இந்துக்களின் கடவுளாகக் கருதப்படும் ராமர், 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடியும்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழந்து மறைந்த மன்னன் ராஜராஜ சோழனின் நினைவிடத்தை அறிய முடியவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கதாக இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அயோத்தியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கடந்த 60 ஆண்டுகளாக நீடித்துவந்த சட்டப் பிரச்சினையில், கடந்த வாரம் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றும், அதில் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும், இரு பகுதிகளை இந்து அமைப்பு்ககளுக்கும் வழங்க உத்தரவிட்டது. அவ்வாறு இந்து அமைப்பு்க்களு்ககு வழங்க உத்தரவிட்ட ஒரு பகுதியில்தான் ராமர் பிறந்ததாகவும், தீர்ப்பில் ஒரு நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அயோத்தி வழக்கில் நீதிபதி டி.வி. ஷர்மா தனது தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் என்றும், அவர் கடவுள் என்றும் அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபட்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், அந்த இடத்தில் பாபரால் கட்டடம் கட்டப்பட்டது குறித்தும், சர்ச்சைக்குரிய அந்த இடத்தை ராமர் பிறந்த இடமாகக் கருதி இந்துக்கள் வழிபட்டு வந்ததாகவும், நினைவு தெரிந்த நாளில் இருந்தே அதைப் புனிதத்தலமாகக் கருதி ஆன்மிகப் பயணம் சென்று வருவதாகவும்'' நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாக கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். ''17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தென்னகத்தை ஆண்ட மன்னன் ராஜராஜன் மறைந்த விதத்தையோ, அவரது கல்லறையையோ, அவரது நினைவுத் தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னும் அறிய முடியவில்லையே என மனம் நொந்து வருந்த வேண்டியுள்ளது'' என்று கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். ராஜராஜனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை சமீபத்தில் தமிழக அரசு கொண்டாடியது. அப்போது அந்த நிகழ்வில், பேசிய கருணாநிதி, ராஜராஜன் காலத்தில்தான் நில அளவை முறை, நீட்டல் அளவை முறை, நிறு்ததல் அளவை முறை, ஊராட்சிக்கான குடவோலை முறைகள் அறிமுகம் செய்யப்பட்டதாகவும், ராஜராஜன் எழுப்பியிருக்கும் தஞ்சைப் பெரிய கோயிலும், பொறித்து வைத்திருக்கும் கல்வெட்டுக்களும் அவற்றுக்கு சான்றாக உள்ளதாகவும் குறிப்பிட்டிருருந்தார். திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும் கூட, லெமூரியா கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ்மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக, வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள், திராவிட நாகரிகம் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்துத் தெரிவித்திருப்பதாக கருணாநிதி தனது அறி்க்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அடிப்படையில், திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றை உலகம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம், அடிப்படை ஆதாரம் இல்லாமலே வெறும் மூட நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என தமிழக முதலமைச்சர் கருணாநிதி தனது அறி்க்கையில் குறிப்பிட்டுள்ளார். |
10/05/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment