12/24/2010

வெலிகந்தை வாவியில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி கண்டியிலிருந்து சுற்றுலா வந்தவர்கள் விபத்தில் சிக்கினர்

வெலிகந்தை மகசேன்புர வாவியில் படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் மரணமடைந் துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று காலை இடம் பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி கூறினார். இவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளது.
கண்டி கெலிஓய பகுதியில் இருந்து சுற்றுலா வந்தவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் பயணித்த படகு வாவியின் நடுப் பகுதியில் கவிழ்ந்துள்ளது. அப் பிரதேச மக்கள், பொலிஸார் மற்றும் சுழியோடிகள் இணைந்து தேடுதல் நடத்தியதில் முதலில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.
தொடர்ச்சியாக நடத்திய தேடுதலையடுத்து படகில் பயணித்த ஏனைய நால்வரினதும் சடலங்கள் பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். நான்கு பெண்களும் இரு ஆண்களுமே இவ்வாறு இறந்துள்ளனர்.
இறந்தவர்களின் சடலங்கள் வெலிகந்தை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றிருவர் உறவினர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.
இறந்தவர்களில் ஒருவர் வெலிகந்தை பிரதேசத்தைச் சேர்ந்த படகு ஓட்டி எனவும் அறிவிக்கப்படுகிறது. 2 1/2 வயது சிறுவன் ஒருவனும் இதில் இறந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
பாடசாலை விடுமுறை என்பதால் பொது மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். பாதுகாப்பற்ற இடங்கள், நீர் வீழ்ச்சிகள், வாவிகள் என்பவற்றில் பயணம் செய்ய வேண்டாமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளதை பொருட்படுத்தாது செல்வதாலேயே இத்தகைய விபத்துக்கள் நேரிடுவதாக பொலிஸார் கூறினர். கடும் மழை சீரற்ற கால நிலை என்பவற்றுக்கு மத்தியில் படகில் சென்றதாலே இந்த படகு விபத்து சம்பவித்துள்ளது.
வெலிகந்தை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்துகின்றனர்.

0 commentaires :

Post a Comment