1/18/2011

கிழக்கில் கண்ணிவெடிகள் கரையொதுங்கலாமென எச்சரிக்கை

புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் வெள்ளம் காரணமாக மிதந்து வந்து இருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் கிழக்கு பொதுமக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென இராணுவத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் மழை, வெள்ளம் காரணமாக மிதந்து வந்து கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் பாதுகாப்புப் படையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு மிதந்து வந்த கண்ணிவெடிகள் தொடர்பாக விழிப்புடன் செயற்படுமாறு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொது மக்களை இராணுவத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். கிழக்கில் 95 வீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் வெற்றிகரமாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல, எஞ்சியுள்ள பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் தொடர்பாகவே அஞ்சுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயங்கள் தொடர்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு உரிய முறையில் தெளிவுபடுத்தும் படி அந்த மாகாணத்திலுள்ள சகல இராணுவ படையணிகளுக்கும் அறிவுறுத்தல்களை இராணுவத் தலைமையகம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கில் ஒருசில இடங்களில் மாத்திரம் மிகவும் குறைந்த அளவு கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியிருப்பதால் மழை, வெள்ளம் காரணமாக இவைகள் வெளியாகி வந்திருக்கலாம் என இராணுவ பொறியியல் பிரிவினர் சந்தேகம் கொண்டுள்ளனர்.
இதனையடுத்தே இந்த எச்சரிக்கையை பொதுமக்களுக்கு விடுப்பதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

0 commentaires :

Post a Comment