1960 களில் புகழ்பெற்ற மூன்று கவிஞர்கள், திமிலை சகோதரர்கள், திமிலைத்துமிலன், திமிலை மகாலிங்கம், திமிலைக் கண்ணன் இம்மூவரும் சளைக்காது போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை எழுதி பாராட்டுக்களைப் பெற்றன.
இம் மூவரும் அப்போதைய மட்டு. தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தனர். கணிசமான இலக்கியப் பங்களிப்புச் செய்தனர். திமிலைத்துமிலன் “திமிலை நளின கலாமன்றம்” என்ற அமைப்பின் மூலம் பல நாடகங்களை அரங்கேற்றினார்.
திமிலை மகாலிங்கம் “தேனமுத இலக்கியமன்றம்” என்ற அமைப்பின் மூலம் பல நாடகங்களை அரங்கேற்றினார். இவ்வாறு நாடக வளர்ச்சியிலும் இவர்கள் கணிசமாக பங்களிப்புச் செய்தனர். தேனமுத இலக்கிய மன்றம், ஒரு வர்த்தக வகுப்பு மாணவர்களைக் கொண்டு உருவானது. தட்டச்சு இதில் முக்கியமாக இருந்தது. மட்றாஸ் கபேயின் மேல் மாடியில் இவ்வகுப்பு செயற்பட்டது. திமிலை மகாலிங்கம் அதன் முகாமைத்துவப் பணிப்பாளராக செயற்பட்டார். ஆனால் அதை அவர் சொல்லிக் கொண்டதே இல்லை.
பல ஆண், பெண் இலக்கிய கர்த்தாக்கள் இவ்வகுப்பின் மூலம் உருவாகினர். தமது திமிலை மகாலிங்கம் அமைதியான சுபாவம் உடையவர். சகலரையும் அரவணைத்து வழிநடத்துவதில் வல்லவர். பின்னால் அவருக்கு கிராம சேவை உத்தியோகம் கிடைத்தது.
ஆனாலும் தேனமுத இலக்கிய மன்றம் தொடர்ந்து செயற்பட்டது. முன்னைவிட அதிகமான இலக்கியச் செயற்பாடுகளை மேற்கொண்டது.
இலக்கிய உலகில் இவரது சாதனைகள் பல கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, நாவல் அனைத்திலும் அவர் முத்திரை பதித்தார். சிறுவர் இலக்கியத்திலும், சில நூல்களை வெளியிட்டார்.
இதுவரை அவர் எழுதிய நூல்கள் வருமாறு,
கனியமது (சிறுவர் பாடல்கள்), மோதல் (சிறுகதைத் தொகுதி), பாதைமாறுகிறது (நாவல்), புள்ளிப்புள்ளி மானே (சிறுவர் கவிதை), சிறுவருக்கு விபுலானந்தர் (சிறுவர் இலக்கியம்), அவனுக்குத் தான் தெரியும் (நாவல்), சிறுவருக்கு நாவலர் (சிறுவர் இலக்கியம்), குருவிக்கு குஞ்சுகள் (சிறுவர் இலக்கியம்), குழந்தையின் குரல் (சிறுவர் இலக்கியம்), நம் நாட்டுப் பழமொழிகள்.
இவ்வாறு 10 நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவரது “சிறுவருக்கு விபுலானந்தர்” என்று சிறுவல் இலக்கிய நூலிலே தனது முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்.
சுவாமி விபுலானந்த அடிகள் ஒரு முத்தமிழ் வித்தகர். இலக்கிய ஆய்வுகள் செய்து வியத்தகு முடிவுகளை நிறுவியவர். ஆராய்ச்சியாளர், அறிஞர் பெருமகன். என்றெல்லாம் அடைமொழி கொடுத்து அறிஞர் மத்தியிலே அவரை அறிமுகம் செய்யும் வகையிலே பல நூல்கள் உருவாகி இருக்கின்றன. ஆனால் அறிவைத்தேடும் நிலையிலுள்ள சிறுவர் சமுதாயம் அவரது குணாதிசயங்களை உணரும் வகையிலே நூல்கள் இன்னும் உருவாகவில்லை என்றே கூறலாம். சுவாமி விபுலானந்தரா? அவர் பெரிய இலக்கியவாதி பண்டிதர், ஆராய்ச்சியாளர், அவரைப் பற்றிச் சாதாரண மக்கள் அறிந்து கொள்ள என்ன இருக்கின்றது. நாமெல்லாம் சிறியவர்கள் என்று ஒரு பக்கமாக விலகியிருக்க விளைகிறார்கள்.
இது அவர்களின் மன இயல்பாகி விட்டது. பெரியவர்கள் மாத்திரமல்ல சிறியவர்களும் விபுலாநந்த அடிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இன்றைய சிறுவர்களே நாளைய அறிஞர்கள் என்ற உண்மை உணரப்பட வேண்டும். இந்த வகையிலான சிந்தனைகளின் பிரதிபலிப்பே ‘சிறுவருக்கு விபுலாநந்தர்’ என்றும் இச் சிறிய நூலாகும். விபுலாநந்த அடிகளின் வரலாற்றுச் சிறு குறிப்பொன்றும் அதனைத் தொடர்ந்து மனதில் பதிய வைக்கக்கூடிய விபுலாநந்தரின் குண இயல்புகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவைக்குப் பொருத்தமான திருக்குறள்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றைப் படித்து ரசித்துப் பயனடைய முன்வருவது இளைய சமுதாயத்தின் கடமையும் உரிமையுமாகும்.
இந்நூலிலே
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாத்
தலைவரும் வடகிழக்கு மாகாண கல்விப்
பணிப்பாளருமாகிய
க. தியாகராஜா
அவர்களின்
அணிந்துரையில்
சுவாமி விபுலானந்தரது நூற்றாண்டு நிறைவினை விமரிசையான முறையில் தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடும் காலகட்டமிது. அடிகளார் பற்றிய சிறப்பு வெளியீடுகள், நினைவு மலர்கள், ஆய்வு நூல்கள், நினைவுச் சொற்பொழிவுகள் இலங்கையில் மாத்திரமன்றி இந்தியா, கனடா போன்ற நாடுகளிலும் சிறப்பான முறையில் வெளிவந்துள்ளன. எங்கும் விபுலாநந்த வெள்ளம் கரைபுரண்டு ஓடத் தலைப்பட்டுள்ளது.
இவற்றின் பெரும்பான்மையானவை வளர்ந்தோரின், இலக்கிய ஆய்வாளரின், கல்வியாளரின் கண்ணோட்டத்தில் அவர் தம் மனவோட்டத்தில் அமையப் பெற்றுள்ளன. வளரும் சிறார்களது சிந்தனை, கண்ணோட்டம், ரசனை ஆகியவற்றை பற்றிய நூல்கள் வெளியிடப்படவில்லையென்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அடிகளார் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன். வளரும் இளம் சமுதாயத்துக்காகவே தனது உலகியல் வாழ்வினைத் தியாகம் செய்தவர். வாழ வழி தெரியாது ஈழத்தெரு நீளம் அவர் கண்ட சிறுவர், சிறுமியற்காக இரங்கிய மனம் அவரது மனம். அவர் அமைத்த கல்விக் கூடங்களும், மாணவர் இல்லங்களும் இதை மிகத் தெளிவாக பறைசாற்றி நிற்கின்றன.
சிறுவருக்காக சிந்தித்தவர், செயல்பட்டவர், வரலாறு படைத்தவர். எமது விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றினையும், அவரது புகழ் பூத்த பல்வகையான பணிகளையும் எமது வளரும் சமுதாயத்தினருக்கு தெளிவாக சிறப்பாக ஐயப்பாடற்ற முறையில் சிறுவர் உலகத்திற்கு சிறப்புற அறிமுகப்படுத்துவதேயாகும். திமிலை மகாலிங்கம் அவர்களால் எழுதப்பட்டுள்ள ‘சிறுவருக்கு விபுலாநந்தர்’ என்ற இச்சிறு நூல் இந்நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதொரு முயற்சியாகும். அடிகளாரது வரலாற்றுக் குறிப்புகள் இருபதுக்கு மேற்பட்ட தலைப்புக்களில் விபுலானந்த அடிகளாரது பல்வகையான குண நலன்களை, சிறப்புக்களை, கோட்பாடுகளை, சாதனைகளை நமது இளைய தலைமுறையினருக்குப் புகட்ட முற்படுகிறார் இந்நூலாசிரியர்.
இவரது இம்முயற்சியை நாம் பாராட்டாமலிருக்க முடியாது. அடிகளாரைத் தமது கலங்கரை விளக்கமாக, ஒப்புயர்வற்ற வழிகாட்டியாக நிலையான சொத்தாக எமது சிறுவர் உலகம் கொள்ள வேண்டும். எமது பாடசாலைகளிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் சிறப்பு மலர்கள் இந்த மனவோட்டத்தினை எமக்கு ஓரளவுக்கு கோடிட்டுக் காட்டுகின்றன.
திமிலை மகாலிங்கம் நமது எழுத்தாளர்களுள் ஓர் காத்திரமான இடத்தினைப் பெற்றுள்ளவர். துறைநோக்கி இச்சிறு நூலினைப் படைத்துள்ளார். இதிலுள்ள ஒவ்வோர் அத்தியாயமும் அடிகளார் பற்றி ஒரு சேதியினை அல்லது சிறப்பினைப் பற்றியதாக அமைந்துள்ளமையும், சிறப்பினை நிலைப்படுத்தும் வகையில் பொருத்தமான திருக்குறள் பாக்கள் ஈற்றில் தரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சங்கள். கட்டுரைகளுடன் அடிகளார் பற்றிய சிறுவர் பாடல்களும் நூலுக்கும், நூலின் நோக்கத்திற்கும் சிறப்பாக அமைந்துள்ளது.
பின்வரும் ஆக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தது. இவை தவிர காதலோ காதல் (தினக்கதிர்), நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வுண்டு (வீரகேசரி), ஊஞ்சல் (மித்திரன்).
இவைகள் தொடராக வெளிவந்த போது வாசகரை மிகவும் கவர்ந்தது. இவ்வாறே இவர் பெற்ற விருதுகளும் இவரது இலக்கிய ஆளுமைக்குச் சான்றாகின்றன. அவை:
1. தமிழ் மணி (இந்து கலாசார அமைச்சு)
2. கலாபூஷணம் (இந்து கலாசார அமைச்சு)
இவர் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் நீண்டகால உறுப்பினர், 1993 முதல் பிரதேச செயலகம் நடத்திய கலாசார விழா தேனகம் சிறப்பு மலர் வெளியீடு, ஆகியவற்றில் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளார். மேற்படி கலாசாரப் பேரவையினால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டுள்ளார். 20.12.2010 இல் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் இவருக்கு “கலைச்சுடர்” விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. இவரது இலக்கிய வாழ்வுக்குத் துணை நின்றவர் இவரது காதல் மனைவி சக்திராணி என்பது குறிப்பிடத்தக்கது.
29.04.1938 இல் திமிலை தீவில் பிறந்த இவர் தனது 72 வயதைத் தாண்டி 13.12.2010 இல் காலமானார். இவரது மறைவு ஈழத்து இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
0 commentaires :
Post a Comment