1/12/2011

29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள்

29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள் நன்றி *பெண்ணியம் இணையத்தளம் 


புகலிடத்தில் வாழும் பெண்கள் சந்தித்துத் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், இவ்வாணாதிக்கச் சமூக அமைப்புமுறை பெண்கள் மீது திணித்திருக்கும் ஒடுக்குமுறைகளை இனங்காணுவதற்கான ஒரு தளமாக, 1990ம் ஆண்டு ஜேர்மனியின் கேர்ண் நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 29வது தொடர் 11.12.2010 அன்று ஜேர்மனியின் பேர்லின் நகரில் நடைபெற்றது.

இதுவரையில் நடைபெற்ற சந்திப்புகளில், இச்சமூகம் பெண்களை ஒடுக்குவதற்காக உருவகித்திருக்கும் கலாசாரம், மதம், சாதி, சம்பிரதாயங்கள் போன்ற அலகுகளை வெவ்வேறு கோணங்களில் விவாதிக்கப் பட்டிருக்கின்றன.

பெண்விடுதலைப் போராடட்ங்கள் என்பது சமூகத்தில் கட்டுமானிக்கப் பட்டிருக்கும் வர்க்கங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை தெளிவுபடுத்துமுகமாக பெண்ணியத்தின் வெவ்வேறு கூறுகள் விடயதானங்கள் எடுக்கப்பட்டுவருகின்றன.

போர்ச்சூழலில் பெண்கள், சாதியத்தில் பெண்கள், பெண்கள் மீதான பாலியல்
வன்முறைகள், உலகமயமாதலில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள், இலக்கியத்தில் பெணகள் சித்தரிக்கப்படும் நிலை போனற பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டு கேள்விக்குட்படுத்தப் பட்டன. எமது சமூகத்தில் விளிம்புநிலையில் வாழும் தலித்தியப் பெண்களின் பின்னணிகளை பிரதானமாகக் கருத்திற் கொண்டு கலந்துரையாடபப் டட் ன. தலித் பெண்ணிய வாதிகளான சிவகாமி, பாமா ஆகியோர் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த 29வது தொடரில் மலையகத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார பிரச்சனைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காக மலையகத்திலிருந்து சந்திரலேகா கிங்ஸ்லி வருகைதந்திருந்தது பெண்கள் சந்திப்பின் சிறப்பம்சமாக இடம்பெற்றது.


பங்கு கொண்டவர்களின் சுய அறிமுகத்தைத் தொடர்ந்து, சந்திரலேகா கிங்ஸ்லி மற்றும் கிங்ஸ்லி கோமஸ் ஆகியோரின் இயக்கத்தில் உருவாகிய, ஹட்டன் டிகோயா நகரசபையின் கட்டுப்பாட்டில் நகரைத் துப்புரவு செய்யும் மல்லிகா என்ற தொழிலாளி பற்றிய விவரணப்படமொன்று காட்டப்பட்டது.

மல்லிகாவின் ஒருநாள் வேலை மூலம் அவளதும், அவளுடன் இணைந்து வேலை செய்யும் சக தொழிலாளரினதும் வேலையில் உள்ள பிரச்சினைகள் மிகவும் துல்லியமாக படமாக்கப்பட்டிருந்தன.

வீடுகளிலிருந்து குப்பைகளைச் சேகரிப்பதிலிருந்து அவற்றை குப்பை மேட்டில் சேர்க்கும் வரை , அவர்கள் கால்நடையாக மலை மேடெங்கும் தள்ளுவண்டியைத் படும் சிரமங்கள், கைகளிற்கு கையுறைகள் அணியாது அவர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதும் காட்சிகளாக்கப் பட்டிருந்தன. மழைநாட்களிலும் அவர்கள் இதுபோன்றே வேலையில் ஈடுபடுத்தப் படுவார்கள் எனவும் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் மல்லிகாவின் தொழிலிலுளள் பாதுகாப்பற்ற நிலை பற்றியும், அவள் வேலை செய்யமுடியாது போகும் பட்சத்தில் அவளிற்கு எந்வித சமூக காப்புறுதித் திட்டங்களும் இல்லையென்பதுவும், அவளிற்கான மாதச் சம்பளமாக 45€ அளவில் மட்டுமே வழங்கப்படுகின்றதெனவும் தெரிவிக்கபட்டது.

அதைத் தொடர்ந்து வள்ளியம்மை என்ற ஒரு தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்ணின் வீட்டு வேலைகள் பற்றியதான ஒரு விவரணப்படமும் காட்டப்பட்டது. ஒரு பெண் நாள் முழுதும் தேயிலைத் தோட்டத்தில் ஓய்வின்றி வேலை செய்துவிட்டு வீட்டிலும் அனைத்து வேலைகளையும் தனித்து செய்யவேண்டியவளாக உள்ளாள் என்பதை இப்படத்தில் துல்லியமாக காட்டப்பட்டிருந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த சந்திரலேகா கிங்ஸ்லி மலையக மக்களின் இன்றையநிலை பற்றி உரையாடினார். 1815 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் கோப்பி செய்கை, தேயிலை செய்கை, இறப்பர் செய்கை என்பவற்றிற்காக மலையக மக்கள் கொண்டுவரப்பட்டதாகவும், அன்றிலிருந்து இன்றுவரை குறைந்த கூலியைப் பெற்றக் கொண்டு, எவ்வித அடிப்படை வசதிகளும் பூரணப்படுத்தப்படாத மக்களாக வாழ்ந்துவருகின்றனர் எனவும், வீட்டுரிமை, நிலவுரிமை, அரசியலுரிமை, பொருளாதார உரிமைகள் என்பவற்றில் சொற்பமானவற்றை அனுபவித்து வரும் இவர்கள், பல அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குதலுக்கும் உட்பட்டே வாழ்வதோடு, 80வீதமானவர்கள் தோட்டத்துறையை நம்பி வாழ்கிறார்கள். தோட்டத் துறையைச் சார்ந்து தொழில் செய்வதில் பெண்களே அதிகளவில் காணப்படுகிறார்கள். மலையகப் பெண்களின் சமூக அமைப்பு, சமூகக் கட்டமைப்பு, கூட்டுவாழ்க்கை, கலை கலாசார அம்சங்கள், மதமும் வழிபாட்டு முறைகள் என்பன பற்றியும் தனது பேச்சில் விபரிததார். அவர்கள் தம்முடைய கலை கலாசார பண்பாட்டு, மத விடயங்களிலிருந்து அவர்கள் வெளிவரவில்லை. அவர்கள் அறிவு ரீதியாக இன்னும் ஆழமாக சிந்திக்கக் கருத்தியல்களை மாற்றிக்கொள்ள ´அறிவு´ வழங்கப்படுவது அவசியம். அந்தக் கட்டுக்களை தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் வரையில் விடுதலை என்பது அர்த்தமற்றதாகவே காணப்படும் எனவும், உடைப்புகளை அவர்கள் எடுத்தே ஆகவேண்டும் எனவும், வறுமையின் காரணமாக வீட்டு வேலைக்காக அனுப்பப்படும் பிள்ளைகளில் நிறையப்பேர் பெண் பிள்ளைகள். அண்மையில் மஸ்கெலியா, முள்ளூகாமம் பகுதிகளைச் சேர்ந்த சுமதி, ஜீவராணி ஆகிய இருபெண்களும் வீட்டு எஜமானர்களால் கொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் இறப்பிற்கான காரணம் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனையாகவிருபப் தோடு, அதுபோனற் விடயங்கள் தொடர்ந்துகொண்டெ இருபப் தாகவும், அதற்காக குரல் கொடுக்கவேண்டியவர்கள் அற்ப சொற்ப விடயங்களிற்கு அடிமையாய் போய் அந்த மனிதர்களை அப்படியே ஆக்கி வைத்திருப்பது கொடுமையே. அவர்கள் இதிலிருந்து விழித்தெழ வேண்டிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுதல் அவசியமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட பல பெண்கள் மலையகத்தில் தாம் வாழ்ந்த நாட்களை நினைவுகூர்ந்தனர். இரத்தினபுரவில் ஆசிரியராகக் கடமையாற்றிய பெண்ணொருவர் தமக்கு வள்ளியம்மையையின் வாழ்க்கையைப் பார்க்கும் போது தனக்கு பழைய ஞாபகங்கள் வருகின்றன, தனது பாடசாலையில் கல்வி கற்ற குழந்தைகளின் கஸ்ரங்களைத் தான் நேரில் பார்த்ததாகவும் கூறிக் கண்கலங்கினார்.

மலையக மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் உரிமைகளிற்காக குரல் கொடுக்க எவரும் அற்ற நிலையில் தான் இருக்கிறார்கள். சிறிதளவேனும் அவர்களது போராட்டங்களில் மார்க்ஸியக் கட்சிகள்தான் கலந்து கொண்டு குரல் கொடுக்கின்றனர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்று துன்புறுத்தப்பட்ட மற்றைய பெண்களுடன் பார்க்கும் போது லக்சுமியின் பிரச்சினை அதிகளவில் கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்ட யுத்தத்திலும் வன்னியில் பெருமளவில் பாதிக்கப்பட்டதும் மலையகத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்களே. இன்று இடம்பெயர்ந்தவர்களிற்கான முகாம்களில் தங்கியிருப்பவர்களில் அதிகமானோர் மலையகத்தைஸ் சேர்ந்தவர்கள் என்ற கருத்துகளும் வைக்கப்பட்டன.

பொதுவாகவே வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்க்கையில் இரட்டைச் சுமையைச் சுமக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். அதிலிலும் வேலை செய்யும் இடங்களிலும் எந்த அடிப்படை வசதிகளுமின்றி, குறிப்பாக மாதவிடாய் காலத்தில் பெண்கள் தமது அழுக்குத் துணிகளை மாற்றுவதற்குக்கூட ஒரு மறைவிடமில்லாமல், வேலை செய்யும் இடங்களில் பாலியல் இச்சைகளிற்கு முகம் கொடுத்தும், பறிக்கும் கொழுந்துகளிற்கு ஆண்களை விட குறைவான கூலியைப் பெற்றும், பின்பு வீட்டில் வந்து எந்தவித வசதிகளுமின்றி வீட்டு வேலைகளைத் தனித்து செய்யவேண்டியும், கணவன்மாரினது இம்சைகளிற்கு ஆளாகும் மலையகப் பெண்களின் வாழ்வு மிகவும் வேதனைக்குரியது எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இக் கலத்துரையாடலில் மேலும், மேற்கத்தைய நாடுகளில் பெண்கள் வசதியாக வாழ்வதாகத் தென்பட்டாலும் பெண் என்ற ரீதியில் அவர்களும் ஒடுக்கப்படுகிறார்கள். தன்னுடன் வேலைசெய்யும் பெண் அதிகமான நாட்களில் வீங்கிய கண்ணுடன் தான் வேலைக்கு வருகின்றாள் என ஒரு பெண் தெரிவித்தார்.

அனைத்து பெண்களும் ஒடுக்கு முறைகளுக்குள்ளாக்கப் பட்டாலும், அவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள், அவர்களின் வர்க்கம் சார்ந்ததாகவே இருக்கும். விளிம்பு நிலையில் வாழும் பெண்களின் ஒடுக்குமுறை பொருளாதார ரீதியில் ஓரளவேனும் விடுதலையடைந்திருக்கும் மத்தியதரவர்க்க பெண்களின் பிரச்சினைகளைப் பார்க்கும் போது ஒப்பீட்டளவில் அதிகமாகவேயுள்ளது.

இவர்களின் விடுதலக்கான பாதைகளும் வெவ்வேறாக இருப்பது தவிர்க்க முடியாதவென்றாகும். வீட்டில் வேலை செய்யும் பெண்ணும் அவளது எஜமானியும் ஒருமித்து ஒடுக்குமுறைக்கான போராட்டங்களில் ஈடுபட முடியாதென்பது கண்கூடு என்றும், பெண்விடுதலைப் போராட்டங்களில் ஆண் பெண் முரண்பாடுகளைத் தூக்கிப் பிடிக்காமல் சமூக மாற்றம், சமூகவிடுதலை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வர்க்கநிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அது முன்னெடுக்கப்படல் வேண்டும். தனித்து பெண்விடுதலை நோக்கப்படாது ஸ்மூகப் பிரச்சனைகளில் ஒரு பிரச்சினையாக பேசப்படல் வேண்டும். சமூக விடுதலை பெறவேண்டிய கூறுகளையும் பெண் விடுதலையுடன் ஒன்று சேர்க்கப்பட்டு ஒட்டுமொத்த விடுதலையுடன் அது இணைக்கப் படுதல் வேண்டும் என்றும், பெண்கள் தாம் ஒடுக்கப்படுகின்றோம் என்பதை அறியாமலேயே ஆணாதிக்க கருத்துக்களின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு தனது சிந்தனை முறைமையை தகக் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்நிலையிலருந்து விடுபடுவதற்கு அவர்கள் அகரீதியில் விடுதயைலடைய வேண்டும் என்றும், பெண்களின் இரட்டைச் சுமை வாழ்வு முடிவிற்கு கொண்டுவர வேண்டுமெனில் குடும்பத்தில் பெண்ணின் பாத்திரம் மாற்றப்பட்டு, குடும்பமுறை ஒழிக்கப்பட வேண்டும். பெரியாரின் கூற்றின்படி பெண்கள் குழந்தைகள் பெறுவது நிறுத்தப்பட வேண்டும் போன்ற கருத்துக்கள் மின் வைக்கப் பட்டன.

மல்லிகா, வள்ளியம்மா ஆகிய விவரணப்படங்களைத் தயாரித்த சந்திரலேகா கிங்ஸ்லி மற்றும் கிங்ஸ்லி கோமஸ் ஆகியோரது முயற்சிகள் பாராட்டப்பட்டன. இனிவரும் படைப்புகளில் பின்னணி ஒலியில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்றும், இப் படங்களிற்காகத் தெரிவு செய்யப்பட்ட இசை பொருத்தமற்றதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மதிய போசனத்தையடுத்து பானுபாரதியின் பிறத்தியாள் கவிதைத் தொகுப்பு தேவாவினால் விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

20 ஆண்டுகளாக கவிதை எழுதிவரும் நோர்வேயில் வசித்து வரும் பானுபாரதியின் கவிதைத்தொகுப்பு வெளிவந்தது மகிழ்ச்சியாகவுள்ளது எனத் தனது உரையை ஆரம்பித்த தேவா, புகலிடத்தில் நன்கு அறியப்பட்ட பானுபாரதியின் ஆக்கங்கள் ஒரு தொகுப்பாக வெளிவந்திருப்பதின் அவசியம் அவரது கவிதைகளை வாசிக்கும் போது புரிகிறது.

இது ஒரு காலத்தின் தேவையும் கூட. ஆக்கதாரருக்கும், வாசிப்போருக்கும், எழுதப்பட்ட காலத்திற்கும், அதன் சுவட்டைப் பார்ப்போருக்கும் மிக பயனுள்ளதாக அமைகின்றது. போர் தனது காலடிகளை எவ்விதம் பரப்பி மனிதத்தை அழித்திருக்கின்றது, அதிகாரம் எவ்வாறு தன் கொடுமைகளை, என்னென்ன வழிகளில் நிகழ்த்தியிருக்கின்றது என்பதற்கு பானுபாரதியின் இக்கவிதைத் தொகுப்பை ஒரு சாட்சியாய் நம்முன்னே நிறுத்துகின்றது எனவும், போர்ச் சூழலை எதிர்கொண்ட பெண்ணாக அக்கிரமங்களைத் தடாலென முன்வைக்கமுடியும். ஒரு பெண்ணாக இருப்பதால் அதன் ஆக்கினைகள் பலமடங்கு பாரம் தருவதை எடுத்துக்காட்டமுடியும்.

பானுபாரதியின் கவிதைகள் போரின், அதிகாரத்தின் வெறியாட்டங்களை, அதன் எல்லாவிதமான வடிவங்களையும் வெளிக்கொண்டு வருவதில் தயங்கவில்லை. பெண்ணுடலையும் கூட போர் ஆயுதம் ஒன்றாக பாவிக்கும் படைகளின் அடாவடித்தனத்தை கொஞ்சமும் தயக்கமின்றி வார்த்தைகளைத் தேடித்திரியாமல் வெளிப்படுத்துகிறார்.

இவரது உக்கிரமான கோபம் வெடிகுண்டு பிசையும் பாண்டவர் என்ற தலைப்பிலான கவிதையில் தெரிகின்றது. அவர்தனது கவிதைகளில் 89ம் ஆண்டு பதுங்குகுழி வாழ்வை மிக நயத்தோடு கவிதைவரிகளில் விபரிக்கிறார். 1989ம் ஆண்டின் போர்நிகழ்வுகளை தன் எழுத்தில் முன்வைத்திருப்பதன் மூலம் இவரின் கவிதைகள் ஆவணமாக திகழ்கின்றது.

சிவரமணி, செல்வியின் கவிதைகளுக்கு அடுத்ததாக பானுபாரதியின் கவிதைகளை அவதானிக்க கூடியதாகின்றதென்றும், தேசமீட்பிற்கான போரை மறந்தவர்கள், மக்களுக்கான விடுதலைப்போரை மறந்தவர்கள், விடுதலைப் போருக்கான நெறியை மறந்தவர்கள் மறக்காமல் இருந்தது ஒன்றை மட்டும்தான். அது என்னவென்றால் சுடுவதை. அதை மட்டும் அவர்கள் மறக்கவே இல்லை. எனவே இது சுடும் காலம். நானும் சுடப்படாமல் இருந்தால் , நண்பனே உனக்கு பதில் எழுதுவேன் எனும் கவிதைவரிகள் மூலம் நிகழ்கால அரசியலின் கேவலப் போக்கைத் தெளிவாகவும் தைரியமாகவும் முன்வைத்திருக்கிறார்.

தேசியம் என்ற தலைப்பிலான கவிதையில் பானுபாரதியின் பார்வை புதிய கோணத்தில் இழப்புகளை எதிர்நோக்குகிறது எனத் தெரிவித்தார். அவர் மேலும், இவரது பெண்ணியம் குறித்த கவிதைகள் புலம் பெயர் நாட்டில் இருந்து வெளியாகியிருக்கின்றதென்றும், இதில் காட்டப்படும் புள்ளிகள் ஏற்கனவே நாம் தெரிந்து கண்டவைகளாகவிருப்பினும், இவரது ஆக்கங்களில் காணப்படும் புதிய பார்வை, நோக்கியிருக்கும் திறமை, ஒரு புதிய வழியைக் காட்டும் நம்பிக்கை என்பன ஒரு வளர்ந்துவரும் கவிஞையை இனம் காட்டுகிறது என்றும், இவரின் 88-89 களில் எழுதப்பட்ட கவிதைகளையும், பின்னர் வெளிவந்த ஆக்கங்களையும் ஒப்பிடும்போது ஒரு வளர்ச்சி தென்படுகின்றது. கவிதை மொழியின் சிறப்பு செப்பனிட்டுக் கொண்டே போவதும் ஒரு கவிஞையின் ஆக்கத்திற்கு துணைபுரியும் எனவும் தெரிவித்தார்.

இக்கவிதைத் தொகுப்பிற்கு ஏன் பிறத்தியாள் எனப் பெயரிடப்பட்டதென்று தனக்கு புரியவில்லையென்றும், இத்தொகுப்பில் வர்க்கம் பற்றி கவிதைகள் மிகவும் குறைவாக இருப்பதாகவும், கடைசிப்பக்கம் என்ற கவிதையில் தான் வர்க்கம் பெண்ணியம், தலித்தியம் மூன்றும் மிகவும் மூர்க்கமாக பேசப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

இத் தொகுப்பிற்கான அட்டைப்படம் மிகவும் துல்லியமாக பெண்ணின் போராட்டங்களை நம்முன்னேன்நிறுத்துகின்றதென்றும், பெண்ணுடலே ஒரு போராட்டமானதால், அவர் வாழ்வே ஒரு போர்களமாய் ஆகிநிற்பதுவும், அந்த வாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, இறுதியில் சிலுவையில் அறையப்பட்டு பெண் தொங்கும் நிலமை. சாவிற்கும் வாழ்விற்கும் இடையில அவள் வாழ்வு படும் கோரத்தை இவ்வட்டைப்படம் குறியீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்ததாக
வடக்கு கிழக்கில் யுத்தத்திற்கு பின் நிலவும் சூழல் பற்றி . . . என்ற அமர்வில் வன்னியில் நடைபெற்ற இறுதிகடட் யுத்தத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலமையை நேரில் கண்டறிந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மனித உரிமையாளர்களினால் தயாரிக்கப்பட்ட , இடம் பெயர்ந்த மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் ஒளிப்படங்களின் நிகழ்த்தல் ஒன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்ட மக்கள் சிறு கூடாரங்களில் அதிகபேர் அடைக்கப்பட்டிருப்பதுடன், தண்ணீர், மலசலகூடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. மீள குடியமர்த்தப் பட்டவர்களிற்கான நிவாரண உதவிகளும் அவர்களிற்கு ஒழுங்காகக் கிடைப்பதில்லை. தாம் வாழ்ந்த வீடுகளிற்கான உறுதிகளைச் சமர்ப்பிக்க முடியாதவர்கள் தமது நிலங்களை மீளப் பெறமுடியாத நிலையேயுள்ளது. இடம்பெயந்த மக்களில் பெரும்பான்மையினர் கணவனை இழந்தவர்களாகவும், தனித்து குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களாகவுமே இருக்கிறார்கள். ஒவ்வொரு கூடாரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பங்களில் உறவினர் ஒருவரையேனும் இழந்திருக்கிறார்கள்.

இக்குழுவினர் நேரில் சந்தித்த குழந்தைகளில் 4-5 குழந்தைகள் சுகயீனமுற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் போசாக்கின்மை குறைபாடுகளால் பாதிக்கப் பட்டவர்களாகவும், சொறி சிரங்கு போன்ற நோய்களினால் பாதிக்கப் பட்டவர்களாகவேயுள்ளனர். போரின் நிமித்தம் தம் கால் கைகளை இழந்தவர்களும், ஷெல் தாக்குதல்களினால் எரிகாயங்களிற்குட்பட்ட சிறுவசிறுமிகள் கூடுதலாகவேயுள்ளனர். ஒரு சிறுமியின் துண்டாடப்பட்டப் பெருவிரல் எந்த மயக்கமருந்துகளுமின்றி மீளப் பொருத்தப் பட்டிருந்தது. அங்கு வாழும் சிறுவர்கள் பெரிதும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும், போரின் தாக்கங்களினால் பீதிக்கும் மனச் சோர்விற்கும் உட்பட்டவர்களாகவே காணப்படுகிறார்கள். ஒரு சிறுமி தனது உறவினர்கள் எல்லோரும் இழந்த நிலையில் தனித்து வாழும் பரிதாபத்தையும் காணக் கூடியதாகவிருந்தது. இச்சிறுமி அந்நியர்களை கண்டால் ஓடிஒளிவதாகக் கூறப்பட்டது.

இடம் பெயர்ந்து வாழும் பல பெண்களும் குழந்தைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களிற்கு உட்படுத்தப்படுகிறார்கள். போரின் பிற்பாடு பாடசாலைகளில் குறைவான பின்ளைகளே கல்வி கற்கிறார்கள். உருத்திரபுரம் மகாவித்தியாலத்தை எடுத்துக்கொண்டால் 2008ல் 760 பிள்ளைகள் கல்வி கற்றதாகவும், 2010ல் 450 பிள்ளைகள் கல்வி கற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்தவர்களில் தமது உறவினர்களுடன் யாழ்ப்பாணம் சென்று தங்கியவர்கள் மீளவருவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏ9 கிழக்குபகுதி அரசாங்கத்திற்கு சொந்தமான பகுதியாகப் பிரகடனப்படத்தப்பட்டு இப்பகுதிகளிற்குள் வருபவர்கள் அடித்துத் துரத்தப்படுகிறாரர்கள் என்றும் தெரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மேலும் , இந்நிகழ்ச்சியில் தவிர்க்கமுடியாத காரணங்களினால் கலந்து கொள்ளமுடியாமல் போன பத்மி லியனகெயின் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. பெண்கள் விவகார, மற்றும் குழந்தைகள் அபிவிருத்திக்கான பிரதி அமைச்சரான எம். ஏல். ஏ. எம். கிஸ்புல்லாவின் அறிக்கைகளின் படி யுத்தத்தினால் கணவனை இழந்தோர், இலங்கை முழுவதும் 89,000 பேரும், கிழக்கில் 49,000 பேரும், வடக்கில் 40,000பேரும் காணப்படுகின்றனர். அதில் 12,000பேர் 40வயதிற்குட்பட்டவர்கள். 8000பேருக்கு குறைந்தது 3பிள்ளைகள் உள்ளனர். தெற்கில்காணப்படும் 33000 கணவனை இழந்தோர்களில் அதிகமானோர் 22க்கும் 25 வயதிற்கும் உட்பட்டவர்கள். தெற்கில் உள்ள கணவனை இழந்தோருக்கு, இறப்பு அத்தாட்சிப்பத்திரம் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் மாத்திரம் 50 000 நஷ்டஈடாக வழங்கப்படுகிறது. ஏனேயாருக்கு 150
ரூபாய்கள் வழங்கப்படுகின்றது. இவர்கள் மீளவும் திருமணம் செய்யும் பட்சத்தில் இச்சலுகைகள் நிறுத்தப்படுகின்றன. இம்மாதாந்தத் தொகையை பெறச் செல்பவர்கள் அதிகாரிகளின் பாலியல் இம்சைகளிற்கு ஆளாகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த அமர்வாக தர்மினியின் சாவுகளால் பிரபலமான ஊர் கவிதைத் தொகுப்பு விஜியினால் விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஈழத்து கவிதைகளின் சில வரலாற்றுக் குறிப்புகளுடனும், ஒவ்வொரு காலத்திற்பேற்ப கவிதைகளின் மொழி எவ்வாறு அமையப் பெற்ற தெனவும், 90களில் வெளிவந்த சிவரமணி, செல்வி ஆகியோரது கவிதைகளினூடாக ஒரு பெண் மொழி தோற்றுவித்ததாகவும், அதுவே இந்திய பெண்கவிஞைகளிற்கு உத்வேககத்தை அளித்ததாக அவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்துக்கொண்டு, தன் விமர்சனத்தை ஆரம்பித்தார்.

தர்மினி தன் கவிதைகளின் பாடு பொருட்களாக யுத்தம், யுத்த விளைவுகள், அதன் வெறுமை, சகோதரப்படுகொலைகள், பெண்ணொடுக்குமுறை, சாதியம் என்பவற்றைத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். இந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற யுத்ததின் சூத்திரதாரிகளான புலிகள், அரசு இரண்டையுமே விமர்சிக்கின்றார்.

இந்த வகையில் யுத்தமற்ற, ஆயுதங்களற்ற, சிறைச்சாலைகளற்ற ஒரு தேசத்தை கனவு காண்பதாக ‘இருட்டு‘ என்ற கவிதை சித்தரிக்கின்றதென்று கூறி, இக்கவிதையுடன் மல்லிகாவின் "மீண்டும் நான் அங்கிருந்தேன்" என்ற கவிதையை ஒப்பிட்டார். அடுத்து தனக்குப் பிடித்த கவிதையாக அப்பாவி மக்களை போரில் பலிகொடுத்து தமது வசதிகளை பேணிய முறைமையை கண்டித்து எழுதிய ‘கொல்லும வரலாறு‘ என்ற கவிதையைக் குறிப்பிட்டார்.

அடுத்து தொனி என்ற கவிதையில் கணவன் ஊரிற்கு கேட்க கத்தி மனைவியை
அவமானப்படுத்திவிட்டு, ஒருவருக்கும் கேட்காமல் மன்னிப்பு கேட்கும் வழமை அழகாகச் சொல்லப்பட்டிருப்பதாகவும், என்னையும் வளர்த்தனர் என்ற கவிதையில் சாதியம் எவ்வாறு தமிழர்கள் போகுமிடமெல்லாம் பேணிப் பாதுகாக்கப்படுகின்றதென்பதை, இலங்கையில் வீட்டுநாய்களில் கூட சாதியம் எவ்வாறு காப்பாற்றப்படுகிறது என்பதை தர்மினி அழகாகக் காட்டியிருக்கிறாள். யுத்த அனர்த்தங்கள் பற்றியே நிறையக் கவிதைகள் பேசுகின்றன. அவற்றில் நிர்வாணங்கள் என்ற கவிதை இராணுவத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப் பட்ட பெண் ஒருவரைப் பற்றி சொல்லிவந்து பின்னர் இராணுவ வீரரைப் பார்த்து, டேய்... சொறி பிடித்த தொடைகள்... மலமாய் நாறும் வாய்கள்... அழுக்காக மடிந்த வயிறுகள்... நெளிந்த குறிகள்... உங்கள் நிரவாணங்களை ஒரு தடவை பார்த்து வெட்கி மற்றுமொருத்திக்கு காட்டாது பொத்தி வையுங்கள் எனக் கூறும் வரிகள் இயற்கைக்கு முரண் பட்டவையாகவும், இத்தகைய பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப் பட்ட பெண் அழகியல் ரீதியாக ஆணை சாடும் மனநிலை அந்த பாலியல் பலாத்காரத்தின் அகோரத்தைக் குறைத்து விடுகிறதாகவும், தர்மினி கவிதைகளுக்கான முற்றுப் புள்ளிகளை தேடியலைவதால் தேவையற்ற வகையில் கவிதைகள் நீண்டு விடுகின்ற தன்மை காணப் படுவதாகவும், இவர் தனது கவிதை மொழியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இறுதி நிகழ்வாக மத்தியகிழக்கில் பணி புரியும் பணிப்பெண்களின் அவலம் என்ற தலைப்பின் கீழ் உமா உரையாற்றினார்.

2007லிருந்து கொலைகுற்றம் சாற்றப்பட்டு சவுதிஅரேபியஸ் சிறையில் வாடும் றிசானாவின் சம்பவத்தை குறிப்பிட்டு அச் சம்பவத்திற்கான கண்டனத்துடன் தனது பேச்சை ஆரம்பித்தார்.

அவர் மேலும் பேசும் போது நாட்டின் பொருளாதாரக் காரணங்களால் ஏற்பட்ட வறுமையின் நிமித்தமும், யுத்தச் சூழலினாலும் மத்தியக்கிழக்கு நாடுகளிற்குப் பல பெண்கள் பணிப்பெண்களாகச் செல்கிறார்கள். 1.8 மில்லியன் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகிறார்கள். இதில் 8இலட்சம் பெண்கள். மத்திய கிழக்கு நாடுகளில் 1.5 மில்லின் இலங்கை, இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பணிப் பெண்களாகப் பணியாற்றுகிறார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளிற்கு பணியாட்கள் செல்லும் முறைமை 1970 ஆண்டு ஏற்பட்ட எண்ணெய் உற்பத்தியின் வளரச்சியினால் ஏற்பட்டதென்றும், ஓபெக்கின் எண்ணெய் விலையை அதிகரித்ததின் மூலம் ஆரேபிரியரின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்ததால் , Service sector இல் அதிக வேலைவாய்ப்புக்கள் உருவாகத் தொடங்கின.இதன் விளைவாக எண்ணையை இறக்குமதி செய்யும் நாடுகள் தம் நாட்டவரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பத் தொடங்கின எனத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கிற்கு வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் Kafala என்ற sponsershiip முறையின் கீழ் தான் செல்லவேண்டும். இந்த முறையானது Kafeel என்ற Sponserடன் இவர்களைச் சட்ட ரீதியாக இணைக்கிறது. இதன் பின் அவர்கள் அவரின் கட்டுப்பாட்டில் அடிமையைப் போல் வாழவேண்டும். அவளது பாஸ்போர்ட் அவளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு இவர்களது வெளித்தொடர்பு துண்டிக்கப்படுகின்றது. Kafala முறையை மீறும் பட்சத்தில் அவள் நாட்டிற்குத் திருப்பியனுப்பபடலாம். பணிப்பெண்கள் வீடுகளிலிருந்து தப்பித்து நாட்டை விட்டு செல்வதாயின் அவர்களது கபீல் exit visaவை வழங்கினால் மட்டுமே செல்லலாம். மத்தியக்கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்கள் வேலை செய்ய வேண்டிய நேரம் 11லிந்து 20மணித்தியாலங்களாக இருபப்துடன், அவர்களிற்குக் கொடுப்பதாக கூறப்படும் 800$களில் 100$களே கொடுக்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் அவர்களிற்கு சம்பளமே கொடுக்கப் படுவதில்லை. பணிப் பெண்களாகப் பணிபுரியும் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாமை, உடல்வதை, பாலியல்பலாத்காரம், அதிகவேலை, ஓய்வின்மை, சம்பளமறுப்பு, உணவு மறுப்பு போன்ற பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கிறார்கள். மதியகிழக்கு நாடுகளிலிருந்து திரும்பி நாட்டிற்குத் திரும்பும் பெண்களில் 100 பேரளவில் முகம் சிதைக்கப்பட்டும், 100 பேரளவில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுமே வருகிறார்கள். ஒரு மாதத்திற்கு 20சடலங்களும் வருடத்திற்கு 100சடலங்களும் இலங்கைக்கு அனுப்பப்படுகின்றன. இதில் சில உதாரணங்களாக கொலை செய்யப்பட்ட செல்வதுரை புஸ்பவள்ளி, தர்சினி பாலகிருஷ்ணன், நிலந்தி குணதிலக்க என்போரும், ஆணிகள் உடலில் ஏற்றப்பட்ட நிலையில் ஆரியவதி, லக்சுமி மற்றும் ஆணிகளை நீருடன் பருக்கப்பட்ட நிலையில் நாட்டிற்கு அனுபப்பட்ட சாந்தி என்பவர்களின் சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

பணிப் பெண்களாக கடமையாற்றும் பெண்களை பாதுகாக்கும் விதத்தில் எந்தவித சட்டங்களும் நடைமுறையில் இல்லை. அவர்களிற்கு நீதிமன்றத்திற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது. 2009ம் ஆண்டு வீடுகளில் பணி புரியும் பெண்களின் உரிமைகளை சட்ட ரீதியாக பாதுகாக்க Schura Council முயற்சிகளை மேற்கொண்டாலும், அதிலும் கபீல்மாரிற்குச் சாதகமான கூறுகள் அதிகம் காணப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. அப்பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைப் பற்றி இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. இந்நாடுகளைப் பொறுத்தவரையில் இவர்களை அதிகளவில் அந்நிய செலவாணியைப் பெற்றுத் தரும் ஒரு ஏற்றுமதிப் பண்டமக மாத்திரமே பார்க்கிறார்கள். 2006ம் ஆணடு இலங்கை 206பில்லியன் டொலர்களை அந்நிய செலவாணியாகப் பெற்றிருக்கின்றது. இலங்கை அரசு சவுதிக்கு வேலைக்கு அனுப்பப்படும் ஒரு பணிப்பெண் மூலம் தலா 7500 டொலர்களைப் பெறுகின்றது போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இச்சந்திப்பில் கலந்துகொண்ட பெண்கள் அங்கு பேசப்பட்ட விடயங்களில் அக்கறையுடையவர்களாக இருந்ததுடன், இரவு 8மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவடையும் வரை தமது பங்களிப்பை அளித்த வண்ணம் இருந்தனர் என்பது ஒரு நிறைவான விடயமாகவேயிருந்தது.

0 commentaires :

Post a Comment