குறுகிய அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் அழைப்பு விடுத்தார்.
இன, மத, குல ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் குறுகிய அரசியல் யுகத்திற்குப் பொங்கல் விழா முற்றுப்புள்ளி வைக்கும். இயல்பு நிலையை நாட்டில் ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு என்றில்லாமல் மாபிஃயா எங்கும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி கூறினார்.
உள்நாட்டில் ஒன்றும் சர்வதேசத்தில் இன்னொன்றுமென கருத்துக்களை முன் வைத்து சில சக்திகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டின் மீதும், மக்கள் மீதும் அக்கறை கொண்டவர்களாக அனைவரும் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:- நாம் எந்த இனம், மதத்தைக் கொண்டிருந்தாலும் எமது கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும். மேற்கத்தேய கலாசாரத்தில் ஈர்க்கப்பட்டு செயற்படும் நமது பிள்ளைகளுக்குப் பெற்றோர் தமது கலாசாரத்தைப் பழக்க வேண்டும்.
நாட்டின் அபிவிருத்தியில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போன்றே அவரவர் கலாசாரத்தைப் பாதுகாத்து செயற்படுவதிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இந்த நாட்டில் எவரும் தனித்து நின்றோ பிரிந்திருந்தோ வாழ முடியாது. நாம் இலங்கைத் தாயின் பிள்ளைகள். நாம் தனித்து நிற்கக் கூடாது. தமிழ், சிங்களம், முஸ்லிம் என நாம் ஒரே நாட்டில் ஒரே சந்ததியாக முன்னேறுவோம்.
சில அரசியல் தலைவர்கள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இன, மத, குல ரீதியில் மக்களைத் தூண்டிவிட்டு பிளவுபடுத்த முயல்கின்றனர். அதற்கு ஒருபோதும் மக்கள் இடமளிக்கக் கூடாது.
ஐக்கிய இலங்கையில் ஒன்றுபட்டுவாழும் சூழலைக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் கட்சிகளும் தயாராக வேண்டும். யாழ்ப்பாணம் துரையப்பா அரங்கில் பொங்கல் விழா மேடையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ. பி. டி. பி. என அனைவரும் மக்களுக்காக இணைந்துள்ளோம். இதே போன்று மக்களுக்காக சேவை செய்வதில் நாம் ஒன்றுபட்டு செயற்படுதல் அவசியம்.
இனம், மதம், குலம் என மக்களை பிளவுபடுத்தும் குறுகிய அரசியல் நோக்கத்துக்கான யுகம் இந்த பொங்கலோடு நிறைவுறட்டும். பிரிவினையின்றி நாட்டில் வாழும் மக்களுக்காக உழைக்க நாம் ஒன்றிணைவோம்.
மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பிரதிபலனை நாம் மக்களுக்குக் காட்டியுள்ளோம். முப்பது வருட பின்தங்கிய நிலைக்குப் பின் நாம் தற்போது முன்னேற்றமடைந்த வருகிறோம்.
வடக்கு, கிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலும் அபிவிருத்தி நடைபெறுகிறது. நாம் எதைச் செய்தாலும் அதனை விமர்சிப்பதிலேயே சிலர் உள்ளனர். நாம் பாலம் கட்டினாலோ அல்லது வீடு கட்டினாலோ அவை வெளிநாட்டு நிதியில் மேற்கொள்வதாக பிரசாரம் செய்கின்றனர்.
நாட்டைக் கட்டியெழுப்ப எம்மிடம் பணம் இல்லாவிட்டால் நாம் வட்டிக்குக் கடன் பெற்றாவது அதனை நிறைவேற்றுவோம். பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாமே அதனை மீளச் செலுத்துவோம்.
குறுகிய அரசியல் நோக்கத்தோடு செயற்படுபவர்கள் முன் நாம் சளைக்கமாட்டோம். இந்த நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் உழைப்போம். தமிழ்த் தலைவர்களும் மக்களுக்காக எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்
மங்கள வாத்தியம் முழங்க மலர் தூவி ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு
யாழ்ப்பாணத்தில் விமரிசையான விழா.அரச அனுசரணையில் தேசிய பொங்கல் விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
மதத் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்களுடன் பெருமளவில் மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலை கலாசார சமய நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன.
துரையப்பா விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த பிரதான மேடையில் விழா நிகழ்வுகள் இடம்பெற்றன. மைதானத்தின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த விசேட அரங்கில் பொங்கல் பொங்குதல் உள்ளிட்ட சமய வழிபாடுகள் நடைபெற்றன.
தேசிய பொங்கல் விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்து சமய முறைப்படி மேள தாள நாதஸ்வர முழக்கங்களுடன் வரவேற்கப்பட்டார்.
பாதையின் இருமருங்கிலும் மகளிர் மலர்தாங்கி நிற்க 50 மேளங்கள், 50 நாதஸ்வரங்கள் உட்பட சந்தமெழுப்ப ஜனாதிபதிக்குக் கோலாகலமான வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொங்கல் பானையில் அரிசியை இட்டு பொங்கல் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
அதனையடுத்து சிவாச்சாரியார்கள் ஜனாதிபதிக்குப் பொன்னாடை மற்றும் கிரீடம் அணிவித்தும் மலர் மாலை சூடியும் வரவேற்றனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் வடக்கின் பல பிரதேசங்களிலிருந்தும் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் செய லாளர் லலித் வீரதுங்க, பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, ஈ.பி.டி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர், மாவட்டச் செயலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழா மேடையில் உழவுத் தொழிலைக் கெளரவிக்கும் வகையில் 41 உழவு இயந்திரங்கள் ஜனாதிபதி யினால் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டன.
அத்துடன் 31 இந்துக் கோயில்களின் புனரமைப்புக்காக 31 இலட்சம் ரூபாவுக்கான காசோலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியிடம் கையளித்தார்.
அத்தோடு யாழ். பல்கலைக்கழகத்துக்குப் புதிதாகப் பிரவேசிக்கும் 100 மாணவர்களுக்கு ‘லெப்டொப்’ கணனிகள் ஜனாதிபதியினால் பரிசளிக்கப்பட்டன. ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் ஆசி வழங்கும் வகையில் மும்மொழிகளில் இயற்றப்பட்ட வரவேற்புப் பாடலை இயற்றிய தர்ஷனனுக்கு ஜனாதிபதி பரிசளித்து கெளரவித்ததுடன் யாழ். மாநகர மேயர் திருமதி பற்குணராஜா ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன் றையும் வழங்கி கெளரவித்தார்.
0 commentaires :
Post a Comment