11/12/2010

ஜி-20 நாட்டு தலைவர்கள் கருத்து வேறுபாடு : ஒருமித்த கருத்து ஏற்படுத்த பெரும் திணறல்

சியோல் : சர்வதேச பொருளாதார மந்தநிலையை சரி கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதில், "ஜி-20' மாநாட்டில் பங்கேற்ற நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. எனவே, சியோல் மாநாட்டில் தீர்வு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, பல நாடுகளை திக்குமுக்காட செய்துள்ளது. இதற்கு உலக நாடுகள் ஒன்று கூடி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கு சியோலில் நடக்கும் "ஜி-20' மாநாட்டில் சுமூக தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. உலக பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவைத்தான் ஒரு புரட்டு புரட்டிவிட்டது. எனவே, அமெரிக்காவுக்கு சாதகமான முறையில், அதே சமயம் உலகளவில் பொருளாதாரத்தில் சமச்சீராகக் கொண்டு வர அதிபர் ஒபாமா முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கு சீனா, ஜெர்மனி உட்பட பல நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் ஆர்வம் காட்டினார்.

இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங்குடன் வந்த, திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியதாவது: ஒவ்வொரு நாடுகளும் தனித்தனியாக பொருளாதார கொள்கைகளை வகுத்துள்ளன. இதை எப்படி ஒருங்கிணைப்பது என்ற கேள்வி எழுந்தது. இப்படிபட்ட சூழ்நிலையில் உலக பொருளாதாரத்தில் சீரான நிலையை தோற்றுவிப்பது கஷ்டமான காரியமாக உள்ளது. குறிப்பாக கரன்சி மற்றும் நடப்பு கணக்கு இருப்பு விஷயத்தில் தான் வேறுபாடுகளே வந்தன. இது குறித்து விவாதிப்பதற்காக துணை நிதி அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. இதிலும் முடிவு ஏற்படாமல் வேறுபாடு தொடர்ந்து கொண்டுள்ளது. இருப்பினும் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் ஒப்பந்தம் ஏற்படும் என நம்புகிறேன். இதற்கு சிறிது காலம் ஆகலாம். இவ்வாறு அலுவாலியா கூறினார். சீன கரன்சி மதிப்பை அதிகரிக்க வேண்டாம் என அமெரிக்கா வலியுறுத்துகிறது. ஆனால், சீனா மறுத்துவிட்டது. இது தொடர்பாக, ஜி-20 உறுப்பினர் நாடுகளுக்கு அமெரிக்கா எழுதிய கடிதத்தில், "ஏற்றுமதி வர்த்தகத்தில் வேகமாக வளர்ந்து வரும் சீனா போன்ற நாடுகள், தங்கள் நாட்டு கரன்சிகளின் மதிப்பை குறைத்துக் காட்டுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், சியோல் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் நேற்று, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், எத்தியோப்பியா பிரதமர் மெலிருஸ் ஜெனாவி, மெக்சிகோ அதிபர் பிலிப் காலடெரோனுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், "சர்வதேச பொருளாதார சூழ்நிலை வெளிப்படையாகவும், நிலையாகவும் நெறிமுறைகளை கொண்டதாகவும் இருக்க வேண்டும். வர்த்தகம், முதலீடு வாய்ப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றல் மற்றும் வெளிச்சந்தை ஆகிய எதுவாக இருந்தாலும் தடையற்ற சவால்களை சந்திக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். வர்த்தக ஒத்துழைப்பில் தங்கள் நாட்டு நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தற்காப்பு கொள்கை குறித்த எச்சரிக்கை வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment