10/27/2010

பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், மற்றும் அவ்வமைப்பின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான ஆகியோர் இருவரும் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் இருவரும் மரணமடைந்துவிட்டதால் அவர்களது பெயர்கள் நீக்கப்படலாம் என்ற மத்தியப் புலனாய்வுத்துறை (சி.பி,ஐயின்) எம்.டி.எம்.ஏ எனும் கண்காணிப்புக்குழுவின் பரிந்துரையின் பேரில், பெயர் நீக்க உத்தரவை பயங்கரவாதக் குற்றங்களை விசாரிக்கவென அமைக்கப்பட்டிருக்கும் தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி பிறப்பித்திருக்கிறார்.
இதனையடுத்து முதன்மைக் குற்றவாளி பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுகின்றன என்று நீதிபதி தட்சிணாமூர்த்தி கூறியுள்ளார்.
அதே நேரம் எம்.டி.எம்.ஏ பிரிவு தொடர்ந்து புலனாய்வு செய்து அவ்வப்போது தனது அறிக்கைகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கும் எனவும் நீதிபதி கூறியிருக்கிறார்.
சி.பி.ஐ இடமிருந்து கருத்து இல்லை
அண்மைக் காலம் வரை பிரபாகரன் மரணம் குறித்து அதிகார பூர்வமாக கருத்தெதுவும் தெரிவிக்காத இந்திய அரசு இப்போது பிரபாகரன், மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் மரணமடைந்து விட்டதால் அவர்கள் மீதான வழக்கு முடித்துக் கொள்ளப்படலாம் என்று அறிவிக்க வேண்டிய அவசியமென்ன என்று பலரும் வியக்கிறார்கள்.
சி.பி.ஐ வட்டாரங்கள் இத்திருப்பம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.
ராஜீவ் கொலை வழக்கின் போது நளினி மற்றும் முருகன்
ராஜீவ் கொலை வழக்கின் போது நளினி மற்றும் முருகன்
ஆறு மாதங்களுக்கு முன்பு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் கொலை வழக்கிலும், முதல் இரு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் இருவரும் இறந்துவிட்டதால், அவர்கள் மீதான வழக்கை முடித்துவிடலாம் என்று கொழும்பு போலீசார் கூறியிருந்தனர்.
இதன் பின்னணியில் தான் சிபிஐயும் சென்னை தடா நீதிமன்றத்திடம் அவ்வாறு மனுச் செய்ததாகவும், ஆனால் அப்போது பிரபாகரனின் மரணச் சான்றிதழ் அல்லது வேறு ஏதாவது ஆதாரம் வேண்டும் என்ற தடா நீதிமன்றம், தற்போது அத்தகைய ஆவணங்கள் ஏதுமில்லாமல், பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் தொடர்பாக கடந்த மாதம் சி.பி.ஐ சமர்ப்பித்த வேறு ஒரு மனுவை ஏற்று இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
1991 ஆம் ஆண்டு மே 21ஆம் நாள் ஸ்ரீ பெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் 16 பேர் கொலையுண்டது தொடர்பான வழக்கில் 26 பேர் மீது குற்றஞ் சாட்டப்பட்டது.
தடா நீதிமன்றம் அவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. ஆனால் இந்திய உச்சநீதிமன்றம் 1999 ஆம் ஆண்டில் நளினி உட்பட நால்வருக்கு தூக்கு தண்டனை விதித்தும் மற்றவர்களுக்கு பல்வேறு கால அளவுகளில் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தது.
பின்னர் நளினியின் தூக்கு தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது, மற்ற மூவரின் கருணை மனுக்கள் மீதான குடியரசுத் தலைவரின் முடிவு என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
 

0 commentaires :

Post a Comment