ஈரான், ரஷ்ய உறவுகளைப் பகைக்க அன்காரா விரும்பவில்லை
அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக துருக்கி இக்கட்டான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. ஐரோப்பாவில் அமெரிக்கா நிறுவவுள்ள ஏவுகணைப் பாதுகாப்புத் தளங்களை ஆதரிப்பதா இல்லையா என்ற தீர்மானத்துக்கு வரவேண்டிய நிலை துருக்கிக்கு ஏற்பட்டுள்ளது. இதை ஆதரித்தால் அண்டைய நாடுகளின் உறவுகளை (ஈரான், ரஷ்யா) முறித்து கொள்ள நேரிடும்.
அதே வேளை எதிர்த்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் அதிருப்தியையும் சம்பாதிக்க வேண்டி வரும். எனவே இது தொடர்பாக துருக்கி தடுமாறுகின்றது. அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தை ஏற்று அயல்நாடுகளை பகைத்துக் கொள்வதா, அயல் நாடுகளின் உறவுகளைப் பேணுவதா இந்த இரண்டு தெரிவுகளே துருக்கியின் கைகளில் உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.
புரூஸெல்ஸின் தலைநகர் பெல்ஜியத்தில் கடந்த வாரம் நேட்டோ நாடுகளின் கூட்டம் இடம் பெற்ற போது இவ் விடயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. நேட்டோ அமைப்பிலுள்ள நாடுகள் சில (பிரிட்டன், பிரான்ஸ்) படைகளைக் குறைத்து, பாதுகாப்புச் செலவினங்களை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளன. இந் நிலையில் போலந்து, உக்ரைனில் இந்த ஏவுகணைத் தளங்களை அமைக்கவுள்ள அமெரிக்கா ஏனைய நாடுகளையும் இதில் இணையும் நம்பிக்கையை ஏற்படுத்தவுள்ளது.
இவ்வாறு அமைக்கப்படும் ஏவுகணைத் தளங்கள் ராடர் கருவிகள் என்பன தங்களைக் குறிவைக்கும் நோக்கம் கொண்டவையென ஈரான், ரஷ்யா என்பன சந்தேகிக்கின்றன. இதனால் இத்திட்டத்தை இந்நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன. துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் இது பற்றிக் கூறுகையில், ஆம் என்ற முடிவை எடுத்து அயல்நாடுகளுடன் மோதலை உண்டாக்கும் சூழலை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை.
இன்னும் இது குறித்து ஆழமாக சிந்திக்கின்றோம். ஈரானிடமிருந்து மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையிலும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் துருக்கி வெளிநாட்டமைச்சர் சொன்னார்.
2003 ம் ஆண்டு ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட போது நேட்டோ படைகளை துருக்கியூடாக ஈராக்கிற்கு அனுப்புவதற்கு அனுமதி கேட்கப்பட்டபோதும் துருக்கி இதை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது. அயல்நாடுகளின் உறவுகளில் நாம் கவனமாக உள்ளோம் என்றும் துருக்கி பாதுகாப்பு அமைச்சர் விளக்கினார்.
இதில் இணையுமாறு நாம் துருக்கியை நெருக்கவில்லை யென்றார் அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளிண்டன்.
0 commentaires :
Post a Comment