12/08/2010

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜுலியன் அசாங்கி பிரிட்டன் பொலிஸாரிடம் சரண்

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜுலியன் அசாங்கி பிரிட்டன் பொலிஸாரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக அவரின் சட்டத்தரணிகள் தெரிவித்தனர். இராணுவ இரகசியங்களை இணையத் தளங்களில் வெளியிட்டதனால் பல நாடுகளால் தேடப்படும் இவர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகங்களிலீடுபட்டதற்காக ஜுலியன் அசாங்கியை சுவீடனுக்கு நாடு கடத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் கேட்டுள்ளது. சுவீடனிலிருந்த காலத்தில் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறி கடந்த நவம்பர் 18ல் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் இரகசியமாக சுவிடனைவிட்டும் இவர் தப்பி வந்துள்ளார். தற்போது ஜுலியன் அசாங்கி பிரிட்டனில் மறைவாக உள்ளாரென வெளியான செய்தியை நிராகரித்த அவரின் சட்டத்தரணிகள் விரைவில் இவரை பிரிட்டன் பொலிஸார் முன் கொண்டு வருவோம் எனக் கூறினர். பிரிட்டனில் பொலிஸாரைச்சந்திக்கும் ஏற்பாடுகள் திங்கட்கிழமை இடம்பெற்றன.
சுவீடன் அரசாங்கத்தால் சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை நிராகரித்த விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜுலியன் அசாங்கி இவை அரசியல் நோக்கம் கொண்டவை என்றார். இது இவ்வாறுள்ள நிலையில் இவரின் வங்கிக் கணக்குகளையும் சுவீடன் அரசாங்கம் மூடியுள்ளது. போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து இவர் வங்கிக் கணக்குகள் திறந்தார் என்ற மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
இவரைக் கைது செய்ய ஏற்கனவே சுவீடன் அரசாங்கம் சர்வதேச பொலிஸாரிடம் பிடியாணை வழங்கியது. ஆனால் போதிய ஆதாரமின்றி ஜுலியன் அசாங்கியை கைது செய்ய முடியாதென பிரிட்டன் அரசாங்கம் அறிவித்தது. தற்போது பிரிட்டன் பொலிஸாரை இவர் சந்திக்கவுள்ளார்.

0 commentaires :

Post a Comment