10/14/2010

லெபனான் சென்ற ஈரான் ஜனாதிபதிக்கு கோலாகல வரவேற்பு: வீதியெங்கும் வாழ்த்துப் பதாகைகள், உருவப் படங்கள்

ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் நேற்று லெபனான் சென்றபோது பாரிய வரவேற்பளிக்கப்பட்டது. பெய்ரூத் விமான நிலையத்திலிருந்து ஜனாதிபதி மாளிகை வரை அஹ்மெதி நெஜாத் திறந்த வாகனத்தில் அழைத்து வரப்பட்டார். ஆயிரக்கணக்கானோர் திரண்டு பூக்கள், அரிசி மணிகள் தூவி வரவேற்றதுடன் மாலைகளையும் அணிவித்தனர்.
லெபனான் ஸியா முஸ்லிம்கள் பலஸ்தீன் அகதிகள் எனப் பெருந்தொகையானோர் ஈரான் ஜனாதிபதியை வரவேற்று அழைத்துச் சென்றனர். வீதியெங்கும் அஹ்மெதி நெஜாத்தின் உருவப்படங்கள் இவரை வாழ்த்தும் சுலோகங்கள், ஆயத்துல்லா அலி கொமெய்னி, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஸ்தாபகர் ஆயத்துல்லா ருஹுல்லா கொமெய்னியின் உருவப்படங் களும் தொங்கவிடப்பட்டன.
லெபனான் ஜனாதி மைகல் சுலைமானைச் சந்திப்பதற் கென ஈரான் ஜனாதிபதி மாளிகை நோக்கி அழைத்துவரப்பட்டார். இத்தனை ஏற்பாடுகளையும் ஹிஸ்புல்லா ஏற்பாடு செய்தது. லெபனான் அரசாங்கத்தில் ஹிஸ்புல்லாவுக்கு பெரும் செல்வாக்குள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் பலர் அமைச்சர்களாகவும் உள்ளனர்.
இந்நிலையில் லெபனான் பிரதமர் சாட் ஹரீரி இத்தனை தடல்புடல் ஏற்பாடுகளை விரும்பவில்லை. இவரது தந்தையான முன்னாள் பிரதமர் ரபீக் ஹரீரி 2005ல் படுகொலை செய்யப்பட்டார். இதை ஹிஸ்புல்லாவே செய்ததாக சாட் ஹரீரியும் மேற்குலக நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன. அஹ்மெதி நெஜாதின் வருகைக்கு இவ்வளவு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்ததை அமெரிக்காவும் விரும்பவில்லை.
இது லெபனானில் ஈராக்கின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என அமெரிக்கா நம்புகின்றது. ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற ஷியா முஸ்லிம்களின் அமைப்புக்கு ஈரான் நிதியுதவியும் ஆயுத உதவியும் வழங்குவதாக இஸ்ரேலும், அமெரிக்காவும் குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு லெபனான் வந்துள்ள ஈரான் ஜனாதிபதி இஸ்ரேலை அண்மித்துள்ள பின்ற் ஜெபல் என்ற கிராமத்துக்கு சென்று ஹமாஸ் வீரர்களின் மண்ணறைகளை தரிசிக்கவுள்ளார்.

0 commentaires :

Post a Comment