1/11/2011

கிழக்கில் ஓயாத மழை : மக்கள் அவதி 14 பேர் பலி : ஹெலி, படகுகளில் நிவாரணம் 8 1/2 இலட்சம் பேர் பாதிப்பு

நிவாரணப் பணிகள் முதலமைச்சரினால் முன்னெடுப்பு
image4661
image454.JPGஎப்போதும் இல்லாதவாறு மட்டக்களப்பு மாவட்டத்திலே தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுகின்ற பணிகள் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு அவர்களுக்கான முதற்கட்ட நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
உணவு சமைத்து வழங்குவதற்காக அரிசி சீனி மற்றும் பருப்பு போன்ற பொருட்களை முதற்கட்டமாக வழங்கி வருகின்றார். இன்று சித்தாண்டிஇ வாழைச்சேனை. கோம்மாதுறைஇ செங்கலடிஇ வந்தாறுமூலைஇ கல்குடா இபுதுக்குடியிருப்புஇ பேத்தாழைஇகிண்ணையடிஇ கறுவாக்கேணி போன்ற இடங்களில் முகபாம்களில் தங்கியிருக்கின்ற மக்களுக்கு வழங்கி வைத்தார். குழந்தைகளுக்கான பிஸ்கட்டும் முதல்வர் சந்திரகாந்தன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்ளப்பிற்கான போக்கு வரத்து தடைப்பட்டிருந்த பொதிலும் படகில் சென்று மக்களுக்கான நிவாரணப் பணியில் முதல்வர் சந்திரகாந்தன் ஈடுபட்டமை விசேட அம்சமாகும்.
நான்கு பக்கமும் நீரினால் சூழப்பட்டு எந்தவொரு போக்குவரத்து தெர்ர்புகளும் அற்று இருக்கின்ற வாழைச்சேனை நாசுவன் தீவு மக்களுக்கு சமைத்த உணவினை தொடர்ந்து வழங்குவதற்கு முதல்வர் சந்திரகாந்தன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாh.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டோர் தொகை 8 இலட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 86,344 பேர் 203 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் நேற்று கூறியது.
வெள்ளம் மற்றும் மண் சரிவினால் இறந்தோர் தொகை 14 ஆக உயர்ந்துள்ள தோடு 12 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித் துள்ளது. வெள்ளத்தினால் கிழக்கு மாகா ணத்தில் இயல்பு நிலை முற்றாகப் பாதிக் கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்குள்ள பாடசாலைகள் நேற்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதோடு கொழும்பு - மட்டக்களப்பு இரவு நேர ரயில் சேவையும் நேற்றும் ரத்துச் செய்யப் பட்டது.
முப்படையினர் மக்களுக்கு உலர் உணவு வழங்குவதிலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதிலும் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாடசாலைகள் மூடப்பட்டன
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோண மலை, பொலன்னறுவை, அநுராதபுரம், பதுளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களே வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய மாகாணத் திலும் பொலன்னறுவை, அநுராதபுரம், மாவட்டங்களிலுமுள்ள பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இது தவிர கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு வாரகாலத்திற்கு மூடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட் டத்திலுள்ள சில ஆஸ்பத்திரிகளும் மூடப் பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள 80,410 குடும்பங்களைச் சேர்ந்த 3,06,998 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24,300 பேர் 34 முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள 1,27,980 குடும்பங்களைச் சேர்ந்த 4,82,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
இவர்களில் 14,549 குடும்பங்களைச் சேர்ந்த 55,345 பேர் முகாம்களில் உள்ளனர். திருகோணமலையில் 22,026 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண் சரிவினால் 843 வீடுகள் முற்றாகவும் 3058 வீடுகள் பாதியும் சேதமடைந்துள்ளன.
மழை தொடரும்
நேற்றும் மட்டு., அம்பாறை மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததாக காலநிலை அவதான நிலையம் கூறியது. நேற்றுக் காலை 8.30 முதல் 11.30 மணி வரையான 3 மணி நேரத்தில் மட்டக்களப்பில் 111.1 மி. மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இது தவிர நேற்றுக் காலை 8.30 மணி யுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மஹியங்கனையில் 152.0 மி. மீ. உம் பொலன்னறுவையில் 144.5 மி. மீ. உம், திருகோணமலையில் 112.3 மி. மீ. உம் போவத்தென்னயில் 107.5 மி. மீ. உம் மருதங்கடவளையில் 90.0 மி. மீ. உம் மழை பதிவாகியுள்ளது.
மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும் என காலநிலை அவதான நிலையம் கூறியது. கிழக்கு, வட மத்திய, ஊவா, வட மேல் மற்றும் ஹம்பாந் தோட்டை மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய பிரதேசங்களில் கருமேகம் சூழ்ந்த மப்பும் மந்தாரமுமான காலநிலை காணப் படும் எனவும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை அண்மித்த கடற் பகுதிகளில் கடும் காற்றுடன் கூடியதாக, கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. யாழ். குடாநாட் டில் வழமைக்கு மாறான குளிர் காலநிலை நிலவி வருகிறது.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டிருப் பதுடன், வவுனியா பாலைக்குளம் நிரம்பி வழிகிறது. இக்குளம் உடைப்பெடுக்கலா மென்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
அமைச்சர் பார்வை
அம்பாறை மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரில் கேட்ட றிந்தார்.
மக்களுக்குத் தேவையான நிவா ரண உதவிகள் வழங்குவது தொடர்பில் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இன்று அவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
வெள்ளம் காரணமாக பெரும்பாலான குளங்கள் பெருக்கெடுத்துள்ளதையடுத்து அவற்றின் வான்கதவுகள் நேற்றும் திறக்கப்பட்டன.
இதனால் வெள்ள நீர் மட்டம் மேலும் உயர்ந்துள்ளதோடு வயல் நிலங்களும் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தினால் 1,32,000 ஏக்கர் வயல் காணிகள் சேதமடைந்துள்ளதாக விவசாய அமைச்சு கூறியது. கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலே கூடுதலான வயல் நிலங்கள் சேசதமடைந்துள்ளன. உலர் உணவு
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள உலக உணவுத் திட்டத்தின் ஊடாகவும், அனர்த்த சேவைகள் அமைச்சுடனும் இணைந்து மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களுக்கு அடை மழையினாலும், பெருவெள்ளத்தினாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கும் உலக உணவுத் திட்டப் பணிப்பாளருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கும் அமைச்சின் கீழ் இயங்கும் மாவட்ட செயற் திட்டப் பணிப்பாளர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை அமைச்சின் நிதி உதவியுடன் மேற்கொள்ளும்படி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இது போன்று பதுளை, கண்டி, பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் அனர்த்த நிவாரணங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு 55 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரண உதவிகளை ரிபிசீ8 உள்ளதாக உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் 105 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை உலக உணவுத் திட்டம் வழங்கியது.
(மகேஸ்வரன் பிரசாத்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 58 ஆயிரத்து 524 பேர் 146 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார். தொடர்ந்தும் மழை பெய்துவருவதால் நிவாரணப் பணிகளை முன்னெடுப் பதில் சிரமம் காணப்படுகின்ற போதும், சிரமங்களுக்கு மத்தியில் இம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு களை வழங்கி வருவதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
பெரும்பாலான வீதிகளை மூடி வெள்ளம் நிற்ப தால் படகுகளில் சென்றே நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், படகுகள் மூலம் செல்லமுடியாத இடங்களுக்கு ஹெலிகொப்டர் மூலமே செல்ல வேண்டியிருப்பதாகவும் விமலநாதன் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக மழைபெய்து வருவதால் ஹெலி கொப்டரைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான நிதியுதவிகளை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு வழங்கி வருகிறது என்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 127,882 குடும்பங்களைச் சேர்ந்த 482,323 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகரையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் உடைந்திருந்த பாலத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். ஆரையம்பதியில் படகில் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளார்.
துரவந்தியமேடு கிராமம் வெள்ளத்தால் சூழ்ந்திருப்பதால் இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் படகுகளில் சென்று அங்குள்ள மக்களை மீட்டுள்ளனர்.
(புதிய காத்தான்குடி விசேட நிருபர்)
மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதி, புதிய காத்தான்குடி, பாலமுனை, ஒள்ளிக்குளம், சிகரம், காங்கேயனோடை, கல்லடி, மஞ்சந்தொடுவாய் போன்ற பல கிராமங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்தில் குடியிருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள் என்பன வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன் 3 அடிக்கு மேல் நீர் பாய்ந்தோடுகின்றது.
இடம்பெயர்ந்த மக்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில் ஆகியோர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.
(கல்குடா தினகரன் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைபப்பற்று கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு பிரதேசங்களில் கடுமையான வெள்ளம் காரணமாக 79,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
(களுவாஞ்சிக்குடி குறூப் நிருபர்)
நவகிரி, கடுக்காமுனை ஆகிய குளங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதால் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடுக்காமுனைகுளம் உடைப்பு எடுக்கும் நிலை ஏற்பட்டதை +னிrஜி அங்குவிரைந்த பாதுகாப்புப் படையினர் குளத்தின் அணைக்கட்டுகளை 2 இடங்களில் வெட்டி நீரை வெளியேற்றி கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததாக மாகாண நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் எஸ். கணேசலிங்கம் தெரிவித்தார்.
ஆஸ்பத்திரிகள் பூட்டு
(துறைநீலாவணை, பட்டிப்பளை நிருபர்கள்)
அடைமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறு வைத்தியசாலைக ளுக்குள் மழைவெள்ள நீர் உட்புகுந்துள்ளமையினால் இந்த வைத்தியசாலைகளின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் அம்பியுலன்ஸ் வண்டிகள் மூலம் அவசர அவசரமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.
(காத்தான்குடி தினகரன் நிருபர்)
காத்தான்குடி ஆரையம்பதி, கல்லடி நாவற்குடா கரையோர பகுதியில் ஆற்று நீர் உயர்ந்துள்ளதால் அப்பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
காத்தான்குடி பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிமூலம் கரையோர பிரதேச மக்களை பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவித்ததைத் தொடர்ந்தே இப்பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் இருந்து வருகின்றனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் கரையோரப் பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கூபா பள்ளிவாசல் நீரில் மூழ்கியுள்ளதுடன் பல வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன.
உன்னிச்சைக்குளம் உடைப்பெடுக்கவில்லை
உன்னிச்சைக்குளம் உடைந்துவிட்டதாகக் கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லையென மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ். மோகனதாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைக்குளம் உடைந்துவிட்டதாக சில வதந்தியான செய்திகள் வெளியாகின்றன. இவற்றை பொதுமக்கள் நம்ப வேண்டாமெனவும் பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ள வேண்டாமெனவும் பணிப்பாளர் மோகனதாஸ் தெரிவித்தார்.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)
ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள வாவியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தோனி கவிழ்ந்ததால் இரு மீனவர்கள் வாவியில் மூழ்கியுள்ளனர்.
இதையடுத்து கடற்படையினரின் உதவியுடன் பிரதேச மீனவர்கள் ஆரையம்பதி வாவியில் இவ்விரு மீனவர்களையும் தேடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதன்போது சாம்புநாதன் நாகராசா (43) எனும் மீனவர் கண்டு பிடிக்கப்பட்டு ஆரையம்பதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவருடன் கூடச் சென்ற ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த மீனவரான ஆனந்தன் (50) என்பவரை இன்னும் கண்டு பிடிக்கவில்லையென காத்தான்குடி பொலிஸாரும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.
இம்மீனவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட மீனவரை தேடும் பணியில் மீனவர்கள், மற்றும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
வாவியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாலும் வீசிய கடும்காற்றினாலுமே இவர்களின் தோனி கவிழ்ந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பாலம், பனிச்சகேணி பாலத்தினூடான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கிரான் பிரதேசத்திலிருந்து புலிபாய்ந்த கல் பிரதேசத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
(கல்முனை குறூப் நிருபர்)
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான குளங்கள் நிரம்பியிருப்பதால் வெள்ளநீர் மேலும் அதிகரித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில்
நேற்றுவரை 6 ஆயிரத்து 624 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் 81 ஆயிரத்து 574 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல பிரதான வீதிகளில் வெள்ள நீர் பரவியுள்ளதால் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.
கல்முனை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது, காரைதீவு, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களில் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை, இவ்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு போக்குவரத்துக்கள் சகலதும் துண்டிக்கப்பட்ட நிலையிலுள்ள மணல்ச்சேனை துறைவந்தியமேடு கிராமத்தில் உள்ள மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு கிழக்கு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் வீரசூரிய கல்முனை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம். என். எஸ். மெண்டிஸ் மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஷிரான் பெரேரா மற்றும் காரைதீவு விஷேட அதிரடிப்படையினரும் சேர்ந்து 5 போட்டுக்களை ஏற்பாடு செய்து அம்மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
(சம்மாந்துறை மேற்கு தினகரன் நிருபர்)
அடைமழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் 15779 குடும்பங்களைச் சேர்ந்த 62607 பேர் பாதிப்படைந்துள்ளதாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஜே. லியாகத்அலி தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் 5675 குடும்பங்கள் குடும்ப உறவினர்களின் வீடுகளில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். 225 வீட்டுத் தோட்டங்கள், 495 சுயதொழில் முயற்சியாளர்களின் தொழில் நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 25 ஆயிரம் ஏக்கர் விவசாயக் காணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
(பொத்துவில் தினகரன் விசேட நிருபர்)
பொத்துவில் பிரதேசத்தில் அண்மைக் காலமாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக ஆட்டுப் பண்ணைகளிலும், கோழிப் பண்ணைகளிலும் ஆடுகள், கோழிகள் இறந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
(மருதமுனை தினகரன் நிருபர்)
மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதையடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எல். துல்கர் நயீம் அங்கு சென்று நிலமைகளைப் பார்வையிட்டதோடு, பாடசாலை வளவிலிருந்து நீரை வெளியேற்றுவதற்குரிய பொறிமுறைகளை மேற்கொள்வதற்காக 40 ஆயிரம் ரூபாவினை தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்கி வைத்தார்.
இதன் போது கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். ரி. எம். தெளபீக் எம். எஸ். அப்துல் ஜலீல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. எல். சக்காப் ஆகியோரும் வருகை தந்தனர்.
கடந்த காலங்களில் தமது பாடசாலை வெள்ளத்தால் பாதிப்புறுவது குறித்தும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் வித்தியாலய அதிபர் பி.எம். எம். பதுறுதீன் மாகாண சபை உறுப்பினரிடம் விளக்கினார்.
(பெரியநீலவாணை தினகரன் நிருபர்)
அடைமழை காரணமாக கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரவில் இரண்டாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பிரதேச செயலாளர் கே. லவநாதன் தெரிவித்துள்ளார்.
பாண்டிருப்பு மகா வித்தியாலயம், விஷ்ணு வித்தியாலயம், நற்பிட்டிமுனை விபுலானந்தா மகா வித்தியாலயம், பெயரிநீலவாணை விஷ்ண மகா வித்தியாலயம், சேனைக் குடியிருப்பு கணேசா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாண்டிருப்பு பெரிய குளத்திற்கு அருகிலுள்ள மீனவ வீட்டுத் திட்டம் நீரினால் மூழ்கியுள்ளன. கிட்டங்கி நீர் தேக்கம் மற்றும் பெரிய குளம் என்பவற்றின் நீரோட்டம் அதிகரித்திருப்பதனாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டிருப்பு ?|பிட்டிமுனை குளக்கட்டு வீதி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
(காரைதீவு குறூப் நிருபர்)
ஏழை வெள்ளத்தால் 4867 குடும்பங்களைச் சேர்ந்த 14862 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டிருப்பதாக காரைதீவு உதவி பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தெரிவித்தார். 902 குடும்பங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி மூன்று பாடசாலைகளில் தஞ்சமடைந்திருந்தனர்.
90 வீதமான குடும்பங்களின் வீடு வாசல்களில் வெள்ளம் தேங்கி நின்றதை இம்முறை காண முடிந்தது. முன்பெல்லாம் தாழ்நிலப் பிரதேசங்களில் மட்டும் வெள்ளம் ஏற்படும். இம்முறை மேட்டுப் பிரதேசங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
(கல்முனை மத்திய குறூப் நிருபர்)
கல்முனை பிரதேசத்தில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 180 குடும்பங்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளன. இதனைவிட 5000ற்கும் அதிகமான குடும்பங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளன.
சாய்ந்தமருதில் 6348 குடும்பங்களும், கல்முனை தமிழ் பிரிவில் 2510 குடும்பங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
(சென்றல்கேம்ப் குறூப் நிருபர்)
அடை மழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் 4125 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 812 குடும்பங்கள் இடம்பெயர்ந்து மூன்று பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 24 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் நாவிதன்வெளி உதவிப் பிரதேச செயலாளர் எஸ். கரன் தெரிவித்தார்.
12ம் கிராம 1ம் கண்ட 40ம் இலக்க குளம், பொக்கணி குளம், பாசி துரிசு வாய்க்கால் 11ம் கிராம வாய்க்கால் என்பன உடைப்பெடுத்துள்ளதன் காரணமாக வேளாண்மைகள் அழிந்து நாசமாகியுள்ளதாக விவசாய அமைப்பின் தலைவர் எம். எஸ். எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
(காரைதீவு தினகரன் விசேட நிருபர்)
மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் இடம்பெயர்ந்து வரும் மக்களை தங்க வைப்பதிலும் அசெளகரியங்கள் ஏற்பட்டுள்ளன.
இங்குள்ள பல பாடசாலைகள் ஏற்கனவே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு ள்ளதுடன், எஞ்சியிருந்த சில பாடசாலைகளும் தற்போதைய அதிக மழை வீழ்ச்சியினால் பாதிக்கப்படும் அபாயத்தை அடைந்துவருகின்றன. இதனால் இடம்பெயர்ந்து வரும் மக்களை தங்க வைப்பதிலும், பராமரிப்பதிலும் பல தடைகள் ஏற்படுகின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(அட்டாளைசேனை மத்திய நிருபர்)
வெள்ளம் மற்றும் கடுங்காற்று என்பனவற்றினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட் டுள்ளன.
(உக்குவளை விசேட நிருபர்)
இதேவேளை தம்புள்ள நகர பொருளாதார அபிவிருத்தி மத்திய நிலையம் முற்றிலும் மழை நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதால் இங்கு வர்த்தக நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
தினமும் சுமார் 350 - 400 லொறிகள் மரக்கறி மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்திட பொருளாதார அபிவிருத்தி மத்திய நிலையத்திற்கு வருகின்ற போதிலும் நேற்றும், நேற்று முன்தினமும் அபிவிருத்தி மத்திய நிலப் பகுதிகள் மழை நீர் நிரம்பி இருப்பதால் லொறிகளில் பொருட்களை ஏற்றுவதும் இறக்குவதும் சிரமத்துக்குள்ளாகி இருப்பதுடன் அன்றாட கூலித் தொழிலாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு ள்ளனர்.
அதேவேளை மாத்தளை மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக மாத்தளை மாவட்ட மரக்கறி உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டம்
(திருகோணமலை தினகரன், திருமலை மாவட்ட விசேட நிருபர்கள்)
கடந்த 48 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் பெய்த தொடர் மழையை அடுத்து திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மொத்தம் 5815 குடும்பங்களைச் சேர்ந்த 22026 பேர் நேரடியாக வெள்ளப் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
(குச்சவெளி தினகரன் நிருபர்)
திருமலையில் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் வசிப்பவர்களுக்கான சமைத்த உணவுகளை அவ்வப் பிரதேச செயலகங்கள் வழங்கி வருகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளில் வெள்ளம் நிரம்பியுள்ளதால் மாகாண கல்விச் செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கமைவாக மூடப்பட்டுள்ளன.
(மூதூர் தினகரன் நிருபர்)
மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் 3723 குடும்பங்களைச் சேர்ந்த 14,239 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாடசாலை மற்றும் பொது இடங்களில் தங்கியிருப்பதாக மூதூர் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. இம்மக்கள் 28 முகாம்களில் தங்கியுள்ளனர்.
மூதூர் பிரதேசத்தில் கடந்த பல தினங்களாக தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பெருந்தொகையானோர் குடியிருப்புகளில் நீர் தேங்கிய நிலையிலும் இடம்பெயர்ந்துள்ளனர்.
34 பாடசாலைகள் மூதூரில் பூட்டு
மூதூர் பிரதேசத்தில் தொடரும் அடை மழையினால் மூதூர் வலயக் கல்வித் திணைக்களத்துக்குட்பட்ட 81 பாடசாலைக ளுள் 34 பாடசாலைகளில் முழுமையாக இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் நிலையில் யாவும் மூடப்பட்டுள்ளதாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. விஜயானந்தமூர்த்தி தினகரனுக்குத் தெரிவித்தார்.
மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் இரு தினங்களுக்கு மூடுவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதேவேளை 34 பாடசாலைகளில் அடைமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment