மட்டக்களப்பில் காணாமல் போன மட்டு. மாநகரசபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணியை அடுத்த சபை அமர்வுக்குள் கண்டுபிடித்து தருமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சபாநாயகரிடம் ஒருமித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாதாந்தம் நடைபெறும் கிழக்கு மாகாணசபை அமர்வில் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சி. சந்திரகாந்தனால் 2011 ஆண்டிற்கான நிதிப் பிரேரணை சமர்பிக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தின் மாகாண நூதன சாலைகள் நியதிச் சட்டமும் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற மாகாணசபைகள் கூட்டத்தொடரில் மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் உறுப்பினர்கள்; பாதுகாப்பு தொடர்பான அவசர பிரேரணை வாசிக்கப்பட்டது. இதில் உறுப்பினருக்கு வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பில் உருவாகும் நடைமுறைச் சிக்கல் தொடர்பாக கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இப்பிரேரணை மீது உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா, மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக உத்தரவாதப்படுத்தப்படுவதுடன் காணாமல்போன மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணியை விரைவாக கண்டுபிடித்து தரவேண்டும்.
அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தி அவர் தொடர்பான முடிவினை பெற்றுத்தர வேண்டும் என சபாநயகரிடம் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் எஸ்.புஸ்பராசா அவர்களால் காணாமல் போன தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அரசியற் கட்சியின் அங்கத்தவரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான சகாயமணியின் கடத்தல் தொடர்பான கண்டணப் பிரேரணை சமர்பிக்கப்பட்டது.
நாட்டில் சமாதானம் ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து செயற்பட்டு வரும் இவ் வேளையில் இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மனதில் அச்சத்தினையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அடுத்து வரும் சபை அமர்வுக்குள் இவரை கண்டுபிடித்துத் தரவேண்டும் என சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். இப்பிரேரணை முடிவில் உரையாற்றிய இரா.துரைரெட்ணம் யுத்தம் முடிவடைந்த இவ்வேளையில் யாரேனும் ஒருவர் தவறிளைத்தால் அவர்முறைப்படி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மாறாக இவ்வாறாக கடத்தப்பட்டுக் காணாமல் போகும் சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது இதனைத் நான் வன்மையாக கண்டிக்கிறேன் எனத் தெரிவித்தார்.
காணாமல் போன உறுப்பினர் எதிர்வரும் சபை அமர்வுக்குள் கண்டுப் பிடிக்கப்பட வேண்டும் இல்லையேல் அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தேடிக் கண்டறியப்பட வேண்டும். அது பொலிஸாரின் கடமையாகும். தவறும் பட்சத்தில் எதிர்வரும் சபை அமர்வுகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என மிகவும் உரத்த தொனியில் கூறினார்.
0 commentaires :
Post a Comment