11/19/2010

ஜனாதிபதியின் பதவியேற்பு இன்று கொழும்பில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாண தேசிய நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் இன்று (19) மிகக் கோலாகலமாக நடைபெறுகிறது.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெறும் இந்தத் தேசிய நிகழ்வில் மகா சங்கத்தினர், மதத் தலைவர்கள், உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரமுகர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொள்கின்றனர்.
இன்று காலை 10 மணிக்குள்ள சுபவேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் பதவி ஏற்பதை முன்னிட்டு அரசியல் தலைவர்களும் உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை அனுப்பி வைத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு நேரடியாக வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக 40 இராஜதந்திரப் பிரதிநிதிகள் அடங்கலாக 150 பிரமுகர்கள் இலங்கை வந்துள்ளனர்.
பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டு காலி முகத்திடல் முதல் நாடெங்கும் விழாக்கோலம் பூண்டுள்ளது. காலி முகத்திடலில் இன்று முப்படையினரினதும் பொலிஸாரினதும் அணி வகுப்பு மரியாதையும் மற்றும் போர்த்தளபாட பேரணியும் நடைபெறுகின்றன.
இந்த விழாவையொட்டி கொழும்பு கோட்டைக்கான பொதுப் போக்குவரத்து இன்று காலை ஆறு மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை தடைசெய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அமைந்துள்ள அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு 1 - 4 வரையிலான பகுதிகளிலுள்ள சகல பாடசாலைகளும் இன்று மூடப்படுகின்றன.
ஜனாதிபதியின் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்பதற்காக சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஷாங் குவேய் மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஹியூ ஷாங்குவே உள்ளிட்ட பத்துப்பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் (17) இலங்கை வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஏனைய பிரதிநிதிகள் நேற்று வந்தனர். பூட்டான் பிரதமர் லியோன்சென் ஜிக்மி தின்லே மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட 18 பேர் கொண்ட குழுவும் பாகிஸ்தான் செனட் சபையின் தலைவர் ஃபாரூக் ஹமீத் மற்றும் அவரது பாரியார் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.
பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டு இராஜாங்க அமைச்சர் சலீம் மான்ட்விவல்லா, மாலைதீவு ஜனாதிபதியின் விசேட தூதுவர் இப்றாஹிம் ஹுசேன், மாலைதீவு ஜனநாயக கட்சியின் தலைவர் மாரியா அஹமட், அந்நாட்டு சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான மூசா மானிகு ஆகியோரும் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வை முன்னிட்டு நாடு முழுவதும் மத வைபவங்களும் நடைபெறுகின்றன. அதேநேரம் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.
நாட்டின் தேசிய ஐக்கியத்தையும் அபிவிருத்தியையும் முன்னிலைப்படுத்தும் கண்காட்சி ஒன்றினைத் தகவல், ஊடகத்துறை அமைச்சு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்துள்ளது. நேற்று முன்தினம் (17) பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சியை நாளை (20) வரை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் கண்டுகளிக்க முடியும்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி பதவியேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஓராண்டுக்கு முன்னதாகத் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரைக் கேட்டுக் கொண்டார்.
இதற்கிணங்க புதிய தேர்தலுக்கான அறிவிப்பு 2009 நவம்பர் 23ம் திகதி அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் 17 இல் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 2010 ஜனவரி 26 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட ஜனாதிபதி 60,15,934 வாக்குகளைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றியீட்டினார். அளிக்கப்பட்ட வாக்குகளில் 57.88% ஐப் பெற்ற அவர் எதிரணி வேட்பாளரைவிடவும் சுமார் 19 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்றார்.

0 commentaires :

Post a Comment