10/19/2010

ஈரானுடன் பேசுவதைத் தவிர ஐ.நா.வுக்கு வேறு வழியில்லை: இராணுவத் தீர்வு சாத்தியமற்றது

ஈரானிடம் பேசுவத்தைத் தவிர வல்லரசு நாடுகளுக்கு வேறு வழி கிடையாது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்கும் ஈரானின் உரிமைய எந்தவொரு அழுத்தங்களுக்காகவும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லையென்றும் கூறினார்.
யுரேனியம் சர்ச்சை தொடர்பான மற்றொரு பேச்சுவார்த்தை நவம்பர் 15 முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அமெரிக்கா, பிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளனர். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் பேச்சுவார்த்தைகளைத் தவிர வேறு வழிகள் இல்லை. அனைத்தும் அடைபட்டுவிட்டன. ஆனால் இப்பேச்சுக்கள் நியாயத்தின் அடிப்படையில் இடம்பெறவேண்டும்.
பரஸ்பர புரிந்துணர்வு, கெளரவம், என்பன இப்பேச்சுவார்த்தைகளில் இடம் பெறுவது அவசியம். செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சோதனையிட வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது. தேவையேற்பட்டால் அவற்றை ஐ. நா. அதிகாரிகள் ஈரானில் வைத்தே பார்வையிடலாம் என்பதையும் அந்நாட்டு ஜனாதிபதி அழுத்தமாகத் தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கடந்த 2009 ம் ஆண்டு ஜெனீவாவில் இவை முறிவடைந்தன. ஐ. நா. வின் கோரிக்கைகளை ஏற்க ஈரான் மறுத்ததையடுத்தே இப் பேச்சுக்கள் முறிந்தன. இதனால் ஈரான் மீது நான்காவது முறையாகவும் கடுமையான பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப்பட்டன. தற்போது மீண்டும் பேச்சுக்கு ஈரான் அழைக்கப்பட்டது. இதையடுத்து ஈரான் தனது நிலைப்பாட்டை விளக்கிவிட்டது.
ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளுக்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் கடந்த காலங்களில் அவை கைகூட வில்லை. ரஷ்யா, சீனா என்பன ஈரான் மீது இராணுவப் பலம் பிரயோகிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தமை உள்ளிட்ட முக்கிய காரணங்களால் ஈரானுக்கெதிரான இராணுவ நடவடிக்கை சாத்தியப்பட வில்லை.
இதை கருத்தில் கொண்டே ஈரான் தனக்கெதிராக இராணுவ நடவடிக்கை சாத்தியமில்லையென்கிறது. யுரேனியத்தைச் செறிவூட்டி ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக மேற்குலகம் சந்தேகிக்கின்றது.
எனவே யுரேனியம் செறிவூட்டல் வேலைகள் கண்காணிக்கப்பட வேண்டும். அவற்றை ரஷ்யா, பிரான்ஸ¤க்கு அனுப்பி வைக்க வேண்டுமென்கிறது. ஐ. நா. வின்இக் கோரிக்கையை நிராகரித்த ஈரான் நியாயமான முறையில் பேச்சுக்கள் நடக்க வேண்டும். இஸ்ரேலின் அணு ஆயுதங்கள் தொடர்பாகவும் விடயங்கள் வெளிச்சத்துக்கு வரவேண்டுமென்கிறது. இஸ்ரேல் விடயத்தில் மேற்குலகம் அமைதி காக்கின்றது. அமைதியின் அர்த்தம் இஸ்ரேலை ஆதரிப்பது என்பது பொருள் என்றும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment