1/24/2011

குச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்கள் திடீர் நீரூற்றுடன் சாம்பல் நிற களி வெளியேற்றம்; கொழும்பிலிருந்து பூகற்பவியலாளர்கள் விரைவு

 திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் கூடிய நீர்க்கசிவுகள் வெளிப்பட்டதையடுத்து பிரதேசத்தில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை ஆற்றுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதியிலேயே இந்த நீர்க் கசிவுகள் உருவாகியுள்ளன. சுமார் 15 இடங்களில் நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக் கின்றன.
இது குறித்து பிரதேச வாசிகள் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ பிரதேசத்திற்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் விரைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற களி மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருப்ப தற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் விரிவான அடிப்படையில் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திருமலை மாவட்ட மேலதிக செயலாளர், குச்சவெளி, தம்பலகாமம் பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருமலை மாவட்ட இணைபாளர், கிராம சேவகர்கள் உடனடியாக பிரதேசத்திற்கு சென்று ஆய்வு நடவடிக்கைகளை ஒருங்கி ணைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவத்தினரும், பொலிஸாரும் இத்திடீர் கசிவுகளுக்கான காரணங்கள் கண்டறியும் நோக்கிலான அவதானிப் புக்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
இவை இவ்வாறிருக்க அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியக பிராந்திய பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஸ்தலத்திற்கு விரைந்து ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளனர்.
என்றாலும் புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகப் பிரிவின் பூகற்பவியலாளர் கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ இன்று (24ம் திகதி) கொழும்பிலிருந்து அவசரமாக குறித்த பிரதேசத்திற்கு ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வு குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருமலை மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.ஏ. வாஹிர் கூறுகையில், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை ஆற்றுக்கு அருகிலுள்ள சேற்று நிலத்தில் சுமார் 15 இடங்களில் 500 மீட்டர்கள் நீத்தில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக்கும் பிரதேசத்திற்கு மேற்காக 150 மீட்டர் தூரத்தில் சலப்பை ஆறு உள்ளது. அதே நேரம் இப்பிரதேசத்திற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கடல் காணப்படுகின்றது. அத்தோடு இப்பிரதேசத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மேற்காக கருவாட்டு மலையும் இருக்கின்றது.
இத்திடீர் நீர்க்கசிவுகள் உருவானதற்கான காரணத்தைக் கண்டறியும் ஆய்வுகள் விரிவாக இடம்பெறுகின்றன என்றார்.
இது குறித்து புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க பணியக பிராந்திய பொறியியலாளர் வசந்தவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, தாம் குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்று அவதானிப்புக்களை மேற்கொண்டதாகவும், இது தொடர்பாக பல மட்டங்களில் அவதானத்தை செலுத்தி இருப்பதாகவும் கூறினார்.
இருந்த போதிலும் இது குறித்து உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாதுள்ளது. என்றாலும் இது விடயமாக பூகற்பவியலாளர்கள், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்பே உறுதியான முடிவுக்கு வரலாம்.
இருப்பினும் நிலக் கீழ் நீர்மட்டம் உயர்த்தல் மற்றும் சதுப்பு நிலத்தின் கீழ் இயற்கை வாயு உற்பத்தியாகி அழுத்தம் ஏற்படுத்தல் போன்றவற்றாலும் இவ்வாறான வித்தியாசங்கள் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கபில தஹநாயக்கா, குறித்த பிரதேசத்தில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்ட பின்பே இத்திடீர் கசிவுக்கான காரணத்தை சரியாகக் கண்டறியக் கூடியதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
அந்த நிலையில், மற்றொரு இயற்கை அனர்த்தத்திற்கான முன்னறிகுறியா இது என்ற கேள்வியுடன் பிரதேச மக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 commentaires :

Post a Comment