1/08/2011

தெலுங்கானா பிரச்சினைக்கு ஸ்ரீ கிருஷ்ணா குழு 6 வகை யோசனை

District Map of Andhra Pradesh
தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண ஸ்ரீ கிருஷ்ணா குழு 6 வகையான யோசனைகளை தெரிவித்து உள்ளது. என்றாலும் ‘ஆந்திரா ஒரே மாநிலமாக இருப்பது தான் நல்லது’ என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராட்டம் நடந்து வருகிறது.
எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கடந்த பெப்ரவரி மாதம் 3ம் திகதி அமைத்தது. அந்த குழு ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 11 மாதங்களாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு ஆய்வு நடத்தி 2 பகுதிகள் கொண்ட 461 பக்க அறிக்கையை கடந்த டிசம்பர் 30ம் திகதி மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் தாக்கல் செய்தது.
ஸ்ரீ கிருஷ்ணா குழு தெரிவித்துள்ள யோசனைகள் விபரம் வருமாறு:-
1. தற்போதுள்ள ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் அப்படியே நீடிக்க வேண்டும். ஆனால் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை வைத்துப் பார்த்தால், இப்போது இருப்பது போன்றே நீடிப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று இந்த குழு ஒருமனதாக கருதுகிறது. இதனால் தற்போதுள்ள நிலை நீடிக்க சில நடவடிக்கைகள் தேவைப்படும்.
2. ஆந்திராவை சீமாந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களாக பிரித்து ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கலாம். பிரிக்கப்பட்ட சீமாந்திராவும் தெலுங்கானாவும் தங்களுக்கு தனித்தனி தலைநகரங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்த யோசனைக்கு தெலுங்கானா பகுதியில் பலத்த எதிர்ப்பு கிளம்பும் என்பதால், இதுவும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என குழு கருதுகிறது.
3. இரு மாநிலங்களாக பிரித்தால் ரோயலசீமா பகுதியை தெலுங்கானாவுடன் சேர்த்து ரோயல- தெலுங்கானா என்ற மாநிலத்தையும், கடலோர ஆந்திரா என்ற மற்றொரு மாநிலத்தையும் உருவாக்கலாம். தலைநகர் ஐதராபாத்தை ரோயல- தெலுங்கானா மாநிலத்துடன் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால் இந்த யோசனை தெலுங்கானா ஆதரவாளர்களாலும், ஒன்றுபட்ட ஆந்திரா ஆந்திர மாநிலத்தை விரும்புகிறவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை உள்ளது. பொருளாதார ரீதியை கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த யோசனை நியாயமானதாக இருந்த போதிலும் 3 பிராந்திய மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை இந்த யோசனை வழங்காது என்று இந்த குழு கருதுகிறது.
4. ஆந்திராவை இரண்டாக பிரித்து சீமாந்திரா, தெலுங்கானா ஆகிய இரு தனித்தனி மாநிலங்களை உருவாக்கிவிட்டு, ஐதராபாத் பெருநகரை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கலாம். பூகோள ரீதியாக ஐதராபாத் யூனியன் பிரதேசம் நல்கொண்டா மாவட்டம் வழியாக தென்கிழக்கில் கடலோர ஆந்திராவில் உள்ள குண்டூர் மாவட்டத்துடனும் மகபூப்நகர் மாவட்டம் வழியாக தெற்கில் ரோயலசீமா பகுதியில் உள்ள கர்னூல் மாவட்டத்துடனும் தொடர்புடையதாக இருக்கும்.
5. ஏற்கனவே உள்ள எல்லை வரையறைகளின்படி, தெலுங்கானா, சீமாந்திரா என்ற இரு மாநிலங்களாக பிரிக்கலாம். தெலுங்கானாவுக்கு ஐதராபாத்தை தலைநகர் ஆக்கலாம். சீமாந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டும். சீமாந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்கும் வரை ஐதராபாத் இரு மாநிலங்களுக்கும் தலைநகராக நீடிக்கலாம். புதிய தலைநகரை உருவாக்குவதற்கு அதிக நிதி தேவைப்படும் என்பதால், அதை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
6. ஆந்திரா ஒன்றுபட்ட மாநிலமாக நீடிக்க வேண்டும். அப்படி நீடிக்கும் வகையில் தெலுங்கானா பகுதியில் சமூக- பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, அங்குள்ள மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். தெலுங்கானா பகுதியின் வளர்ச்சிக்காக சட்ட ரீதியிலான அதிகாரம் கொண்ட தெலுங்கானா பிராந்திய கவுன்சிலை ஏற்படுத்தலாம்.
தெலுங்கானா சமூக- பொருளாதார ரீதியில் பின்தங்கிய பகுதியாக இருப்பதால் அந்த முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காணவும், அந்த பகுதி மேம்பாடு காணவும், ஆந்திரா தொடர்ந்து ஒரே மாநிலமாக இருக்கவும் இந்த யோசனை உதவும்.
மேலும் ஆந்திராவின் 3 பிராந்தியங்களும் வளர்ச்சி காணவும், அந்த பிராந்தியங்களில் உள்ள மக்களின் நலனுக்கும் இந்த யோசனை மிகவும் உகந்ததாக இருக்கும் என்று கருதுகிறோம். இந்த யோசனை பெரும்பாலான மக்களுக்கு திருப்தி அளிப்பதாகவும் இருக்கும்.

0 commentaires :

Post a Comment