10/12/2010

பலஸ்தீனை உருவாக்கும் ஐ.நா.வின் திட்டத்தை கைவிட முடியாது என்கிறார் பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்

பலஸ்தீன இராஜ்யத்தை உருவாக்குதல் என்ற ஐ.நா.வின் தீர்மானத்தை எவராலும் தட்டிக் கழிக்க முடியாது என பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் பேர்னாட் கெளச்சர் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் வெளிநாட்டமைச்சர்க ளுடன் முக்கிய சந்திப்பில் கலந்து கொண்டபோதே பிரான்ஸ் வெளி நாட்டமைச்சர் இக்கருத்தை வெளியிட்டார். அரபு நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பிக்கும் முன் இஸ்ரேலில் முக்கிய கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் பிரான்ஸ், ஸ்பெய்ன் வெளிநாட்டமைச்சர்களுடன் இஸ்ரேல் தலைவர்களும் பங்கேற்றனர். இங்கு மேலும் உரையாற்றிய பேர்னாட் கெளச்சர் இரண்டு நாடுகள் இரண்டு தீர்வுகள் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. விரைவில் பலஸ்தீன இராஜ்யத்தை வரவேற்க வேண்டியவர்களாக உள்ளோம்.
இதையே சர்வதேசமும் விரும்புகின்றது. பிரச்சினைகள் நீண்டு செல்வதை நாங்கள் விரும்பவில்லை. பலஸ்தீன இராஜ்யத்தின் தோற்றம் மத்திய கிழக்கில் பூரண அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்பதே எமது விருப்பம் என்றார். இவரின் இந்த உரையை பலஸ்தீனப் பத்திரிகையான அல்அய்ம் செய்தியாக வெளியிட்டது.
1938ல் செக்கோஸ்லாவாக்கியாவின் நேசனாக இருப்பதற்குப் பதிலாக ஹிட்லராக இருக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது. பின்னர் எதையும் சாதிக்காமல் அதை இழக்க நேர்ந்தது என்பதையும் பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் ஞாபகமூட்டினார். இடையில் நின்று போன இஸ்ரேல், பலஸ்தீன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான வேலைகள் தீவிரமடைந்துள்ளன.
இதனை முன்னிட்டு பிரான்ஸ், ஸ்பெய்ன் வெளிநாட்டமைச்சர்கள் அரபு நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். இதற்கு முன்னர் இஸ்ரேல் தலைவர்களையும் அவர்கள் சந்தித்தனர்.
நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அரபு லீக் அமெரிக்காவுக்கு ஒரு மாத காலக்கெடு வழங்கியமை தெரிந்ததே. குவார்டட் அமைப்பில் அமெரிக்கா, ஐ.நா., ஐரோப்பிய யூனியன், ரஷ்யா என்பன உள்ளன.
மத்திய கிழக்கின் மோதல்களை முடித்துவைக்க இந்த குவார்டட் அமைப்பு தோற்றம் பெற்றது. பலஸ்தீனுக்கு பாரிய உதவிகளை வழங்கும் ஐரோப்பிய யூனியன் அந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதில் அதிகூடிய அக்கறையுடனுள்ளதாகவும் பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் விளக்கினார். பேச்சுக்கள் தொடர மேற்குக் கரை, கிழக்கு ஜெரூஸலம் என்பவற்றில் இஸ்ரேலின் யூதக்குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டுமென்கிறது பலஸ்தீன்.

0 commentaires :

Post a Comment