பராமாஸ்டர் என்று அறியப்பட்ட குமாரசாமி பரராசசிங்கம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இடதுசாரி பாரம்பரியங்களில் எஞ்சியிருந்த தோழமைகளில் ஒன்று எமக்கு பிரியாவிடை தந்து மூன்று ஆண்டுகள் சென்றுவிட்டது. இளமைக்காலங்களில் தொழிற்சங்கவாதியாக தனது பொதுவாழ்வை ஆரம்பித்த பராமாஸ்டர் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக தனது 72 வயதின் இறுதி மூச்சுவரை ஓயாது உழைத்தவர். புகலிட இலக்கிய அரசியல் பரப்பில் பரா அய்யா அவர்களின் பங்கு அளப்பரியது. இலக்கியச்சந்திப்பின் தொடர்ச்சி, வளர்ச்சி, சாதனை என்று எதை பட்டியலி;ட்டாலும் இவரது பங்கின்றி அவை சாத்தியமில்லை எனலாம்.. தமிழ் மக்களின் விடுதலை என்பதை ஒரு விரிந்த, பரந்த, அகன்ற ஒரு பார்வையோடு அணுகியவர் அவர். ஐரோப்பிய மட்டத்தில் சந்திப்புக்கள், கூட்டங்கள் என்று எந்தவொரு இடத்திலும் மலையக தோட்ட தொழிலாளர்கள் பற்றிய ஒரு குரல் ஒலிக்கின்றது என்றால் அங்கே பரா அய்யாவின் உருவம்தான் முன்னால் தெரியும். அதே போன்று முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தொடர்ச்சியாக கண்டித்து வந்தவர் இந்த பரராசசிங்கம் அவர்கள். அதுமட்டுமன்றி முஸ்லிம்கள், கிழக்கிலங்கை மக்கள், தலித் மக்கள் என்று தமிழ் சமூகத்துள் விரவிக்கிடக்கும் அகமுரண்பாடுகள் தீர்க்கப்படும் நாள்தான் தமிழ் மக்கள் விடுதலையடையும் நாள் என்று திடமாக கூறி அதை நோக்கியே தனது செயற்பாடுகளை வகுத்து கொண்டவர் அவர். யாழ்மையவாதத்திற்கெதிரான எமது போராட்டத்தின் ஆளுமை மிகு தூண்களிலொன்று சரிந்து விட்டதாகவே அவரது மரணத்தை நாம் உணருகிறோம்.
உண்மைகள்
0 commentaires :
Post a Comment