10/31/2010

கிழக்கு மாகாண மக்கள் அரசியல் அரங்கில் இருந்த நிலையிலிருந்து உயர்வான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கின்றார்கள்.



பதின்மூன்றாவது அரசிய லமைப்புத் திருத்தத்தை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடித்துக் கூறுவது இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் பிரதான தடைக்கல்லாக இருக்கின்றது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள் மத்தியில் எண்ணிக்கையில் கூடுதலான பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வு நடைமுறையில் பிரதான பங்காளியாக இருக்க வேண்டிய அவசியத்தைக் கூட்டமைப்புத் தலைமை உணர்ந்து செயற்படுகின்றதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
அரசியல் தீர்வை அடைவதற்குத் தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்று ஜனாதிபதி அண்மையில் கூறியதில் அர்த்தம் உண்டு. தீர்வு முயற்சியை முன் னெடுப்பதற்குத் தடையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதை மனதில் வைத்தே ஜனாதிபதி அவ்வாறு கூறியிருக்க வேண்டும்.
மறுபுறத்தில் தாங்கள் தீர்வுக்குத் தடையாகச் செயற்படவில்லை என்றும் பதின்மூன்றாவது திருத்தம் பல குறைபாடுகளைக் கொண்டதாக இருப்பதாலேயே அதை எதிர்ப்பதாகவும் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றார்கள்.
பதின்மூன்றாவது திருத்தத்தில் குறை பாடுகள் உள்ளன என்பதை மறுப்ப தற்கில்லை. மாகாண சபைக்குரிய விடயங்கள் தொடர்பாகப் பாராளுமன் றம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையு டன் சட்டம் இயற்றுவதற்கான ஏற் பாடு, மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் எவற்றையாவது தேசியக் கொள்கைக்கு உட்பட்டதெனப் பிரகடனப் படுத்துவதன் மூலம் அவற்றை மத்திய அரசாங்க பட்டி யலுக்குள் கொண்டு வரக்கூடிய ஏற்பாடு, பொலிஸ் அதிகாரங்கள் வழ ங்கப்படாமை என்பன மாகாண சபை அமைப்பிலுள்ள பிரதான குறைபாடுகள். இக்குறைபாடுகள் உள்ளன என்பதற்காக மாகாண சபையை இன்றைய கட்டத்தில் நிராகரிக்க முடியுமா? நிராகரிப்பதால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை உண்டா? இவை விடை காண வேண்டிய வினாக்கள்.
இனப் பிரச்சினைக்கு முழுமையானது எனக் கருதக் கூடிய தீர்வை உட னடியாகப் பெறுவது சாத்தியமில்லை. டொனமூர் அரசியலமைப்பு, சோல்பரி அரசியலமைப்பு, குடியரசு அரசிய லமைப்பு எனக் கட்டங்கட்டமாக இல ங்கை அதன் சுதந்திரத்தை உறுதிப் படுத்தியது போலவே இனப் பிரச் சினைக்கான இறுதித் தீர்வையும் கட்டங்கட்டமாக அடைய வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். அவ்வாறான கட்டங்களுள் ஒன்றாகவே இப்போது பதின்மூன்றாவது திருத்தம் இருக்கின்றது.
பதின்மூன்றாவது திருத்தத்தை நிரா கரிப்பதானால் அதனிலும் பார்க்கக் கூடுதலான ஒரு கட்டத் தீர்வுக்குச் செல்லக்கூடிய சாத்தியக்கூறு இருத்தல் வேண்டும். அவ்வாறான சாத்தியம் இப்போது இல்லை.
மாகாண சபையிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு நிச்சயமாக அரசியலமைப்புத் திருத் தத்துக்கூடாகவே நடைமுறைக்கு வர முடியும். சர்வசன வாக்கெடுப்பும் தவிர்க்க முடியாதது. சர்வசன வாக் கெடுப்பு அகில இலங்கை மட்டத்தில் நடைபெறுவதென்பதால் அரசியல் தீர்வை அங்கீகரிப்பதற்குச் சிங்கள மக்களின் ஆதரவு அத்தியாவ சியமானது. அதாவது நியாயமான அரசியல் தீர்வை அடைய வேண் டுமானால் சிங்கள மக்களில் கணிசமானோரின் ஆதரவு அவசியம். இந்த ஆதரவு இப்போது இல்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
தமிழ் அரசியலை வழி நடத்தியவர்கள் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக் களுக்குமிடையே இடைவெளியொ ன்று வளர்ந்து வரும் வகையிலேயே செயற்பட்டிருக்கின்றார்கள். இச் செயற்பாடு அவர்களின் அரசியல் அந்தஸ்தைத் தக்க வைக்க உதவியதேயொழிய இனப் பிரச் சினைக்கான தீர்வை வெகுதூரம் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இதைப் பற்றி இப்போது அதிகம் பேசுவதால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதிலேயே இப்போது கவனம் தேவை.
அரசியல் தீர்வுக் கோரிக்கையைச் சிங்கள மக்கள் பிரிவினைக்கான முஸ்தீபாகப் பார்க்கும் நிலை புதிய ஒரு வளர்ச்சிப்போக்காகும். குறிப்பிட்டுக் கூறுவதானால், பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வு முயற்சி தோல்வி அடைந்ததற்குப் பிந்திய வளர்ச்சிப்போக்கு. அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு தெரிவித்து வந்த தமிழ்த் தலைவர்கள் இறுதி நேரத்தில் அதை எதிர்த்ததோடு நிற்காமல் புலிகளின் தனிநாட்டு அரசியலுக்குள் சங்கமமாகியதன் விளைவாகவே அரசியல் தீர்வுக் கோரிக்கையைச் சிங்கள மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை தோன்றியது.
இப்போது காரணகாரியம் பேசிக் கொண்டிராமல் சிங்கள மக்களை அரசியல் தீர்வின் பக்கம் வென்றெ டுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ்த் தலைவர்கள் இறங்க வேண் டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இது முக்கியமான முன்தேவை. முதலாவதாகத் தமிழ் மக்களின் அரசியல் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். தென்னிலங்கை அரசியல் அரங்கில் நட்பு சக்திகளை இனங்கண்டு அவர்களுடன் தேசிய மட்டத்தில் இணைந்து செயற்படுவதன் மூலம் சிங்கள மக்களை வென்றெடுப்பது சாத்தியமாகும். இது ஒரு நீண்டகால நடைமுறை. உடனடிப் பலனை எதிர்பார்க்க முடியாது.
நியாயமான அரசியல் தீர்வை அடைவதற்குச் சிங்கள மக்களின் ஆதரவு அத்தியாவசியமானது என்பதையும் அம்மக்களை அரசியல் தீர்வின் பக்கம் வென்றெடுப்பது நீண்ட கால நடைமுறைக்கூடாகவே சாத்தியமாகும் என்பதையும் கவனத்தில் எடுத்துப் பார்க்கையில், பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு உடனடியாகச் சாத்தியமில்லை என்பது புரியும். இந்த நிலையில் பதின்மூன்றாவது திருத்தத்தை நிராகரிப்பது புத்திசாலித்தனமான தல்ல.
குறைபாடுகளுடைய தீர்வை ஏற் றுக்கொள்வதா என்ற கேள்வி அடு த்து எழலாம். குறைபாடுகள் உள்ள போதிலும் மாகாண சபைகளினால் மக்கள் நன்மை அடைகின்றார்கள் என்பதை அனுபவத்தில் காண்கிறோம். மாகாண சபை முறை மக்கள் எதிர் பார்க்கும் எல்லா உரிமைகளையும் தராத போதிலும் இழப்புகள் எதுவும் இடம் பெறுவதில்லை. இழப்புகள் எதுவும் இல்லாததும் சில உரிமைகளை வழங்குவதுமான மாகாண சபைகளை ஏற்றுக்கொள்வதில் ஒரு தவறும் இல்லை. மாகாண சபைகளை ஏற்றுச் செயற்படுத்துகின்ற அதேவேளை குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளலாம். நிதானமாக மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை மூலம் குறைபாடுகளுக்குத் தீர்வு காண்பது சிரமமானதாக இருக்காது.
அரசியல் தலைவர்கள் எப்போதும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலனில் அக்கறை உடை யவர்களாக இருக்க வேண்டும். பதின்மூன்றாவது திருத்தம் போதுமான தல்ல எனக் கூறி நிராகரிக்கும் போது அடுத்த கட்ட நகர்வுக்கான சாத்தியம் உண்டா என்பது பற்றியும் நிராகரிப்புக்குப் பின் மக்களுக்கு ஏதா வது நன்மை கிடைக்குமா அல்லது அவர்களின் துன்பம் தொடருமா என்பது பற்றியும் நிதானமாகச் சிந்தித்தே முடிவுக்கு வர வேண்டும்.
பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அடுத்த கட்ட நகர்வு உடனடியாகச் சாத் தியமில்லை என்பதை மேலே பார்த்தோம். அடுத்த கட்ட நகர்வு சாத்தியமில்லை என்பதன் அர்த்தம் வேறொரு தீர்வு சாத்தியமில்லை என் பதாகும்.
பதின்மூன்றாவது திருத்தத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்தால் மக்கள் இப்போது அனுபவிக்கும் துன்பம் தொடர்கதையாகவே முடியும். படிப்படியாக அரசியல் தீர்வை அடைவது என்ற கோட்பாடு மக்க ளின் நாளாந்த வாழ்க்கையிலும் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதுடன் இணைந்தது.
கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் மாகாண சபை மூலம் அனுபவிக்கும் நன்மைகள் இன்று வட மாகாண மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாண மக்கள் இருந்த நிலையிலிருந்து உயர்வான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கின்றார்கள். வட மாகாண மக்களும் அந்தக் கட் டத்தை அடைவதற்குத் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு வழிவிட வேண்டும்.
கடந்த காலத் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தீர்வும் முன்வைக்கப்பட்ட வேளைக ளில் அவற்றிலும் பார்க்க மேலான தீர்வே தேவை எனக் கூறித் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்திருக்கின்றார்கள். அதன் விளைவு தமிழ் மக்களுக்கு வேதனையும் விரக்தியுமாகவே மிஞ்சியிருக்கின்றது. தீர்வு முயற்சியும் வெகுவாகப் பின்தள்ளப்பட்டுவிட்டது.
இப்போதாவது சரியான முடிவை நம் தலைவர்கள் எடுப்பார்களென நம்பலாமா?

0 commentaires :

Post a Comment