எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 12 உள்ளூராட்சி சபைகளிலும் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் 10 உள்ளூராட்சி மன்றங்களிலும் தனித்துப் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டு அடிப்படையில் இவ்வாறு போட்டியிட மு.கா. முடிவு செய்துள்ளதாக கட்சிச் செயலாளர் எம்.ரீ. ஹஸன் அலி கூறினார்.
ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் மு.கா. அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் எனவும் அவர் கூறினார். கட்சித் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சி செயலாளர் ஹஸன் அலி, தவிசாளர் பிரதி அமைச்சர் பiர் சேகுதாவூத் ஆகியோர் கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.
உள்ளூராட்சித் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து கட்சியின் மாவட்ட குழு மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பீட உறுப்பினர்கள் கூடி முதலில் ஆராய்ந்தனர். பின் ஐ.ம.சுமு. செயலாளருடன் மு.கா. பேச்சு நடத்தியது.
அரசுடன் இணைந்து போட்டியிடும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டால் கட்சியின் வியூகத்தை மாற்ற நேரிடும் எனவும் ஹஸன் அலி கூறினார். கட்சி அதியுயர் பீடமே இறுதித் தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று மாநகரசபை, அக்கரைப்பற்று பிரதேசசபை, சம்மாந்துறை பிரதேசசபை ஆகியவற்றிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தும், நாவிதன்வெளி, இறக்காமம், பொத்துவில், அட்டாளைச்சேனை, காரைதீவு, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்தில் தனித்தும் போட்டியிட உள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு மரச்சின்னத்தில் தனித்தும் ஏறாவூர், காத்தான்குடி நகர சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளதாகவும், திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத் தில் மன்னார், முசலி, மாந்தை ஆகிய பிரதேச சபைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் தனித்தும், ஏனையவற்றிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தும் போட்டியிட வுள்ளதாகவும், வவுனியா மாவட்டத்தில் வென்கல செட்டிக்குளம் பிரதேச சபைக்கு மரச்சின்னத்தில் தனித்தும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மரித்திமேபற்று பிரதேசசபைக்கு தனித்தும் போட்டியிடவுள்ள தாகவும், இம் மாவட்டங்களில் சில சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சேர்ந்து போட்டியிடவுள்ளதாகவும் செயலாளர் நாயகம் ஹஸன் அலி கூறினார்.
வடகிழக்கிற்கு வெளியே களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை பிரதேசபை பேருவளை பிரதேசசபை ஆகியவற்றிற்கும், கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்லை பிரதேச சபைக்கும், கண்டி மாவட்டத்தில் அக்குறணை பிரதேசசபை, உடுநுவர பிரதேசசபை ஆகியவற்றிற்கும், மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல பிரதேசசபைக்கும், மாத்தறை மாவட்டத்தில் வெலிகம நகரசபைக்கும், குருணாகலை மாவட்டத்தில் குளியாப்பிட்டிய பிரதேச சபைக்கும், புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் நகரசபைக்கும், பதுளை மாவட்டத்தில் வெளிமடை பிரதேசசபைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் தனித்தும் ஏனையவற்றிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment