10/18/2010

ஈராக் பிரதமர் இன்று ஈரான் பயணம்

ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி மிக விரைவில் ஈரான் செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் இன்று திங்கட்கிழமை பிரதமர் நூரி அல் மாலிகி ஈரான் பயணமாகலாம் எனவும் அறிவிக்கப்பட் டுள்ளது. மார்ச் 07 இல் நடந்த பொதுத் தேர்தலையடுத்து இன்னும் அரசாங்கம் அமையவில்லை. அரசாங்கத்தை அமைக்க ஈரானின் உதவியைக் கோருவது ஈராக்கின் அபிவிருத்தி, பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் இதன் போது பேசப்படவுள்ளன.
பிரதமர் நூரி அல் மாலிகி அரசாங்கத்தை அமைத்து பிரதமர் பதவியை பாதுகாப்பதற்கான பிரயத்தனங்களில் இறங்கியுள்ளார். இன்னும் சொற்ப ஆசனங்களே அரசாங்கத்தை அமைக்கத் தேவைப்படுகின்றன. இந்நிலையில் அம்மார் அல் ஹகிம் தலைமையிலான கட்சி 17 ஆசனங்களை வென்றுள்ளது. இது ஈரானுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள கட்சியாகும்.
ஈரானின் உதவியுடன் இக்கட்சியின் ஆதரவைப் பெறும் நோக்கம் பிரதமருக்குண்டு. ஈரானின் உதவியை இவ்விடயத்தில் நூரி அல் மாலிகி கோரவுள்ளார்.
அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் கூடிய கவனத்தை கொண்டுள்ள ஷியா தலைமையிலான பிரதமரின் கட்சி முக்கியஸ்தர்கள் இது தொடர்பாக வெளிநாட்டுப் பயணங்களையும் மேற் கொண்டுள்ளனர். மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களையும் தூது விட்டுள்ளனர். லெபனான் ஜனாதிபதி மைகல் சுலைமானை சவூதி அரேபியாவுக்குச் சென்று பேசுமாறும் ஈராக் பிரதமர் கோரியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அங்கு சென்றுள்ள மைகல் சுலைமான் சவுதி மன்னருடன் ஈராக்கில் அரசாங்கம் அமைவது தொடர்பாகப் பேசவுள்ளார். இதற்கு முன்னர் பிரதமர் நூரி அல் மாலிகி சிரியா சென்றமையும் தெரிந்ததே.


0 commentaires :

Post a Comment