11/13/2010

மத்திய அரசுக்கு ஆதரவளிக்கத் தயார் ஜெயலலிதா திடீர் அறிவிப்பு

மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்க தயார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய மந்திரி ஆ. ராசா மீது நடவடிக்கை எடுத்தால் தி.மு.க. எம்.பி.க்கள் 16 பேரின் ஆதரவை இழந்து அதன் காரணமாக ஆட்சியை இழக்க நேரிடும் என்று கருதி காங்கிரஸ் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதாக கருதுகிறேன்.
காங்கிரசுக்கு அத்தகைய அச்சம் தேவை இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. விலகினால், ஆட்சி நீடிக்க 16 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. அ.தி.மு.கவுக்கு 9 எம்.பி.க்கள் உள்ளனர். எங்கள் எம்.பி.க்களுடன் மேலும் கருத்து ஒற்றுமை கொண்ட பிற கட்சிகளைச் சேர்ந்த 9 எம்.பி.க்களின் ஆதரவை திரட்டி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை என்னால் காப்பாற்ற முடியும். இதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சு நடத்தி இருக்கிறேன். ஆனால் அந்த கட்சிகள் எவை என்பதை இப்போது என்னால் கூறமுடியாது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீடிக்க அ.தி.மு.க அளிக்கும் ஆதரவுக்கு நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டோம். மந்திரி பதவியும் கேட்க மாட்டோம்.
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. காங்கிரஸ் உறுதியாக இருந்து நடவடிக்கை எடுத்தால், காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழாமல் இருப்பதற்கான வழியை என்னால் காட்ட முடியும். நாடு இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.
காங்கிரஸ் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மேலும் சிதைந்து விடாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்று அந்த கட்சி கருதினால் ராசாவை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வளவுக்கு பிறகும் காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த பிரச்சினை வீதிக்கு கொண்டு செல்லப்படும். தனிப்பட்ட முறையில் நானே இந்த பிரச்சினையை முன்னெடுத்து செல்வேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

0 commentaires :

Post a Comment