வடக்கு ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு 416 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை பெற்றுக் கொடுக்க இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தமொன்று ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று (26) கைச்சாத்திடப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பின் பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கிற்கான புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் மூன்று கட்டங் களாக இடம்பெறவுள்ளன. மடு முதல் தலைமன்னார் வரையும் மதவாச்சியிலி ருந்து மடு வரையும் மற்றும் ஓமந்தையில் இருந்து பலாலி வரையும் பூர்த்தி செய் யப்படவுள்ளன.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த வர்களுக்கான 50,000 வீடமைப்புச் செயற் திட்டத்திற்காக ஆவணங்களை நிதியமை ச்சின் செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர மற்றும் இந்திய எக்சிம்
வங்கியின் முகாமையாளர் ஆகியோர் பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது. ஜனாதிபதிக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக இடம் பெற்றதுடன், இலங்கை ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு இந்திய வெளியுறவு அமைச்சர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
தற்போது துரித முன்னேற்றம் கண்டுள்ள இடம் பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றும் பணி தொடர்பாகவும் ஜனாதிபதி இதன் போது இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தெளிவுபடுத்தினார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிறந்த நட்புறவுகள் பேணப்படுவதாகவும், தற்போது காணப்படும் சூழ்நிலையானது அதனை மேலும் பலப்படுத்த உதவுமெனவும் இந்திய அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
பயங்கரவாதம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகள், அந்தப் பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக இரண்டு தரப்பினரும் திருப்தியடைந்துள்ளமை இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்திய கொன்சியுலர் ஜெனரல் காரியாலயங்கள் இரண்டு முறையே இன்றும் நாளையும் திறக்கப்படுவதுடன், வடக்குப் புகையிரப் பாதையின் நிர்மாணம் தொடர்பான ஞாபகார்த்த பலகை நாளை திரை நீக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன் வீடமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்வும் நாளை அரியாலையில் இடம்பெற உள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எல். எம். கிருஷ்ணா, இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ் ஆகியோர் இந்தியா சார்பிலும், வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், மின்சாரம் மற்றும் வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, வெளியுறவு அமைச்சின் செயலர் ரொமேஷ் ஜயசிங்க, நிதியமைச்சின் செயலர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர ஆகியோர் இலங்கை சார்பாகவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நேற்று பிரதமர் டி. எம். ஜயரட்ணவையும் சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கையில் வட பகுதி மக்களுக்கு 50,000 வீடுகள் கட்டிக் கொடுப்பது பற்றியும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரதமரிடம் விளக்கமளித்தார்.
இச் சந்திப்பின் போது இந்திய வெளியுறவு அமைச்சின் செயலர் நிரூபமா ராவ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment