இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிரித்தானியாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளன.
ஆனால் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றுவதற்காகச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது உரை ரத்துச் செய்யப்படுவதாக ஒக்ஸ்போட் யூனியன் அறிவித்திருந்தது,
இந்தச் சம்பவம் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பான ஒரு சூழலை ஏற்படுத்தியிருந்ததுடன், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகிய விமல் வீரவன்சவின் தலைமையில் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் எதிரில் பிரித்தானியாவுக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது. இதே போன்றதொரு ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் எதிரிலும் நடைபெற்றிருந்தது.
நாடு திரும்பிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அமைச்சர்கள், ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலராலும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழர் பிரதேசமாகக் கருதப்படுகின்ற, விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நகரங்களிலும் ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடத்தப்பட்டிருக்கின்றது.
முல்லைத்தீவு நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து தண்ணீர்த் தாங்கி வரையில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றிருக்கின்றது.
0 commentaires :
Post a Comment