10/09/2010

இஸ்ரேல், அமெரிக்கா ஆயுத கொள்வனவு உடன்படிக்கை; அரபு நாடுகள் அச்சம் மத்திய கிழக்கில் ஈரான், சிரியாவின் செல்வாக்கை மட்டுப்படுத்த திட்டம்

இஸ்ரேல், அமெரிக்காவிடையே பாரிய ஆயுதக் கொள்வனவு உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இது இடம் பெற்றது.
அமெரிக்க, இஸ்ரேல், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இந்த ஆயுத உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். 2.75 பில்லியன் டொலர் செலவில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய இஸ்ரேல் தயாராகவுள்ளதுடன், இதை வழங்க அமெரிக்காவும் இணங்கியுள்ளது.
இந்த உடன்படிக்கை மூலம் ஆயிரக்கணக்கானோர் தொழில் வாய்ப்புகளைப் பெறவுள்ளனர். இஸ்ரேலுக்கான ஆயுதங்களைப் புதிதாக தயாரிக்கும் வேலைகள் ஆரம்பமானதும் இவர்கள் தொழில் வாய்ப்பைப் பெறுவர். முதற்கட்டமாக நூறு மில்லியன் டொலர் பெறுமதியான ஜெற் விமானங்களை இஸ்ரேல் வாங்கவுள்ளது இருபது எப்-35 ரக ஜெட் விமானங்களே இஸ்ரேலுக்கு வழங்கப்படவுள்ளன. இவை நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மிக உக்கிரமாகப் போரிடும் ஆற்றலைக் கொண்ட இந்த ஜெற் விமானங்கள் மத்திய கிழக்கில் வேறு எந்த நாடுகளிடமும் இல்லை. இஸ்ரேல் சுயமாக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அமெரிக்கா அந்நாட்டுக்கு ஆயுதங்களை வழங்கவுள்ளது.
சிரியா, ஈரான், லெபனான் போன்ற நாடுகளின் ஆதிக்கத்தை மத்திய கிழக்கில் கட்டுப்படுத்தவும் இந்நாடுகளிடமிருந்து இஸ்ரேல் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், சவால்களை முறியடிக்கவே இந்த நவீன ரக ஆயுதங்களைப் பெறுவதாக அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதுவர் தெரிவித்தார்.
ஈரானின் செல்வாக்கை மேலும் மட்டுப்படுத்த சவூதி அரேபியாவுக்கும் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அமெரிக்காவின் இச் செயற்பாடு மத்திய கிழக்கில் பெரும் மோதலைத் தூண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தடைப்பட்டுப் போயுள்ள மத்தியகிழக்கு நேரடிப் பேச்சு வார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகளை முன்னெடுத்துள்ள அமெரிக்காவின் இச் செயற்பாடு அனைவரையும் திகைக்கச் செய்துள்ளது. பத்து மாதங்களாக இஸ்ரேல் இடை நிறுத்தியுள்ள யூதக்குடியேற்றங்களை மேலும் விஸ்தரிக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் இஸ்ரேலிடம் அமெரிக்கா முன் வைத்துள்ளது.
ஆனால் இரண்டு மாதங்களுக்கு இக் குடியேற்ற நிறுத்த வேலைகளை விஸ்தரிக்க இஸ்ரேல் இணங்கும் என அந்நாட்டின் அதிகாரியொருவர் சொன்னார். இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள், குடியேற்ற வேலைகளை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன் யாஹுவுக்கு கடிதம் அனுப்பியதாக கடந்த வாரம் வெளியான செய்திகளை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
2015 ம் ஆண்டுக்கும் 2017 ம் ஆண்டுக்குமிடையில் இஸ்ரேலின் விமானப் படையை மேலும் நவீனமாக்கும் திட்டமொன்றும் அமெரிக்க, இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகளிடையே சென்ற செவ்வாய்க்கிழமை கைச்சாத்தானதாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையில் அரபு லீக் மாநாடும் நேற்று அவசரமாகக் கூடியது.

0 commentaires :

Post a Comment