1/05/2011

அவுஸ்திரேலிய வெள்ளத்தில் 2 இலட்சம் பேர் பாதிப்பு: பத்தாயிரம் பேர் படையினரால் வெளியேற்றம்

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளத்தால் இதுவரைக்கும் இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இரு நூறு வீடுகள் முற்றாக மூழ்கியுள்ளன. வெள்ளம் ஆபத்தை யேற்படுத்தலாம் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளிலிருந்து பத்தா யிரத்துக்கு மேற்பட்டோர் வெளியேற்றப் பட்டனர். சில நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டதால் ஏனைய பிரதேசங்களுடனான தொடர்பையிழந்தது.
பாம்புகள் முதலைகள் வெள்ளத்தில் ஊடுருவி மக்களைத் தாக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒருவாரமாக அவுஸ்திரேலியாவில் கடும் காற்றுடன் கூடிய பெரும் மழையும் பெய்தது. இதனால் இங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. பாதைகள் மூழ்கி போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டன. மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து வீழ்ந்தன.
தொலைபேசிகள் செயலிழந்தன. மக்களை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவர அரசாங்கம் பெரும் பிரயத்தனங்களை எடுத்துள்ளது. தற்காலிக இருப்பிடங்களை வழங்கவும் பெண்கள் வயது முதிர்ந்தோர் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோரை வசதியான இடங்களில் குடியமர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 10 அடி உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்தோடுகின்றது. சில வாரங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை வெள்ள நீர் அடித்துச் சென்றதில் 10 பேர் மரணமடைந்ததுடன் சிலர் காயமடைந்தனர். வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த மக்களுக்கான அவசர உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment