10/31/2010

துருக்கி அரசாங்கத்தின் ஜனநாயக நகர்வுக்கு இராணுவம் குழிபறிக்குமா?

துருக்கியில் செப்ரெம்பர் 12ம் திகதி நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் (A.K. கட்சி) அரசாங்கத்துக்குப் புதிய பலத்தைக் கொடுத்திருக்கின்றது. வாக்கெடுப்பில் பங்குபற்றிய 80 வீதம் வாக்காளர்களில் 58 வீதமானோர் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். அரசியலமைப்பில் 26 திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் மக்களின் அங்கீகாரத்தைக் கோரியிருந்தது.
ஜெனரல் கெனான் எவ்றென் (Kenan Evren) என்பவரின் தலைமையில் 1980ம் ஆண்டு சதிப் புரட்சியை நடத்திய அதிகாரிகளே தற்போதைய அரசியலமைப்பைத் தயாரித்தார்கள். அது 1982ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இச் சதிப் புரட்சியின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இடது சாரிகள். ஏராளமானோர் சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டனர்.
பலர் காணாமல் போயினர். சர்வசன வாக்கெடுப்பு நடைபெற்றதற்கு ஐந்து நாட்களுக்கு முன், செப்ரெம்பர் 7ம் திகதி ‘வெட்கத்தின் காட்சியகம்’ (Museum of shame) என்ற பெயரில் ஒரு கண்காட்சி இடம்பெற்றது. சதிப் புரட்சியின் போது கொல்லப்பட்டவர்களின் படங்களும் சித்திரவதைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இராணுவத்தினால் தயாரிக்கப்பட்ட தற்போதைய அரசியலமைப்பில் அரசியல் மற்றும் நீதித்துறை உட்படச் சகல துறைகளிலும் இராணுவத்தின் மேலாண்மையை உறுதிப்படுத்தும் பல சரத்துகள் உள்ளடக்கப்பட்டன. அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிப்பதில் இராணுவம் ஏகபோக பாத்திரம் வகிப்பதற்கு வகை செய்யும் ஏற்பாட்டையும் 1980ம் ஆண்டின் சதிப் புரட்சியில் பங்கு பற்றிய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதைத் தடை செய்யும் 15வது சரத்தையும் விசேடமாகக் குறிப்பிடலாம். இச் சரத்தை முழுமையாக நீக்குவதும் அரசாங்கம் முன்வைத்த 26 திருத்தங்களுள் ஒன்றாகும். ஜெனரல் கெனான் எவ்றென் துருக்கியிலேயே இருக்கிறார். விரைவில் அவர் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படு கின்றது.
இராணுவத்தினது ஆலோசனையின் பேரில் அரசியலமைப்பு நீதிமன்றம் நான்கு தடவைகள் குர்திஷ் அரசியல் கட்சிகளைத் தடை செய்திருக்கின்றது. இராணுவம் செல்வாக்குச் செலுத்த முடியாதவாறு அரசியலமைப்பு நீதிமன்றம் சீரமைக்கப்படவுள்ளது. அரசியலிலும் சிவிலியன் விடயங்களிலும் இராணுவத்தின் மேலாண்மையை இல்லாதொழிப்பதே அரசாங்கம் செய்யவுள்ள திருத்தங்களின் பிரதான நோக்கம்.
இதுவரை காலமும் ஜனநாயகம் நடைமுறையில் இல்லாதிருந்த துருக்கியில் ஜனநாயகத்துக்கான அத்திவாரத்தை அரசாங்கம் முன்வைத்துள்ள அரசியலமைப்புத் திருத்தங்கள் இடவிருக்கின்றன என்று சில அரசியல் நோக்கர்கள் கூறுவதை நிராகரிக்க முடியாது. கெமால் அதாதுர்க் (Kemal Ataturk) 1923ம் ஆண்டு துருக்கி அரசை அமைத்த நாளிலிருந்து சகல துறைகளிலும் இராணுவத்தின் செயலாணையே செல்லுபடியானதாக இருந்தது. தற்போதைய எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி (CHP) தொடர்ச்சியாக இராணுவத்தின் சகபாடியாகவே செயற்பட்டு வந்தது. இப்போதும் அவ்வாறே செயற்படுகின்றது.
குடியரசு மக்கள் கட்சியிலிருந்து வெளியேறியவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கட்சி 1950ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த அரசாங்கம் சில சீர்த்திருத்தங்களைச் செய்ய முற்பட்டதும் குடியரசு மக்கள் கட்சியின் ஆதரவுடன் இராணுவம் சதிப் புரட்சி மூலம் அரசாங்கத்தைக் கவிழ்த்ததுடன் பிரதமரையும் இரண்டு அமைச்சர்களையும் தூக்கிலிட்டது.
சர்வசன வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்குக் கிடைத்த வெற்றி துருக்கியின் மதசார் பின்மைக்குச் சாவுமணி என்றும் AK கட்சியின் மதவாத சர்வாதிகாரத்துக்கு வழி வகுத்துள்ளது என்றும் குடியரசு மக்கள் கட்சியின் தலைவர் கெமால் கிலிக்தரோக்லு (Kemal Kilicdaroglu) கூறுகின்றார். அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் வெகுவாகப் பாதிக்கப்படவுள்ள இராணுவத்தினர் மத்தியில் ஆட்சிக் கவிழ்ப்புச் சிந்தனையைத் தூண்டும் வகையில் இவரது கூற்று அமைந்திருந்தது. ஆளுங் கட்சியான AK கட்சி முன்னர் ஒரு மதவாத அமைப்பாக இருந்ததையே CHP தலைவர் நினைவு படுத்துகின்றார்.
அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்கள் துருக்கியில் ஜனநாயகம் மலர்வதற்கு வழிவகுப்பது அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதாவது இராணு வத்திடமிருந்து வரக்கூடிய அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஏற்பாடுகளில் மதசார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் முக்கியமானவை. குர்திஷ் மக்களின் கோரிக்கைகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சர்வசன வாக்கெடுப்பில் குர்திஷ் மக்கள் பங்கு பற்றியிருந்தால் அரசாங்கத்துக்குச் சார்பான முடிவு மேலும் பலமானதாக இருந்திருக்கும். சர்வசன வாக்கெடுப்பைப் பகிஷ்கரிக்குமாறு குர்திஷ் அரசியல் கட்சிகளும் சிறையிலுள்ள குர்திஷ் தலைவர் அப்துல்லா ஒகலனும் விடுத்த வேண்டுகோள் காரணமாகக் குர்ஷித் பிரதேசங்களில் வாக்குப் பதிவு மிகவும் குறைவாகவே இருந்தது. முன்வைக்கப்பட்ட அரசியல் சீர்த்திருத்தங்களுக்குக் குர்திஷ் மக்கள் எதிரானவர்களல்ல. தங்கள் கோரிக்கைகள் அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு. அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தில் உறுப்புரிமை பெறுவதற்குக் குறைந்த பட்சம் பத்து வீதம் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையை நீக்குவது, சிறையிலுள்ள குர்திஷ் தலைவர்களை விடுதலை செய்வது, குர்திஷ் பிரதேசங்களில் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது என்பனவே குர்திஷ் மக்களின் பிரதான கோரிக்கைகள். துருக்கியின் மொத்த சனத்தொகையில் குர்திஷ் மக்கள் 20 வீதமளவில் இருக்கின்றனர்.

0 commentaires :

Post a Comment