ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் வெளிநாடுகளில் நடைபெற்றன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசியல் தீர்வில் அறவே அக்கறை இல்லை என்பதையும் புலிகள் அரசியல் தீர்வை விரும்பவில்லை என்பதையும் அறிந்தவர்கள் இப் பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்பு எனக் கூறிய போதிலும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினை தீரப்போகின்றது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்குப் பெரிதாக நம்பிக்கை ஊட்டியது.
எந்தத் தரப்புக்கும் கருத்தீடுபாடு இல்லாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கூட்டு முயற்சியும் பலனளிக்காது என்பதைக் கூட்டணித் தலைவர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லையோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினதும் புலிகளினதும் உண்மையான குணாம்சத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லையோ தெரியாது. அந்தப் பேச்சுவார்த்தையில் அளவுக்கதிகமாக நம்பிக்கை வைத்தார்கள். ஒஸ்லோ அறிக்கையில் சமஷ்டித் தீர்வு பற்றிக் குறிப்பிட்டிருந்ததைத் தங்கள் நம்பிக்கைக்கு ஆதாரமாகக் காட்டினார்கள்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வழிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் துணைபோகும் தங்கள் செயலை நியாயப்படுத்துவதற்காக அடிக்கடி ஒஸ்லோ அறிக்கையில் தொங்கினார்கள். சமஷ்டித் தீர்வை ஏற்றுக்கொண்டுள்ளது என்று கூறினார்கள்.
சமஷ்டி முகமூடியை இப்போது திஸ்ஸ அத்தநாயக்க கழற்றி எறிந்துவிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி சமஷ்டி நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டது என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டார். இப்போது சமஷ்டியும் இல்லை. வேறு தீர்வுத்திட்டமும் இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சியுடனான தேன்நிலவை நியாயப்படுத்துவதற்கு இப்போது ‘தமிழ்த் தேசியத்’ தலைவர்கள் என்ன சொல்லப்போகின்றார்கள்?
இந்த அறிவிப்பின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி அதன் ‘வெறுமையை’ வெளிப்படுத்திவிட்டது.
புலிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சூழ்நிலையிலேயே சமஷ்டித் தீர்வு முன்வைக்கப்பட்டதாகவும் இப்போது ஆயுதப் போராட்டம் இல்லாததால் அரசியல் தீர்வு தேவையில்லை என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகின்றார். இவர் கட்சியின் சாதாரண ஆதரவாளரல்ல. பொதுச் செயலாளர். இவர் வெளியிடுபவை கட்சியின் உத்தியோபூர்வமான கருத்துகள்.
அரசியல் தீர்வு கிடைக்காததாலேயே ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது என்பதை ஏற்றாக வேண்டும். அரசியல் தீர்வு கிடைக்காததற்கு யார் பொறுப்பாளி என்பதையும் ஆயுதப் போராட்டம் சரியான வழியில் சென்றதா என்பதையும் இதனுடன் போட்டுக் குழப்பக் கூடாது.
ஆயுதப் போராட்டம் தலையெடுக்காமல் தடுப்பதற்கே அரசியல் தீர்வு தேவை.
ஆயுதப் போராட்டம் இல்லாததால் அரசியல் தீர்வு வேண்டாம் என்கின்றது ஐக்கிய தேசியக் கட்சி.
அரசியல் தீர்வு இல்லையென்றால் ஆயுதப் போராட்டம் பற்றிய சிந்தனை தோன்றுமே. அது தான் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தேவையா?
0 commentaires :
Post a Comment