10/16/2010

ஜனாதிபதி மஹிந்த - பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டில்லியில் சந்தித்துப் பேச்சு இலங்கை-இந்திய ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேச்சு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மிடையிலான சந்திப்பொன்று நேற்றுக் காலை புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொள்ள புதுடில்லி சென்றிருந்த போது இந்தச் சந்திப்பு இடம்பெற் றுள்ளது.
இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு மிகவும் சுமுகமான நிலையில் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்த போது இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகளை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வது பற்றி இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சு நடத்தியுள்ளனர்.
இந்திய அரசின் உதவியுடன் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நிறைவுசெய்யக் கூடியதாக இருக்குமென இத்திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் அறிவித்துள்ளதுடன், அதன் எதிர்கால திட்டங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, இரு நாடுக ளுக்குமிடையில் ஏற்படுத்திக் கொள் ளப்பட்டுள்ள பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட்டுள்ளதோடு, நாட்டில் பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்க கூடியதுடன், அதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை இந்தியப் பிரதமர் பாராட்டினார்.
இதன்போது, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் செயற்பாடு பற்றியும் அதில் அரசாங்கம் அடைந்திருக்கும் வெற்றிகரமான முன்னேற்றம் பற்றியும் இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி விளக்கினார்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு விடுவிக்கப்பட்ட அழைப்பையேற்று வருகை தந்தமையானது தமக்கும் தமது நாட்டுக்கும் கெளரவமானதென்று தெரிவித்த இந்தியப் பிரதமர் அதற்காக விசேடமான நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன் இந்தியப் பிரதமர் ஜனாதிபதிக்கு விசேட பகல் போசன விருந்தளித்துக் கெளரவித்தார்.
புதுடில்லியில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பில் இந்திய அரசு சார்பில், உள்த்துறை அமைச்சர் ப. சிதம்பரம், வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, வெளிவிவகார செயலர் நிருபமா ராவ், கீழ்ச் சபை எதிர்க் கட்சித் தலைவர் அனோஜ் ஜெட்லி உள்ளிட்டோரும், இலங்கை அரசின் சார்பில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் இணைப்புச் செயலர் சஜின் வாஸ்குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, வெளிவிவகாரச் செயலர் ரொமேஸ் ஜயசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment