10/22/2010
| 0 commentaires |
கடந்த கால வட பகுதி அரசியல்வாதிகள் மேட்டுக்குடி ரீதியான தீர்மானங்களை எடுத்து தவறிழைத்ததைப்போன்றே பிரபாகரனும் தவறிழைத்தார்.
தொண்ணூறுகளில் கிழக்கில் அப்போதைய இராணுவத்தினர் மக்களை சித்திரவதை செய்தனர். பலர் காலில் விழுந்தபோதும் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டனர். எனவே அன்று இவ்வாறான சம்பவங்களை இயக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அன்று மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூர சம்பவங்களே நான் புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு காரணமாக அமைந்தன என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மேலும் நாட்டில் நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் சுயாதீனமாக இயங்க வைக்கப்படவேண்டும். இந்த விடயத்தில் நல்லிணக்க ஆணைக்குழு பாரிய வகிபாகத்தை வகிக்க முடியும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு அதன் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. ஆணைக்குழுவின் தலைவருடன் ஆறு உறுப்பினர்கள் ஆணைக்குழு சார்பில் கலந்துகொண்டிருந்தனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது
யுத்தம் முடிந்ததன் பின்னர் இவ்வாறான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவேண்டும் என்று தீர்மானித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மற்றும் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன். சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் பிரதமர் ஆட்சி முறை வந்த நிலையில் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளும் புரிந்துணர்வின்மையும் ஏற்பட்டன. கல்லோயா குடியேற்றத் திட்டம் இதன் ஆரம்பம் எனலாம்.
அன்று செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். அதனையடுத்து பண்டா செல்வா உடன்படிக்கை வந்தபோது அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தன அதனை எதிர்த்தார். அதன் காரணமாக பண்டாரநாயக்க குறித்த உடன்படிக்கையை கிழித்தெறிந்தார். அதாவது தமிழ் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் கிடைக்கப்போகின்றன என்று எண்ணியே ஜே.ஆர். அதனை எதிர்த்தார். பின்னர் டட்லி செல்வா உடன்படிக்கை வந்தபோது அப்போதைய எதிர்க்கட்சி அதனை எதிர்த்தது. அந்த உடன்படிக்கை மூலம் மாவட்ட அபிவிருத்தி சபைகள் முன்வைக்கப்பட்டன. எனவே அந்த விடயமும் இல்லாமல் போனது. அந்த நேரத்தில் தமிழ் மக்கள் தனிநாடு கேட்கவில்லை. ஆனால் அந்த விடயத்தை எதிர்க்கட்சிகள் வேறுவிதமாக காட்டின. அதன் பின்னர் தமிழ் மக்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் அரசியல் மாற்றத்துடன் தமிழரசுக் கட்சி வீழ்ச்சிகண்டது. எனவே தமிழரசு கட்சியை கட்டியெழுப்புவதற்காக 1976 ஆம் ஆண்டு அவர்கள் வட்டுக்கோட்டை பிரகடனத்தை கொண்டுவந்தனர். இதனால் தமிழரசுக் கட்சி நாட்டின் எதிர்க்கட்சியாகவும் வந்தது. எனினும் அவ்வாறான ஒரு நகர்வை மேற்கொள்ள அப்போதைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆளுமை இல்லாமையினால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். பல ஆயுத குழுக்கள் உருவாகின. பல முரண்பாடுகள் ஏற்பட்டன. அதனால் சகோதர படுகொலைகள் இடம்பெற்றன. இறுதியாக தமிழீழ விடுதலை புலிகள் தமிழீழத்தை பெறக்கூடிய அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆயுதங்களை வழங்கி குழப்பினார்
அதனையடுத்து ஜே.ஆர். ஜயவர்த்தன பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்தார். தொடர்ந்து இந்தியா இந்த விடயத்தில் தலையிட்டு மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்தியது. அன்று பண்டா செல்வா உடன்படிக்கையை எதிர்த்த ஜே.ஆர். ஜயவர்த்தன இறுதியில் அதனைவிட கூடிய அதிகார முறைமைக்கு இணங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. எனினும் மாகாண சபை முறைமையை எதிர்த்த பிரேமதாச பதவிக்கு வந்தார். அவர் விடுதலை புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி பிரபாகரனுடன் இணைந்து மாகாண சபை முறைமையில் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டன
அதன் பின்னர் 90 களில் புலிகளுக்கு எதிராக பிரேமதாச படையினரை அனுப்பினார். அதனால் அழிவுகள் ஏற்பட்டன. அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு நான் புலிகள் அமைப்பில் இணைந்தேன். அதன்படி பார்க்கும்போது முன்னாள் தலைவர்களான ஜே.ஆர். ஜயவர்த்தனவும் பிரேமதாசவும் துரோகமிழைத்தனர். அதாவது பிரேமதாச புலிகளைக் கொண்டு தந்திரமாக மாகாண சபை முறைமையை குழப்பினார். அதனால் அன்று இளைஞர்கள் கல்விமான்கள் சிறுவர்கள் என பலர் பாதிக்கப்பட்டனர். தமிழ் மக்களுக்கு தனிநாடு தேவை என உணர 90 களில் இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாகின. கொலைகள் கடத்தல்கள் என்பன இடம்பெற்றன. கிழக்கு பல்கலைக்கழத்திலிருந்து 90 களில் 174 பேரை அழைத்து சென்றனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. மேலும் அன்றைய நிலையில் படையினர் முஸ்லிம் மக்களின் பெயர்களை கூறியே தமிழ் மக்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இதனால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. இந்நிலையில் புலிகள் வளர்ச்சி பெற்றனர். 16 வயதில் நானும் புலிகள் அமைப்பில் இணைந்தேன். புலிகள் ஆயுத ரீதியில் சாதித்தனர். பயங்கரவாத நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
பிரபாகரன் தவறிழைத்தார்
இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அப்போது புலிகளுக்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டன. ஏற்கனவே வட மாகாண கிழக்கு மாகாண பிரச்சினை இருந்தது. வட பகுதி அரசியல்வாதிகள் மேட்டுக்குடி ரீதியான தீர்மானங்களை எடுத்து தவறிழைத்ததைப்போன்றே பிரபாகரனும் தவறிழைத்தார். மேலும் உலக ஒழுங்குகளை புரிந்துகொள்ளவும் பிரபாகரன் தவறிவிட்டார். மீண்டும் யுத்தம் ஒன்றுக்கு தயாரானார். அத்துடன் அவரது பாணியிலேயே எம்மீதும் தாக்குதல் நடத்தினார். வெருகல் ஆற்றில் போர் இடம்பெற்றது. அத்துடன் மட்டக்களப்பில் புத்தி ஜீவிகளான கிங்ஸ்லி ராசநாயகம் ராஜன் சத்தியமூர்த்தி ஆகியோரை கொலை செய்தனர். அதனால் நாங்களும் ஆயும் ஏந்தினோம். பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்றார். புலிகளுடன் பேச்சு நடத்த முயற்சித்தார். ஆனால் போர் நிறுத்த உடன்படிக்கை முறிந்தது. நாங்கள் அரசுடன் இணைந்தோம். கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டது. அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது. நாங்களும் அரசியல் கட்சியாக வந்து மாகாண சபை முறைமைக்குள் சென்றோம்.
தற்போது இந்த நல்லிணக்க ஆணைக்குழு திறம்பட விசாரணைகளை நடத்தி யோசனைகளை முன்வைக்கவேண்டும். அதிகாரப்பகிர்வு முறைமை யோசனைக்கு செல்லலாம். மேலும் மாகாண சபை முறைமை பலப்படுத்தப்படவேண்டும். அனைத்து மக்களும் நம்பிக்கைகொள்ளும் வகையில் மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்படவேண்டும். எனவே தற்போது கையில் உள்ள அதிகாரப்பகிர்வு முறைமை அமுலுக்கு வரவேண்டும். கடந்தகால அரசியல் தலைவர்கள் செய்த தவறு காரணமாக ஆயுத ஏந்திய தலைவர்கள் வந்தனர். தற்போது அனைத்தும் முடிந்துவிட்டன. எனவே மக்கள் உரிமைகளை உணரக்கூடிய வகையில் நாட்டை உருவாக்கவேண்டும். தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கம் உள்ளது.
கேள்வி: கிழக்கில் கடத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் எங்களிடம் முறைப்பாடுகள் வந்துள்ளன. அது தொடர்பில் ? பதில்: சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கூறினால் நான் விளக்கமளிக்கலாம். இதுபோன்ற சம்பவங்கள் அனைத்து மாகாணங்களிலும் இடம்பெறுகின்றன. எமது சட்டத்துக்குட்பட்ட வகையில் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம். 2002 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை காணிப்பிரச்சினைகள் பல வகைகளில் உள்ளன. அதாவது பல்வேறு காலங்களில் பேர்மிட் ஆவணங்களுக்கு காணிகள் கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்டன. எனினும் யுத்த காலத்தில் அவற்றை விட்டு மக்கள் வெளியேறியிருக்கலாம். அவ்வாறானவர்களுக்கு மாற்றுக்காணி வழங்கியிருந்தால் பழைய காணியை எவ்வாறு வழங்க முடியும்? உண்மையான உறுதி இருப்பின் காணிகளை வழங்கலாம். எனினும் இந்த பிரச்சினையை நான் இயன்றளவு தீர்த்து வருகின்றேன். சில இடங்களுக்கு நான் நேரில் சென்று பிரச்சினைகளை தீர்க்கின்றேன். எமது மாகாணத்தில் சமூக மட்டத்தில் முரண்பாடுகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன். முறைப்பாடுகள் கிடைப்பின் தீர்வுகளை நாங்கள் வழங்குவோம்.
சமூக ரீதியான பிரச்சினைக்கு விடமாட்டோம்
கேள்வி: யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் விரட்ட பட்டமை தொடர்பில் ?
பதில்: கிழக்கில் அவ்வாறான பிரச்சினைகள் இல்லை. யாழ்ப்பாண விடயங்களில் நான் தலையிட்டதில்லை. எனினும் கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு வேண்டுமானால் நான் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கலாம். மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எமது மாகாணத்தில் எந்தவகையிலும் சமூக ரீதியான பிரச்சினைகள் ஏற்பட விடமாட்டோம். காணி விடயத்தில் கவனமாக செயற்பட்டுவருகின்றோம்.
இதேவேளை சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்த ஆறாயிரம் மக்கள் இன்னும் முகாம்களில் உள்ளனர். சம்பூரில் அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இந்தியாவின் உதவியுடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கடல் ஆழம் 17 மீற்றர்களாகும். ஆனால் சம்பூர் கடற் கரை பகுதியில் ஆழம் 23 மீற்றர்களாகும். எனவே பொருளாதார ரீதியில் முக்கியத்தும் பெறுகின்றது.
ஆனால் குறித்த ஆறாயிரம் மக்கள் தாங்கள் சம்பூர் பகுதியிலேயே குடியேறவேண்டும் என்று கூறுகின்றனர். எனினும் அவர்கள் விரும்புகின்ற வேறு இடத்தில் அதே பிரதேச செயலக பிரிவில் அவர்களை குடியமர்த்த நாம் தயாராக இருக்கின்றோம். இல்லை அவர்கள் அதே இடத்தில் குடியமர வேண்டும் என்றால் அது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானிக்கவேண்டும்.
கேள்வி: கிழக்கில் அன்று 600 பொலிஸார் கொல்லப்பட்டமை தொடர்பில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நீங்கள் கருதவில்லையா?
பதில்: இது நல்ல கேள்வியாகும். கிழக்கில் 600 பொலிஸார் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை விடயத்தில் நான் அந்த அமைப்பில் இருந்தவன் என்ற வகையில் மன்னிப்பு கோரலாம். ஆனால் 1990 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 11 ஆம் திகதி பொலிஸார் கொலை செய்யப்பட்டனர். நான் புலிகள் அமைப்பில் 1991 ஆம் ஆண்டு 2 மாதம் நான்காம் திகதியே இணைந்துகொண்டேன். எனவே இந்த விடயத்தில் நான் மன்னிப்பு கேட்பது பொருத்தமாக அமையுமா? இது விடயத்தில் அப்போது புலிகள் அமைப்பின் தலைவர்களுள் ஒருவராக இருந்த கருணாவை கேட்கலாம்.
இதேவேளை 90 களில் படையினர் மேற்கொண்ட விடயங்களையே என்னை புலிகள் அமைப்பில் இணைய வைத்தது. எரிக்கப்பட்ட சடலங்களை பார்த்துள்ளேன். 1990 களில் வெட்டுப்பாட்டி என்று ஒன்று இருந்தது. எனது வகுப்பு மாணவர்கள் மூவரை பிடித்துச் சென்றனர். பல பேர் காலில் விழுந்து கோரிய நிலையிலும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். எனவே அப்போதைய கால கட்டத்தில் அவ்வாறான சம்பவங்களை இயக்குவித்த அன்றைய அரசியல் வாதிகள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கருதுகின்றேன்.
0 commentaires :
Post a Comment