இலங்கைக்கும், இந்தியாவிற்குமான கடல் வழிப் போக்குவரத்து என்பது இன்று நேற்றைக்கு ஏற்பட்டதல்ல. புராண காலம் தொட்டே இரு நாடுகளுக்கும் இடையில் கடல் வழி போக்குவரத்து நிலவி வந்துள்ளது.
ராமாயண காலத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து தான், வானரப் படைகள் அமைத்த பாலத்தின் வழியாக ராமன் இலங்கை சென்றதாக புராணம் கூறுகிறது. பெரும் கப்பற்படையை கொண்டிருந்த சோழ மன்னர்கள், கடல் வழியாக இலங்கைக்கு படையெடுத்துச் சென்றனர் என்று வரலாறு எடுத்துரைக்கிறது.
இந்த கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தின் போதும் இந்தியா- இலங்கைக்கு இடையே கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையே 1914 ம் ஆண்டு கப்பல் போக்குவரத்து தொடங்கியது. சரியாக, 50 ஆண்டுகள் நடந்து வந்த இந்த கடல் வழிப் போக்குவரத்து, 1964ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
கடந்த 1964ம் ஆண்டு வீசிய புயலுக்கு முன்வரை சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடிக்கு ‘இந்தோ- சிலோன் போட் மெயில்’ என்ற பெயரில் ஒரு ரயில் இயங்கி வந்தது. எழும்பூரில் இருந்து தனுஷ்கோடி வரை பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்து, பின் தனுஷ்கோடியில் இருந்து கப்பல் மூலம் இலங்கை சென்று வந்தனர்.
அந்த காலத்தில், தெற்கு ரயில்வே நிர்வாகமே தனுஷ்கோடிக்கும் தலை மன்னாருக்கும் இடையே எஸ். எஸ். கோஷன் மற்றும் எஸ். எஸ். எர்வின் என்ற இரண்டு நீராவிக் கப்பல்களை இயக்கியது.
இந்தோ, சிலோன் போட் மெயில் மூலம், தனுஷ்கோடி செல்லும் பயணிகளுக்கு கடவுச்சீட்டு மற்றும் அனுமதி ஆகியவை தனுஷ்கோடி ரயில்வே நிலையத்திலேயே வழங்கப்பட்டன. போட் மெயில் மூலம் தனுஷ்கோடி செல்லும் பயணிகள், தனுஷ்கோடி ரயில்வே நிலையத்தில் இறங்கியதும், அவர்களிடம் குடியுரிமை மற்றும் சுங்கச் சோதனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து பயணிகள் கப்பல் மூலம் தலைமன்னார் சென்றனர். இந்த கப்பல் போக்குவரத்தானது தமிழகத்தை சேர்ந்தர்கள் குறைந்த கட்டணத்தில் இலங்கை சென்று வருவதற்கு பேருதவியாக இருந்தது. கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 17ம் திகதி வங்கக் கடலில், தெற்கு அந்தமான் அருகே ஒரு வலிமையான புயல் சின்னம் உருவாகியது. 19ம் திகதி இந்த புயல் மேலும் வலிமை பெற்று, தெற்கு நோக்கி நகர்ந்தது. 22ம் திகதி இலங்கையின் வவுனியா அருகே, மணிக்கு 250 கி. மீ வேகத்தில் இந்த புயல் கரையை கடந்தது.
இதனால் ராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடியும், புயலின் கோர தாக்குதலுக்கு உள்ளானது. அந்த ஆண்டு டிசம்பர் 22, 23ம் திகதிகளில் இப்புயல் தனுஷ்கோடியை பயங்கரமாக தாக்கியது.
22ம் திகதி இரவு 11.55 மணிக்கு பாம்பனில் இருந்து 110 பயணிகளுடனும், ஐந்து ஊழியர்களுடனும் புறப்பட்டு தனுஷ்கோடி நோக்கி வந்துகொண்டிருந்த பாம்பன், தனுஷ்கோடி பயணிகள் ரயில் தனுஷ்கோடி ரயில்வே நிலையத்துக்குள் நுழைய சில நூறு அடிகள் தூரமே இருந்த நிலையில், மிகப் பெரிய ஒரு அலை அதைத் தாக்கியது. இதில் அந்த ரயில் சூறையாடப்பட்டு, அதில் பயணம் செய்த 115 பேரும் இறந்து போயினர். தனுஷ்கோடியைக் கொடூரமாகத் தாக்கிய அந்த புயல், ஒட்டுமொத்த ஊரையே தரைமட்டமாக்கிவிட்டு சென்றது.
இதைத் தொடர்ந்து சென்னை மாகாண அரசு தனுஷ்கோடியை ‘மறைந்த நகரம்’ என்று அறிவித்தது. அந்த காலகட்டத்தில் தனுஷ்கோடி அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு பிரசித்தி பெற்ற நகரமாக இருந்தது. ஹோட்டல்கள், புடவை, நகை கடைகள் தர்ம சத்திரங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என பல்வேறு நிறுவனங்கள் தனுஷ்கோடிக்கு வந்த ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் சேவை செய்து வந்தன.
ஆனால், 1964ம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதி இரவு வீசிய புயல் இந்த குட்டி தீவின் பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்து கட்டுமானங்களையும் நாசப்படுத்திவிட்டு சென்ற புயலுக்கு பின் ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
இந்திய கப்பல் கூட்டுத்தாபனம் எம். வி. ராமானுஜம் என்ற கப்பலை இலங்கை- இந்தியா இடையே இயக்கி வந்தது. சிறு வியாபாரிகளுக்கு இந்த கப்பல் போக்குவரத்து பெரும் பயன் அளித்து வந்தது. ‘திரைகட லோடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழிக்கேற்ப பல்வேறு வகையான வணிகர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் இலங்கை சென்று பெரும் பொருள் ஈட்டி வந்தனர்.
இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் பொருளாதார மற்றும் வியாபார வளர்ச்சி சிறப்பாக இருந்தது. ஆனால் இலங்கையில் தீவிரமடைந்த உள்நாட்டு போரினால் இந்த கப்பல் போக்குவரத்தும் 1983ம் ஆண்டில் முடிவிற்கு வந்தது.
ராமேஸ்வரம் தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து நடந்து வந்த காலத்தில் பயணம் மேற்கொண்ட பொள்ளாச்சியை சேர்ந்த முருகேசன் கூறுகையில், “1980ம் ஆண்டு நானும், எனது நண்பர்களும் குடும்பத்துடன் இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொண்டோம்”. திண்டுக்கலில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் மூலம் சென்றடைந்தோம்.
ராமேஸ்வரம் ரயில்வே நிலையத்தில் இறங்கியவுடன், அங்குள்ள பயணச்சீட்டு கருமபீடத்தில் இலங்கை செல்வதற்கான கப்பல் பயணச்சீட்டு வழங்கப்பட்டது. பயணச்சீடை பெற்றுக்கொண்டவுடன், குடியுரிமை, சுங்கச் சோதனை நடந்தது. நாங்கள் முதல் வகுப்பில் (அப்பர் டெக்) பயணம் செய்வதற்கான பயணச்சீட்டை வாங்கியிருந்தோம்.
பயணச்சீட்டின் விலை ரூ. 60 மட்டுமே. கப்பலில் ஏறியதும் 3.30 மணி நேரத்தில் தலைமன்னார் சென்றடைந்தோம். கப்பலில் நல்ல உணவகம் இருந்தது “சைவ, அசைவ உணவுகள் தாராளமாக கிடைத்தன. குடிநீரைத் தவிர மற்றவை விலை கொடுத்து வாங்கினோம். கப்பலின் மேல் தளத்தில் இருந்து கடலை பார்த்து ரசித்தது ஒரு சுகமான அனுபவம். தலைமன்னார் சென்றடைந்ததும்.
அங்கு தயாராக நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறி, கொழும்பு நகரைச் சென்றடைந்தோம். “இலங்கையின் பல்வேறு நகரங்களை 10 நாட்களுக்கு மேலாக சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் கப்பல் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தோம். இந்த பயணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது என்றார்.
அந்த காலத்தில் இலங்கைக்கான கப்பல் போக்குவரத்து குறித்து திண்டுக்கல்லை சேர்ந்த முருகேசன் கூறுகையில், “50 ஆண்டுகளுக்கு முன் என் தந்தை, மாமா ஆகியோர் இலங்கைக்குச் சென்று தங்க நகைத் தொழில செய்து வந்தனர். அந்தக் காலகட்டத்தில் வெளிநாடு செல்வது என்பது மிகவும் பெரிய விஷயமாக கருதப்பட்டது.
‘அவர்கள் செல்லும் போதும், திரும்பும்போதும் உறவினர்கள் எல்லாரும் சென்று அவர்களை ரயில்வே நிலையத்தில் வழியனுப்புவதும், வரவேற்பதும் வழக்கம். என் தந்தை இலங்கையில் இருந்து வருகிறார் என்றவுடன், நாங்கள் அனைவரும் ரயில்வே நிலையத்துக்குச் சென்று காத்துக்கொண்டிருப்போம். ‘போட் மெயில் ரயிலில் முதல் வகுப்பில் அவர் வந்து இறங்குவார்.
அவரைக் குதிரை வண்டியில் ஏற்றி, வீட்டிற்கு அழைத்து வருவோம். எங்களுடன் அவர் இருக்கும் நேரங்களில் கப்பல் பயணத்தை பற்றி பல்வேறு சுவையான தகவல்களை கூறுவார். ‘ராயிலுக்கு பயணச்சீட்டு எடுத்தாலே, அதில் கப்பலிலும் பயணம் செய்யலாம் என்று அப்போது இருந்தது. பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.
தற்போது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல விரும்புபவர்கள் விமானம் மூலம் மட்டுமே செல்ல முடியும். சென்னை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து இலங்கைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து கொழும்பு செல்ல சிக்கன வகுப்பில் 7,300 ரூபாயும், உயர் வகுப்பில் 11 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இது ஒரு வழிக்கட்டணமே. சென்றுவர குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால், விரைவில் தொடங்கவுள்ள கப்பல் போக்குவரத்தின் மூலம் மிகவும் குறைவான கட்டணத்திலேயே சுற்றுலா பயணிகள் இலங்கை சென்று வரலாம். விமானக் கட்டணத்தை காட்டிலும் பல மடங்கு குறைவாகவே கப்பல் கட்டணம் இருக்கும்.
இலங்கை- இந்தியா இடையேயான கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதால், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி- கொழும்பு கப்பல் போக்குவரத்து தொடங்க வசதியாக, தூத்துக்குடி துறைமுகத்தில் 1.5 கோடி ரூபா செலவில் பயணிகளுக்கான அறை புதுப்பிக்கப்பட்டு அங்கு 400 பேர் வரை அமர சொகுசு இருக்கைகள் போடப்படவுள்ளன. இப்பணிகள் அனைத்தும், இம்மாதம் இறுதிக்குள் முடிக்கப்படுமென, தூத்துக்குடி துறைமுக துணைத் தலைவர் சுப்பையா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, துறைமுகத்திற்குள் கிரீன் கேட் மற்றும் புளுகேட் இடைப்பட்ட பகுதியில், 1.5 கோடி ரூபாய் செலவில் ஏற்கனவே கட்டப்பட்ட கப்பல் பயணிகளுக்கான அறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அங்கு, ஒரே நேரத்தில் 300 முதல் 400 பேர் வரை அமரலாம்.
கப்பல் போக்குவரத்து அறைக்கான தளம் அமைக்கும் பணி முடிந்து விட்டது- 15 நாட்களில் கடலோரக் காவல் படை, மத்திய உளவுத்துறை, சுங்கத்துறை, துறைமுக அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை நடத்தி, அவர்களுக்கு பாதுகாப்பிற்கு எந்த மாதிரியான வசதிகள் செய்துதர வேண்டுமென கேட்கப்பட்டு, அவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கட்டமைப்பு பணிகள் அனைத்தையும் வரும் 31ம் திகதிக்குள் முடிக்க வேண்டுமென திட்டமிட்டு அதற்காக செயற்பட்டு வருகிறோம். கப்பலில் வரும் பயணிகள் தூத்துக்குடி நகருக்குள் செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் அதுபோல, கப்பலில் செல்லும் பயணிகளை ஏற்றிவருவோரின், கார்களை நிறுத்த தனியாக இடமளிக்கப்படும். மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன் கூறியுள்ளது போல, மூன்று மாதத்தில் இக்கப்பல் போக்குவரத்தைத் தொடங்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு சுப்பையா கூறினார்.
தூத்துக்குடி- கொழும்பு இடையே 152 கடல்மைல் தூரம் உள்ளது. இங்கிருந்து 12 மணி நேரத்தில் கொழும்பு செல்லலாம். விமானக் கட்டணத்தை விட, கப்பல் கட்டணம் குறைவாகவே இருக்கும். பயணக்கட்டணம் எவ்வளவு, ஒரு கப்பலில் எந்தனை பேர் செல்வர். ஒரு வாரத்திற்கு எத்தனை கப்பல்கள் இயக்கப்படுமென்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.
0 commentaires :
Post a Comment