பர்மாவில் தேர்தல் |
பர்மாவில் இரு தசாப்தங்களுக்குப் பிறது முதல் தடவையாக பொதுத் தேர்தல் நடந்தது.
இராணுவ ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய பெரிய இரு கட்சிகள் தான் இதில் பெரும்பாலான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.
எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இதில் பங்கேற்பதில் பெரும் தடைகளை எதிர்கொள்கிறார்கள். வாக்கு மோசடிகள் குறித்தும் அவர்கள் புகார் செய்துள்ளனர்.
இந்த தேர்தலை புறக்கணிக்கின்ற முக்கிய எதிர்க்கட்சியான, ஆங் சான் சூ சி தலைமையிலான ஜனநாயகத்துக்கான முன்னணி, மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுள்ளது.
பல வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு மிகவும் சொற்பமாகவே இருந்ததாக பர்மாவின் பெரிய நகரான ரங்கூனில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
ரங்கூனுக்கு அருகே தளமமைத்துள்ள படைகளின் ஒரு சிப்பாய் பிபிசியுடன் பேசுகையில், பத்து இராணுவ ரெஜிமெண்டுகளைச் சேர்ந்த படையினர் தேர்தலில் வாக்களிக்க மறுத்துள்ளதாக கூறினார்.
வாக்களிப்பு நடந்த போதிலும் ரங்கூனின் தெருக்கள் வெறுச்சோடியே கிடந்தன. பெரிய ஆர்ப்பாட்டம் எதுவும் இன்றி வாக்களிப்பு நிலையங்கள் திறந்து மூடப்பட்டன. 20 வருடங்களுக்கு பிறகு ஒரு வாய்ப்பாக இது இருக்கின்ற போதிலும் மக்கள் மத்தியில் எந்தவிதமான உற்சாகத்தையும் காணமுடியவில்லை.
வாக்களித்துவிட்டு வந்த ஒருவர் கூறுகையில், தான் மிகவும் முன்னதாகவே வாக்களிக்கச் சென்றதாகவும், வாக்களிப்பு நிலையம் பெரிதும் வெறுமனேயே கிடந்ததாகவும் கூறினார்.
ஆனால், இந்த பிரச்சினைகளுக்கு மத்தியிலும், சில ஜனநாயக ஆதரவுக்கட்சிகள் இந்த தேர்தலில் போட்டிபோடத்தான் செய்கின்றன.
பர்மாவின் பல சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகளும் இதில் போட்டியிடுகிறார்கள்.
ஒரு சிறிய மாற்றத்துக்கான வாய்ப்பையாவது இந்தத் தேர்தல் தராதா என்பது அவர்களது எதிர்பார்ப்பு.
0 commentaires :
Post a Comment