தெற்கில் ஆயுதப் புரட்சியில் பங்கேற்றவர்கள் இன்று தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளது போல் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி போராளிகளும் எதிர்காலத்தில் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து இந்த நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடவேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என சட்டத்தரணியும் பிரபல எழுத்தாளருமான எஸ்.எம்.எம்.பஸீர் குறிப்பிட்டார்.
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை புத்தளம் கச்சேரியில் நடைபெற்றபோது சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சட்டத்தரணி பஸீர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
தெற்கிலே ஏற்பட்ட இரண்டு ஆயுதப் புரட்சிகளில் பங்கேற்ற இளைஞர்கள் இன்று தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து அரசியல்வாதிகளாகவும் எழுத்தாளர்களாகவும் ஊடகவியலாளர்களாகவும் மாறியுள்ளனர். அதேபோன்றுதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டு அவர்களும் இந்த நாட்டின் வளர்ச்சியின் பங்காளர்களாக மாற்றப்பட வேண்டும் என விரும்புகிறோம்.
போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலத்தில் வடக்குக், கிழக்குப் பகுதிகளில் செயற்பட்ட கண்காணிப்புக் குழுவினர் அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின் இருப்பைப் பலி கொடுத்துத்தான் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டார்கள். மட்டுமன்றி அவர்களது செயற்பாடுகள் பக்கச்சார்பாகவும் இருந்தன.கிழக்கு மாகாணத்தில் கண்காணிப்புக் குழு தனது கடமைகளில் இருந்து விலகியே நின்றது. விடுதலைப் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டபோது அவர்கள் விலகிநின்று வேடிக்கை பார்த்தனர்.
விடுதலைப் புலிகளால் போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் முஸ்லிம்கள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். அதேபோன்று ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களாலும் முஸ்லிம்கள் கடுமையான இழப்புக்களைச் சந்தித்தனர்.மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் அனைத்தையும் நான் ஆவணப்படுத்தி வைத்துள்ளேன்.
1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படும் என சந்திரிக்கா ஆட்சியில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அது வழங்கப்படவில்லை.
கிழக்கு மாகாண முதலமைச்சர் இன்று இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார். இது கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்குப் புது அனுபவமாகும். இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் மூலமாக தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என அங்கு வாழும் மக்கள் நம்புகின்றனர். அந்தளவுக்கு நிலைமை மாற்றமடைந்துள்ளது என்றார்.
0 commentaires :
Post a Comment