12/14/2010

க.பொ.த. (உ/த) பரீட்சை: புனர்வாழ்வு முகாமில் தோற்றிய மாணவருக்கு சிறந்த பெறுபேறுகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குக் தோற்றிய மாணவர்களில் பெரும்பாலா னவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருப்பதாக வடமாகாணக் கல்வி அமைச்சின் உதவிக் கல்விப் பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் பலர் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இம் மாணவர்கள் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயம், முல்லைத்தீவு வித்தியானந்தா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளிநொச்சி இந்துக் கல்லூரி, வட்டக்கச்சி மகாவித்தியாலயம், கிளிநொச்சி சென்திரேசா உள்ளிட்ட பாடசாலைகளின் ஊடாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இவ்வாறு தோற்றியவர்களில் இருவர் மருத்துவ பீடத்துக்கும், ஒருவர் பொறியியல் பீடத்துக்கும் விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருப்பதாக புனர்வாழ்வு ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாக பாலசுப்பிரமணியம் தினகரனுக்கு சுட்க்காட்டினார். வவுனியா தெற்குக் கல்வி வலயத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை விட புனர்வாழ்வளிக்கப்பட்ட மாணவர்களின் பெறுபேறுகள் பன்மடங்கு சிறப்பாக உள்ளன.
அதேநேரம், எந்தவித வசதிகளுமற்ற நிலையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் பலரும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பல்கலைக்கழகக் கோட்டாவில் மருத்துவ பீடத்துக்கு 3 மாணவர்களும், பொறியியல் பீடத்துக்கு 3 மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்.
ஏனைய பாடப் பிரிவுகளிலிருந்தும் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியுள்ளனர். கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர் ஒருவர் கணிதப் பிரிவில் 3 “ஏ” சித்திகளைப் பெற்று பொறியியல் பீடத்துக்கு மெரிட்டீலீ தெரிவாகியுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment