சகல உள்ளூராட்சி மன்றங்களும் இன்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட உள்ளதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக கூறினார். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறி வித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெப்ரவரி, மார்ச் மாதங்களில் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளின் சில போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளதால் போட்டிகள் நடைபெறும் கொழும்பு, கண்டி மற்றும் ஹம்பாந் தோட்டை பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படாது எனவும் அவற்றுக்கான தேர்தல் வேறொரு திகதியில் நடைபெறும் எனவும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்தது.
மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சருக்குள்ள அதிகாரங்களின் பிரகாரமே உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் குறைக்கப்படவுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க பெருமளவு உல்லாசப் பிரயாணிகள் இப் பகுதிகளுக்கு வருகை தருவதாலும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் சுதந்திரமாக தேர்தல் கெடுபிடிகள் இன்றி விளையாடு வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் தேர்தல் நடைபெற்ற யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை என்பனவும் கலைக்கப்படாது என அமைச்சு தெரிவித்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளதோடு இதற்கான திகதியை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் அறிவிக்க உள்ளார். அதன் பின்னர் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுக்கும் என பிரதித் தேர்தல் ஆணையாளர் சுமணசிறி கூறினார்.
உள்ளூராட்சி மன்றங்களை கலைப்பது தொடர்பில் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட போதும் அதில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டே வெளியிடப்படுவதாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் டி. பி. ஹெட்டியாரச்சி கூறினார். உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் முன்னரே பிரதான கட்சிகள் வேட்பாளர்களிடம் விண்ணப்பங்களை கோரியுள்ளன.
0 commentaires :
Post a Comment