வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்கவென இந்திய அரசாங்கத்தின் முதல் தொகுதி நிவாரணப் பொருள்கள் நேற்று (14) விமானம் மூலம் கொண்டுவரப் பட்டன.
110 மில்லியன் ரூபாய் பெறுமதியான 25 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்கள் விசேட விமானத்தின் மூலம் நேற்றுப் பகல் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது.
இவற்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்திய அரசின் சார்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா நிவாரணப் பொருள்களை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்.
பருப்பு, சீனி, போர்வை, தண்ணீரை சுத்தமாக்கும் மாத்திரைகள், குடிநீர், பாய் போன்றவை அடங்கிய இந்த முதல் தொகுதி நிவாரணப் பொருள்களை விமானப் படையினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் இணைந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 320 மெட்ரிக் தொன் உலருணவு நிவாரணப் பொருள்களும் நேற்று அனுப்பிவைக்கப்பட்டதாக அவ்வமைச்சின் அதிகாரி கூறினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் உலக உணவுத் திட்டத்தின் லொறிகளில் நேற்று முதல் உலருணவுப் பொருள்கள் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 50.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த நிவாரணப் பொருள்களை விநியோகிப்பதற்கு மாவட்டச் செயலாளர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 318, 500 பேருக்கு விநியோகிக்கவென 63 மெட்ரிக் தொன் உலருணவுப் பொருள்களும், அம்பாறையில் பாதிக்கப்பட்ட 153, 500 பேருக்கு 191 மெட்ரிக் தொன்களும், திருகோணமலை மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கு 50 மெட்ரிக் தொன்களும் பொலன்னறுவை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 13 ஆயிரம் பேருக்கு 16 மெட்ரிக் தொன்களுமாக அரிசி, சீனி, பருப்பு, மரக்கறி எண்ணெய் ஆகிய பொருள்கள் அடங்கிய 320 மெட்ரிக் தொன் உலருணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரி கூறினார்.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களில் முதற் கட்டமாக 1280 கிலோ கிராம் உணவுப் பொருட்கள் விமானப் படையின் ஐ. எல். 76 ரக விமானம் மூலம் அனுப்பப்பட்டதோடு ஏனைய உணவுப் பொருட்கள் கட்டம் கட்டமாக பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.
இந்திய நிவாரணப் பொருட்களைஇந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரிடம் கையளித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடொன்று வழங்கிய முதலாவது நிவாரண உதவி இதுவாகும்.
இதேவேளை விமானப்படையின் எம். ஐ. 17 ரக மற்றும் பெல் 212 ரக ஹெலிகொப்டர்கள் இரண்டு மற்றும் ஏ. என். 32 ரக விமானம் என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.
இந்த விமானங்களினூடாக நேற்று மட்டக்களப்பிற்கு 1038 கிலோ கிராமும், சேருநுவரவுக்கு 800 கிலோ கிராமும், கல்லாறுக்கு 3333 கிலோ கிராமும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
0 commentaires :
Post a Comment