இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் இலங்கை 72 வருடங்களின் பின்னர் குத்துச்சண்டையில் முதலாவது தங்கப் பதக்கத்தை நேற்று வென்றது. 56 கிலோகிராம் எடைப் பிரிவில் குத்துச் சண்டைப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை வீரர் மஞ்சு வன்னியாராச்சி இலங்கைக்கான முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்.
இலங்கை நேரப்படி நேற்று மாலை 3.20 அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இலங்கை வீரர் மஞ்சு வன்னியாராச்சி வேல்ஸ் நாட்டின் சீன் மெக் கோல்ரீக் என்பவருடன் மோதினார். இந்தப் போட்டியில் 16-14 புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டினார்.
கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட மஞ்சு வன்னியாராச்சி (வயது 30)க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உடனடியாக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் ஊடாக ஜனாதிபதி உடனடியாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இப்போட்டிக்காக புதுடில்லி சென்றுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் சீ. பி. ரத்னாயக்கவும் மஞ்சுவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பொதுநலவாய போட்டிகளில் 56 கிலோ கிராம் எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை பெற்ற இரண்டாவது தங்கப்பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னர் 1933 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை 56 கிலோ எடைப்பிரிவு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது.
அதன்பின்னர் 1950 ஆம் ஆண்டு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை இலங்கை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசத்தின் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஞ்சுவுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தபோது
மஞ்சு வன்னியாராச்சி ஜனாதிபதியுடன் உரையாடினார். அதன் பின்னர் கருத்து தெரிவித்த மஞ்சு வன்னியாராச்சி விளையாட்டுத்துறைக்காக ஜனாதிபதி காட்டும் அக்கறை, ஆர்வம் தொடர்பாக தான் மிகவும் மகிழ்வதாக தெரிவித்தார்.
1995, 1996, 2004, 2005 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு குத்துச்சண்டைப் போட்டிகளில் மூன்று தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களையும் மஞ்சு வன்னியாராட்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment