12/27/2010

கிழக்கில் தொடர்ந்தும் அடைமழை: மட்டு. மாவட்டத்தில் நிலைமைமோசம்; ஒரு இலட்சத்துக்கும் அதிகம் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் கடும் மழையால் மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் 29 ஆயிரத்து 421 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்மழையால் திருகோணமலை மாவட்டமும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 594 குடும்பங்களைச் சேர்ந்த 2,464 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி, கிரான், ஏறாவூர் நகர், வெல்லாவெளி, வாகரை, கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே வெள்ளத்தினால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள சித்தாண்டி-01, சித்தாண்டி-04, பலாச்சோலை, செங்கலடி-02, மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கோரகல்லி மடு, தேவபுரம், முறக்கொட்டாஞ்சேனை, முறுத்தான, ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிச்சிநகர் ஆகிய கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த 2664 பேரும் இக்கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இக்குடும்பங்களுக்கு உடனடியாக சமைத்த உணவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் குறிப்பிட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் கூறினார்.
ஏறாவூர்ப் பற்று, கிரான், வவுணதீவு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரான் பிரதேசத்தில் 4384 குடும்பங்களைச் சேர்ந்த 17358 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர் வீ. தவராசா தெரிவித்தார். இங்கு பூலாக்காடு கிராமத்தில் 133 குடும்பங்களைச் சேர்ந்த 416 பேர் இடம்பெயர்ந்து பாடசாலைக் கட்டடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் 1384 குடும்பங்களைச் சேர்ந்த 5788 பேர் இடம்பெயர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். வண்ணாத்திவில்லு ஆறு திறக்கப்பட்டுள்ளதனால் சித்தாண்டி முருகன் கோயில்வீதி தடைப்பட்டுள்ளது.
சந்திவெளி, சித்தாண்டி, பாலயடிவட்டை, கோரகல்லிமடு, கிரான் போன்ற பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏறாவூர்ப்பற்று செயலாளர் பிரிவில் சுமார் 8 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உதவிப் பிரதேச செயலாளர் கே. சித்திரவேல் தெரிவித்தார்.
சுமார் 800 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ளனர். உதயன்முலை, மதுரங்கட்டு கொலணி ஆகிய கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இடம்பெயர்ந்தவர்கள் சித்தாண்டி மகா வித்தியாலயம், பலாச்சோலை பாடசாலை, கோயில் மடத்திலும் தங்கியுள்ளனர். ஈரளக்குளம், கொம்மாதுறை தீவு பிரதேசங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. படகுச் சேவைகள் இடம்பெறுகின்றன.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில்6640 குடும்பங்களைச் சேர்ந்த 22505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 75 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
வாகரை ஊடான மூதூர் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது- வெருகல், கிருமிச்சை, கதிரவெளி போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கோணேஸ்வரபுரம், புணானை பாடசாலை கட்டடங்களில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ளனர்.
மேலும் ஏறாவூர் நகர், வாழைச்சேனை, காத்தான்குடி, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் எஸ். அருமைநாயகம் கூறினார்.
அக்கரைப்பற்று, கல்முனை, சாய்ந்தமருது முதலிய பிரதேசங்களிலுள்ள உள்வீதிகளில் அதிகமான வெள்ள நீர் தேங்கி நிற்கின்ற காரணத்தால் வாகனமோட்டிகளும் பாதசாரிகளும் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேசங்களில் சில இடங்களில் நெற்காணிகள் நீரில் மூழ்கியுள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது.
மழை நீடித்தால் நெல்வயல்கள் நீரில் மூழ்கிவிடலாம் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைய வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்க சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும் மட்டு.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி மட்டு. மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவருகின்ற மழை காரணமாக பாதிக்கப்பட்ட கோறளைப்பற்று மேற்கு, கோறளை மத்தி பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 7847 குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சரின் இணைப்பாளர் எம்.எம். அகமட் தெரிவித்தார். அதேநேரம் திருகோணமலை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் பெய்துவரும் அடைமழை காரணமாக புல்மோட்டைப் பிரதேசத்தில் 280 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளன.
புல்மோட்டை அறபாத் நகர், கைரியா நகர், தக்வாநகர், பீலியடி, கமாஸ்நகர், ஜின்னாபுரம் கரையோரப்
டு வெளியேறியுள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவையாளர் தாஜுதீன் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் கிராம சேவையாளர் தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment