மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக ஐந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஏறாவூர் றூகம வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி - வாழைச்சேனை பிரதேசங்களில் அந்நூர் மகா வித்தியாலயம், ஆயிஷா பாலிகா, பிறைந்துறைச்சேனை அல் அஸ்ஹர், ஸாதுலிய்யா ஆகிய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். ஜெயினுதீன் தெரிவித்தார்.
ஏறாவூர் - ஐயங்கேணி அப்துல் காதர், ஹிஸ்புல்லா அமீர் அலி, ஸாஹிர் மெளலானா, றகுமானியா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதாக பாடசாலைகளின் அதிபர்கள் அறிவித்துள்ளனர்.
கல்குடா கல்வி வலயத்தில் பூலாக்காடு, பொண்டுகல் சேனை, புலிபாய்ந்தகல், வடமுனை, வீரநகர், குடும்பிமலை, முறுத்தானை, தரவை, மதுரவ் கோளிக்குளம் ஆகிய பாடசாலைகள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி தெரிவித்தார்.
வவுணதீவு - மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் காஞ்சிரங்குடா, கொத்தியாபுல, மாவளயாறு, பன்சேனை, நரிப்புல் தோட்டம், கரவெட்டியாறு, மாவடி முன்மாரி ஆகிய பிரதேச பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் மாணவர்களது வரவு மிகவும் குறைவாகக் காணப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment