வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்திலிருந்து 2006 ஆம் ஆண்டின் இடப்பெயர்வின் போது காணாமற்போய் தற்போது தமிழ்நாடு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பஞ்சலோகத்திலான முருகன் சிலையை மீண்டும் கொண்டு வருவதற்கான ஆவணங்களை தேவஸ்தான குழுவினர் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து அவரிடம் கையளித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் வெ.இராதாகிருஷ்ணனின் ஏற்பாட்டில் வார இறுதியில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தேவஸ்தான பரிபாலனசபையின் தலைவர் த.சிதம்பரப்பிள்ளை டாக்டர் குணநாயகம் இளஞ்செழியன் கந்தையா நடேசபிள்ளை ஆகியோர் ஆலயத்தின் சார்பில் கலந்துகொண்டனர். ஆவணங்களைப் பெற்றுக்கொண்ட இந்தியத் தூதரக அதிகாரிகள் தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் முருகன் சிலையைப் பெற்றுத்தருவதற்கான இயன்ற உதவிகள் அனைத்தையும் மேற்கொள்வதாக உறுதியளித்ததாக ஆலய பரிபாலன சபையின் தலைவர் சிதம்பரப்பிள்ளை தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற அனர்த்தங்களின் போது வெருகல் பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். அவ்வேளையில் முருகன் சிலையும் வேறுபல பொருள்களும் ஆலயத்திலிருந்து காணாமற் போயின.
இடம்பெயர்ந்த மக்கள் வெருகலுக்கு மீண்டும் திரும்பிவந்த போது ஆலயத்தில் முருகன் சிலையும் மற்றும் ஆலயப் பொருட்களும் காணப்படவில்லை. காணாமற்போன சிலை பின்னர் தமிழ்நாட்டில் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வந்ததையடுத்து ஆலய பரிபாலன சபையினர் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கவனத்திற்குக் கடிதம் மூலம் கொண்டு வந்தனர்.
பின்னர் இது பற்றி தமிழக பொலிஸ் அதிகாரிகள் ஊடகங்கள் மூலம் கருத்துத் தெரிவிக்கையில்;
முருகன் சிலை பற்றிய உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் சிலையை திருப்பிக்கொடுக்க முடியும் என்று தெரிவித்திருந்தனர். அதனையடுத்தே இப்போது ஆலய நிர்வாகசபையினர் உரிய ஆவணங்களைக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் கையளித்துள்ளதாகப் பரிபாலன சபைத் தலைவர் சிதம்பரப்பிள்ளை தெரிவித்தார்
0 commentaires :
Post a Comment