெற்றபோது அதில் ஆணைக்குழுவின் தலைவர் சி. ஆர். டி. சில்வா கலந்துகொண்டிருக்கவில்லை. ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
உதய கம்மன்பில அங்கு தொடர்ந்து கூறியதாவது இலங்கையை பொறுத்தமட்டில் சிங்கள மக்களை மட்டுமே ஒரு இனமாக கருத முடியும். அந்த வகையிலேயே எமது வரலாறு மற்றும் கலாசாரம் அமைந்துள்ளது. ஆனால் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் அங்கு தம்மை ஒரு தேசிய இனமாக பார்க்கலாம். அதாவது தாய் மக்களின் நாடு தாய்லாந்து போன்று ஜப்பானியர்களின் நாடு ஜப்பான் இலங்கையின் தேசிய இனமாக சிங்கள மக்களை மட்டுமே பார்க்கலாம்.
தமிழ்நாட்டு தமிழர்கள்
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்கள் அங்கு தேசிய இனமாகின்ற அதேவேளை ஏனைய நாடுகளான இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, மடகஸ்கார், கென்யா போன்ற நாடுகளில் தமிழ் மக்கள் ஒரு சிறு மக்கள் பிரிவினர் மட்டுமேயாகும். அதாவது ஜப்பானில் உள்ள கொரியர்கள் போன்றும் தாய்லாந்தில் உள்ள சீனர்கள் போன்றவர்களே இலங்கையில் உள்ள தமிழர்கள்.
அதிகம் செய்துள்ளோம்
எனவே அவர்களினால் சுயாட்சியையோ சுய நிர்ணய உரி“மையையோ கோர முடியாது. சிறு மக்கள் பிரிவினருக்கு உரிய உரிமைகளை மட்டுமே அனுபவிக்க முடியும். சிறிய மக்கள் பிரிவினர்களுக்கான உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதைவிட அதிகளவில் எமது நாட்டில் நாங்கள் செய்துள்ளோம்.
தமிழ் மக்களின் தாயகமான இந்தியாவில் கூட தமிழ் மொழி அரச கரும மொழியாக இல்லை. ஆனால் இலங்கையில் உள்ளது. அந்த வகையில் நாங்கள் இந்தியாவைவிட முன் சென்றுள்ளோம். செல்வநாயகம் உள்ளிட்ட எந்த தலைவரும் வடக்கு கிழக்கு எவ்வாறு தமிழ் மக்களின் தாயகமாக இருக்கும் என்பதனை நிரூபிக்கவில்லை. தமிழ் மக்கள் எவ்வாறு தேசிய இனமாக வருவார்கள் என்பதனை நிரூபிக்கவில்லை.
செல்வநாயகம் அகிம்சைவாதியா?
செல்வநாயகம் அகிம்சைவாதி என்று குறிப்பிடப்படுகின்றார். ஆனால் அவரின் உண்மையான விடயத்தை பார்க்கும்போது அவர் அந்தளவுக்கு அகிம்சைவாதி அல்ல என்பது புரியும்.
ஒரு சந்தர்ப்பத்தில் செல்வநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சிதம்பரம் கனகசிங்கம் மற்றும் நேசைய்யா உள்ளிட்ட பலர் கூட்டம் ஒன்றை நடத்தினர். அந்த கூட்டத்துக்கு குண்டர்களை அனுப்பி செல்வநாயகம் குழப்பியிருந்தார். செல்வநாயகத்தின் அகிம்சை போராட்டங்களில் பங்கெடுக்காதவர்களை குண்டர்களை கொண்டு தாக்கியிருந்தார்.
இற்றைக்கு 12 வருடங்களுக்கு முன்னர் புலிகளை தோற்கடிக்க முடியும் என்று எமது கட்சி கூறியது. அதாவது புலிகள் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டாலும் அது முடியாத காரியம் என்றே நம்பினர். நாங்கள் அதனை உடைத்தோம். விளைவாக புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். நாங்கள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்த விடயம் ஒன்று உள்ளது.
தமிழீழம் சரியானது என நிரூபித்தால் ஏற்போம்
அதாவது நாங்கள் செல்வநாயகத்தின் அகிம்சை ரீதியான அச்சுறுத்தலுக்கு பிரபாகரனின் அச்சுறுத்தலுக்கோ ஒரு போதும் அடி பணிந்ததில்லை. மாறாக தர்க்கங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம். நாங்கள் பௌத்தர்கள். தர்க்கவியல் ரீதியில் நிரூபிக்கப்படும் விடயங்களை ஏற்றுக்கொள்வோம். தமிழீழம் சரியான கோரிக்கை நிரூபித்ததால் அதற்காக முன்னிற்க தயார் என்று நாங்கள் கூறிவந்தோம். ஆனால் யாரும் அதனை நிரூபிக்க முன்வரவில்லை. மாறாக அச்சுறுத்தல் மட்டுமே இருந்தது.
வால் மட்டுமே இலங்கையில் இருந்தது
தற்போது மக்களுக்கு ஒரு விடயத்தை கூறவேண்டும். அதாவது புலிகளை தோற்கடித்த வெற்றிக்களிப்பில் தொடர்ந்து இருக்கவேண்டாம். அதற்கடுத்த பிரிவினைவாத சவாலை எதிர்கொள்ள முன்வாருங்கள். நவீன முறையில் எதிர்காலத்தில் பிரிவினைவாதம் உருவாகலாம். புலியின் வால் மட்டுமே இலங்கையில் இருந்தது. அதனை வெட்டியுள்ள நாங்கள் புலிகள் தோற்கடிப்பட்டுள்ளதாக கூறுகின்றோம்.
கால்கள் வெளிநாடுகளில்
ஆனால் அந்த புலியின் வாய் நோர்டிக் நாடுகளில் உள்ளது. முன் கால்கள் கனடாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளன. பின் கால்கள் தென்னாபிரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் உள்ளன. எனவே தற்போது எமக்கு ஒரு இடைவெளி மட்டுமே கிடைத்துள்ளது.
இஸ்ரேல் எப்படி உருவானது?
இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கவில்லை. 86 நாடுகளில் யூதர்கள் பரந்து காணப்பட்டனர். எனினும் ஒரு கட்டத்தில் 86 நாடுகளிலும் இருந்த யூதர்கள் ஒன்று கூடி இயக்கம் ஒன்றை ஆரம்பத்து பலஸ்தீனத்துக்குள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினர்.
இந்தியாவில் முதலில் ஏற்பட்ட பிரிவு முஸ்லிம் அல்ல. மாறாக 1919 ஆம் ஆண்டில் சுயநிர்ணய அரச>யலமைப்பு வந்ததும் கன்னடம் மலையாளம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய பகுதிகள் ஒரு வலயமாக இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் 1935 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்போது அந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பின்னர் நாம் தமிழர்கள் இயக்கம் உருவானது. ஆனால் 1962 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் இராணுவத்தினால் அந்த இயக்கம் அழிக்கப்பட்டது.
லண்டன் மாநாடு
இதனையடுத்து 1962 ஆம் ஆண்டு லண்டனில் உலக தமிழ் சங்கத்தினால் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டிருந்த செல்வநாயகம் சிகிச்சை பெறுவதற்காக லண்டன் சென்றிருந்தபோது அந்த மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது அவர் அந்த மாநாட்டில் என்ன கூறினார்? இந்தியா பெரிய நாடு. அதனுடன் மோதி நாட்டை பெற முடியாது என்றார். அதனையடுத்து இலங்கை தெரிவு செய்யப்பட்டது. செல்வநாயகம் மலேஷியாவில் இருந்து இலங்கைக்கு குடி பெயர்ந்தவர்.
தமிழ் அலி ஜின்னா வரலாம்
அன்று சர்வதேச நாடுகள் பிரிவினைவாத போராட்டத்துக்கு இரகசியமாக ஆதரவு வழங்கின. இன்று வெளிப்படையாக ஆதரவு வழங்குகின்றன. எதிர்காலத்தில் மூன்று முக்கிய இடங்களில் தமிழ் பிரிவினைவாதத்தின் தலைமைத்துவம் உருவாகலாம். கொழும்பில் எனது நண்பர் சுமந்திரன் அவ்வாறு உருவாகலாம். வடக்கு கிழக்கில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அவ்வாறு உருவாகலாம். புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அலி ஜின்னா போன்றதொரு கதாபாத்திரத்தைக் கொண்ட ஒரு தலைவர் உருவாகலாம்.
எனவே தற்போதைய நிலைமையில் தமிழ் அலி ஜின்னா ஒருவரை எதிர்கொள்ள நாம் தயாராகவேண்டும். இதற்காக சட்டம் அறிவு தொல்பொருள் உள்ளிட்ட விடயங்கள் சார்ந்த அறிவுடைய இராஜதந்திர படை ஒன்றை நாங்கள் உருவாக்கவேண்டும். __
0 commentaires :
Post a Comment