10/07/2010

கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஒலுவில் கிராமத்தில் அமைந்திருக்கிறது. இது 1995ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் திகதி மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹ¥ம் எம். எச். எம். அஷ்ரப்பின் முயற்சியினால் ஆரம்பிக்கப் பட்டதாகும்.
ஒரு பல்கலைக்கழகமானது அது அமைந்துள்ள பிரதேசத்தில் கல்வி எழுச்சியை ஏற்படுத்தி சமூகத்தின் கற்றல் ஆர்வத்தை தூண்டுவதாகத் திகழ வேண்டும். மேலும் சமூகத்தில் சீரான கல்விப் பயணம் அமைவதற்கும் அதனூடாக அறிவு ரீதியான தேசிய சிந்தனையை உருவாக்குவதற்கும் ஒரு பலமாய் காணப்படுகின்றது.
1995ம் ஆண்டு ஜுலை மாதம் 27 ம் திகதி இது தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரியாக பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் சிரேஷ்ட விரியுரையாளர் எம். எல். ஏ. காதர் அவர்களைப் பணிப்பாளராகக் கொண்டு அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டது.
பின்னர் 1996, மே 15ம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழகமாக எம். எல். ஏ. காதர் அவர்களையே உபவேந்தராகக் கொண்டு தேசிய பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது. பல்கலைக்கழகக் கல்லூரியாக உருவாக்கப்பட்டு மிக விரைவாக பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றதே தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பிரயோக விஞ்ஞான பீடம், முகாமைத்துவ வர்த்தகபீடம், கலை கலாசார பீடம் ஆகிய மூன்று பீடங்களைக் கொண்டு அது தனது முதலாவது பட்டமளிப்பு விழாவினை 2001, டிசம்பர் 28ம் திகதி எம். எல். ஏ. காதர் அவர்களை உபவேந்தராகவும் ஜெளபர் சாதிக் அவர்களை பதிவாளராகவும் கொண்டு நடத்தியது.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இயங்கிய தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒலுவில் பிரதேசத்தில் முன்னர் நெல் களஞ்சியசாலையாக இருந்த இடத்திற்கு நிரந்தரமாக மாற்றப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பிரதேசம் மிகவும் பரந்து விரிந்து காணப்படுகின்றது.
இது பல ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்ட விஸ்தீரணமான இடமாகும். இதில் முகாமைத்துவ வர்த்தக பீடமும் கலை கலாசார பீடமும் நிறுவப்பட்டன. பிரயோக விஞ்ஞான பீடம் சம்மாந்துறையில் நிறுவப்பட்டது. இது இந்தப் பிரதேச மாணவர்களின் கல்வித் தாகத்தை அதிகரித்ததோடு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா 2003.12.11ம் திகதி எம். எல். ஏ. காதர் அவர்களை உபவேந்தராகவும் ஏ. தையூப் அவர்களை பதில் பதிவாளராகவும் கொண்டு நடைபெற்றது. இதில் 241 பட்டதாரிகள் பட்டமளித்து கெளரவிக்கப்பட்டனர். கலை கலாசார பீடத்தில் 118 பட்டதாரிகளும் முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் 71 பட்டதாரிகளும் பிரயோக விஞ்ஞான பீடத்தில் 52 பட்டதாரிகளும் அச்சமயம் பட்டம் பெற்றனர்.
மூன்றாவது பட்டமளிப்பு விழா 2005.05.31ம் திகதி தேசபந்து ஜெkமா இஸ்மாயில் அவர்களை வேந்தராகவும் கலாநிதி ஹுஸைன் இஸ்மாயில் அவர்களை உபவேந்தராகவும், ஏ. தையூப் அவர்களை பதில் பதிவாளராகவும் கொண்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் கலந்துகொண்டு 393 பட்டதாரிகளுக்கு பட்டமளித்து கெளரவித்தார்.
பல்கலைக்கழக வரலாற்றில் 2005ம் ஆண்டில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. நான்காவது பீடமாக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடம் உருவாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் 4ஆவது பட்டமளிப்பு விழா 2008.01.21ம் திகதி பேராசிரியர் ஹச்சு முஹம்மட் இஸ்ஹாக் அவர்களை வேந்தராகவும் கலாநிதி ஹுஸைன் இஸ்மாயில் அவர்களை உபவேந்தராகவும் எம். எப். ஹிபதுல் கரீம் அவர்களை பதில் பதிவாளராகவும் கொண்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக உருவாக்கத்தின் உச்ச எண்ணிக்கையிலான பட்டதாரிகளின் வெளியேற்றம் இவ்வாண்டிலேயே இடம்பெற்றது.
இதில் 640 பட்டதாரிகள் பட்டமளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். அதில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் 64 பட்டதாரிகளும் முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் 178 பட்டதாரிகளும் கலை கலாசார பீடத்தில் 398 பட்டதாரிகளும் பட்டமளித்து கெளரவிக்கப்பட்டனர்.
தற்போது பல்கலைக்கழகம் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளதை அவதானிக்க முடியும். பீடங்களுக்கான தனித்தனியான கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதையும் ஏனைய வசதிகள் அபிவிருத்தியடைந்து வருவதனையும் காணக்கூடியதாக உள்ளது.
தற்போது அதிகமான கலாநிதிகள் மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள் உருவாகி வருவதை அவதானிக்கும் போது இந்தப் பிரதேசத்தின் கல்விப் பாதை மிக விரைவில் மக்கள் மயப்படும் என்பதை உறுதியாகக் குறிப்பிட முடியும். பல்கலைக்கழக உருவாக்கம் அந்த பிரதேச மக்களின் கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கும் என்பதை மறுக்க முடியாது. எனவே, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இப்பிரதேச மாணவர்களின் கல்வியின் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இப்பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக கலாநிதி சபீனா, முகாமைத்துவ வர்த்தகப் பீடத்தின் பீடாதிபதியாக எம். பி. எம். அம்ஜத், கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதியாக எஸ். ஆலிப், இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழிப் பீடத்தின் பீடாதிபதியாக மெளலவி எம். எஸ். எம். ஜலாலுதீன் ஆகியோர் கடமை¨யாற்றுகின்றனர்.
பட்டமளிப்பு விழா வரிசையில் ஐந்தாவது பட்டமளிப்பு விழா பேராசிரியர் ஹச்சு முஹம்மட் இஸ்ஹாக் அவர்களை வேந்தராகவும் கலாநிதி ஹுஸைன் இஸ்மாயில் அவர்களை உபவேந்தராகவும் எம். எப். ஹிபதுல் கரீம் அவர்களை பதில் பதிவாளராகவும் கொண்டு 2009.01.19ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
விஞ்ஞான பீடத்தில் சூழல் கற்கை நெறியில் முதுநிலைப் பட்டத்தை முடித்துக்¦கொண்ட 5 பட்டதாரிகளுடன் 75 பட்டதாரிகளும், முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் 70 பட்டதாரிகளும், கலை கலாசார பீடத்தில் 138 பட்டதாரிகளும் இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழிப் பீடத்தில் 20 பட்டதாரிகளும் இதில் பட்டம்பெற்றனர்.
இந்தப் பட்டமளிப்பு விழாவின் சிறப்பம்சம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது கல்விப் பயணத்தில் 5 முதுநிலை பட்டதாரிகளை உருவாக்கியிருப்பதாகும். இந்தப் பல்கலைக்கழகம் தனது கல்விப் பயணத்தில் சீரான பாதையை தெரிவு செய்துள்ளது என்பதை இது புலப்படுத்துகிறது.
ஆறாவது பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவில் 2009 ஜனவரி 19ஆம் திகதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் பின் இடம்பெற்ற இறுதிப் பரீட்சைகளில் சித்தியடைந்த சகல பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
உபவேந்தர் கலாநிதி எஸ். எம். எம். இஸ்மாயில் தலைமையில் மன்சூர் ஏ. காதர் அவர்களை பதில் பதிவாளராகக் கொண்டு நடைபெறவுள்ள இவ்விழாவில் உள்வாரி மாணவர்களுக்கு காலையிலும் வெளிவாரி மாணவர்களுக்கு மாலையிலும் இரு அமர்வுகளாக பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன் முதலாவது அமர்வுக்கு உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க பிரதம அதிதியாகவும் இந்திய மருத்துவ பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி மயில்வாகன நடராஜன் சிறப்பு அதிதியாகவும், இரண்டாவது அமர்வுக்கு தமிழ்நாடு அன்னை தெரேசா பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி அருணா சிவகாமி பிரதம அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிரயோக விஞ்ஞான பீடத்தில் 39 பேரும், கலை கலாசார பீடத்தில் 160 பேரும், இஸ்லாமிய அறபு மொழி பீடத்தில் 242 பேரும், வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் 09 பேருமாக 359 மாணவர்கள் உள்வாரியாகவும், கலைமாணி பொதுப் பட்டத்தை 205 பேரும், முகாமைத்துவமாணி பொதுப் பட்டத்தை 54 பேரும், வியாபார நிர்வாகமாணி பொதுப் பட்டத்தை 02 பேருமாக 261 மாணவர்கள் வெளிவாரியாகவும் பட்டம் பெறவுள்ளனர்.
தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இளமாணிப் பட்டதாரிகளை மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் முதுமாணிகள் மற்றும் கலாநிதிப் பட்டதாரிகளையும் உருவாக்க வேண்டும். குறிப்பாக மருத்துவ பீடம், சட்ட பீடம் என்பவற்றை அடையாளப்படுத்த முயற்சிக்க வேண்டும். மென்மேலும் இப் பல்கலைக்கழகம் வளர்ச்சி கண்டு மாணவர்களின் கல்வித் தாக த்தை தீர்க்குமா என்பதை எதிர் பார்ப்போம்.

0 commentaires :

Post a Comment