கடந்த முப்பது வருடகால யுத்தத்தால் உறவுகள் சீர்குலைந்து போயிருக்கும் தமிழ் - முஸ்லிம் - மலையக -சிங்கள எழுத்தாளர்களிடையே ஒரு பகைமறுப்புக் காலத்தைத் தோற்றுவிக்கவும் இலங்கையில் தமிழ்மொழி இலக்கியத்தைச் செழுமைப்படுத்துவதற்கான ஓர் எத்தனமாகவும் பல்வேறு கருத்து - அரசியல் நிலைப்பாடுகளிலிருக்கும் எழுத்தாளர்களிடயே ஓர் ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்திக்கொடுக்கும் களமாகவும் நாங்கள் இந்த மாநாட்டைக் கருதுகிறோம்.
அயல்நாட்டு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்கும் இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே சிந்தனைப் பரிமாறலை சாத்தியப்படுத்துவதோடு அவர்கள் எதிர்காலத்தில் இணைந்து பல்வேறு இலக்கியப் பணிகளை முன்னெடுக்கவும் இந்த மாநாடு வாய்ப்பளிக்கும் எனக் கருதுகிறோம்.
மாநாட்டு அமைப்பாளர்கள் முன்வைத்திருக்கும் 12 முன்னோக்குகளும் மிகச் சரியானவை எனவும் அவை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நன்மைகளைச் சாதிக்கவல்லவை என்றும் கருதுகிறோம்.
இந்த மாநாடு இலங்கை அரசால் நடத்தப்படவில்லை என மாநாட்டு அமைப்பாளர்கள் பலதடவைகள் ஊடகங்களில் உறுதிமொழிகளை அளித்துள்ளார்கள். இம்மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்குமான தொடர்புகள் இதுவரை எவராலும் நிரூபணம் செய்யப்படவில்லை. மாநாடு மீது இவ்வாறு ஆதாரமில்லாத அவதூறுகளைச் சுமத்திய எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையையும் 'குமுதம் ரிப்போர்டர்' இதழையும் 'புதிய ஜனநாயகம்' இதழையும் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம்.
இந்த மாநாட்டை நிராகரிக்கக்கோரி "சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் -கலைஞர்கள"; என்ற பெயரால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை நாங்கள் முற்று முழுவதுமாக நிராகரிக்கிறோம். இந்த மாநாட்டை இலங்கை அரசு பயன்படுத்திக்கொளளக் கூடும் என்ற ஊகமே அவர்களது அறிக்கையின் மையம். இந்த ஊக அரசியல் மலிவானது. ஊகத்தை முன்னிறுத்தியே ஒரு ஆக்கபூர்வமான மாநாட்டை அவர்கள் நிராகரிக்கக் கோருவது அநீதியானது. மாநாடு அரசு சார்பாக மாறாதவரை ஊகத்தின் அடிப்படையில் அதை நிராகரிக்கக் கோருவது நியாயமற்றது எனக் கருதுகிறோம்.
இன்று இலங்கையில் ஊடகச் சுதந்திரம் அரசால் கடுமையாக அச்சுறுத்தலிற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இவ்வாறான ஒரு மாநாடு தேவையா என எழுப்பப்படும் எதிர்ப்புகளையும் நாம் நிராகரிக்கிறோம். இந்த அச்சுறுத்தல் சூழலுக்குள்ளும் அதை எதிர்கொண்டு மாநாடு நடத்தப்படுவதையும் குழு நிலை மோதல்களிற்கு அப்பால் அரசியல் உண்மைகளைப் பேசுவதற்கு மாநாட்டில் தடையில்லை என அறிவித்திருக்கும் மாநாட்டு அமைப்பாளர்களின் நிலைப்பாட்டையும் வரவேற்கிறோம்.
கடந்த முப்பது வருட யுத்தத்தில் இலங்கை அரசு செய்த அனைத்துக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியும் இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால் அதற்காக இலங்கையில் எந்த நிகழ்வுகளையுமே நடத்தக் கூடாது எனச் சொல்லப்படும் கருத்துகளை நாங்கள் மறுக்கிறோம். குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை நோக்கி நடத்தப்படும் மாநாட்டை நடத்தக்கூடாது எனச் சட்டாம்பிள்ளைத்தனம் செய்பவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இலங்கையில் மாநாடு நடத்துவது எமது பிறப்புரிமை. முப்பது வருடகால யுத்தத்தில் எழுத்தாளர்கள் கலைஞர்களிடமிருந்து இலங்கை அரசாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இன்னபிற ஆயுதக் குழுக்களாலும் பறிக்கப்பட்ட கருத்து - எழுத்து உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய நெடிய போராட்டம் எம்முன்னே உள்ளது. அந்த நெடிய பாதையில் இவ்வாறான ஒரு மாநாடு நடைபெறுவது ஒரு முன்னேற்றகரமான புள்ளியென்றே கருதுகிறோம்.
இலங்கையின் எல்லாச் சமூகத்தளங்களிலும் இருந்தும் எழுத்தாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்க வேண்டுமென விரும்புகிறோம். குறிப்பாக தலித்துகள், பெண்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் போன்ற விளிம்புநிலையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் எழுத்தாளர்கள் மாநாட்டில் முன்நிலைப்படுத்தப்பட வேண்டுமென மாநாட்டு அமைப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த மாநாட்டிற்கு புலமைசார் பங்களிப்பையும் தார்மீக ஆதரவையும் வழங்குமாறு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
தோழமையுடன் ராகவன்.
0 commentaires :
Post a Comment