இலங்கை மீது வெளிநாடுகளினதும் சர்வதேச நிறுவனங்களினதும் அழுத்தங்கள் ஏற்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே காரணகர்த்தாவாக இருந்தாரென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
அமைச்சர் ஜீ. எல். பீரிஸ¤க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
நியாயமான விடயங்கள், பலமான அடித்தளம் என்பவற்றின் அடிப்படையிலே நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று முன்வைக்கப்பட வேண்டும். பாராளுமன்ற வரலாற்றில் குறுகிய காலத்தில் விவாதிக்கப்படுவது இந்த நம்பிக்கையில்லா பிரேரணையே. இதனை துரிதமாக விவாதத்துக்கு எடுக்குமாறு நானே அரசை கோரியிருந்தேன்.
ஜீ. எஸ். பி. சலுகை பெற என்னால் முடியாமல் போனதாக குற்றஞ்சாட்டப் படுகிறது. இந்த சலுகையை 5 நிமிடத்தில் பெற்றிருக்கலாம். ஜீ. எஸ். பி. சலுகை
பெற 15 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்தது. இதனை பெறுவதால் நன்மையா? தீமையா என நாம் யோசிக்க வேண்டியிருந்தது.
ஜனாதிபதியின் தலைமையின் கீழ் அமைச்சரவை கூடி இந்த நிபந்தனைகளை நிராகரித்தது. இறைமையுள்ள அரசாங்கம் என்ற வகையில் இந்த நிபந்தனைகள் குறித்து சிந்திக்கக்கூட முடியாது.
ஜீ. எஸ். பி. பிளஸ் குறித்து நாம் இதனுடன் தொடர்புடைய வியாபாரிகளை அழைத்துப் பேசினோம். எமக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், சகல வியாபாரிகளும் இந்த நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என கோரினர்.
வெளிநாட்டு அரசாங்கமொன்று வேறு நாட்டுக்கு இவ்வாறு கூற முடியுமா?
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை விடயத்தில் தலையிட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுக்கு சென்று கருத்துக் கூறினார். உலகில் எங்கும் கட்சித் தலைவர் ஒருவர் தனது நாட்டுக்குத் தலையிடுமாறு வெளிநாட்டை கோருவதுண்டா?
அரசியல் தலைவர்களுக்கு சுயகெளரவம் இருக்க வேண்டும். தன்னால் முடியாததை வெளிநாடுகளைக் கொண்டு நிறைவேற்ற ரணில் விக்கிரமசிங்க முயன்றார்.
ஜீ.எஸ்.பி. பிளஸ் தொடர்பாக 2008 மே 12ஆம் திகதி பிரசல்ஸ்ஸில் கூட்டம் நடைபெற்ற போது, நான் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் என்ற வகையில் பங்குபற்றினேன். அந்த கூட்டத்துக்கு முன் ஐரோப்பிய ஒன்றிய தலைவருக்கு ரணில் விக்ரமசிங்க கடிதம் அனுப்பிருந்தார். அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் போதுமாக இல்லையென அவர் கூறியிருந்தார்.
ஜீ.எஸ்.பி. சலுகை கிடைப்பதை குறுகிய அரசியல் இலாபம் பெறுவதற்காக யார் தடுத்தது?
18 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு முன் அது குறித்து ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு சென்று விமர்சித்திருந்தார்.
சீனாவில் கூடுதலாக இரு நாட்கள் தங்கியதாகவும் இதனால் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. நான் அங்கு 7 நாட்கள் தங்கி னேன். சீனாவுடனான சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து இந்த இரு நாட்களிலும் பேச்சு நடத்தினேன். இலங்கை வியாபாரிகள் 10 பேர் என்னுடன் வந்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து வர்த்தக உறவு குறித்து பேசினேன். இந்த இரு நாட்களுக்குமான செலவை எமது அரசே மேற்கொண்டது. சீன அரசு எதுவும் செய்யவில்லை. இந்தக் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்யாகும்.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சரை நானும் பெசில் ராஜபக்ஷவும் சந்தித்தோம். அந்த சந்தர்ப்பத்தில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து வெப்தளங்களில் செய்தி வெளியானது. இதனால் எமது நாட்டுக்கே பாதிப்பு ஏற்பட்டது. நாட்டை பாதுகாக்க கஷ்டப்படுபவர்களுக்கு எதிராக நாட்டை காட்டிக்கொடுப்பவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
ஐ. நா. அமர்வின் போது ஜேர்மனி ஜனாதிபதியையும் அமெரிக்க ராஜாங்க செயலாளரையும் சந்திப்பதற்கு நாம் கோரிக்கை விடுத்ததாகவும் எதிர்க்கட்சி கூறியது. ஆனால் நாம் ஒருபோதும் அவ்வாறு கோரவில்லை. ஜனாதிபதி ஐ. நா. அமர்வில் பேசுகையில் மண்டபத்தில் யாரும் இருக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் ஜனாதிபதி பேசும் போது மண்டபம் நிரம்பியிருந்தது.
எமக்கு உலக வங்கியின் மூன்றாவது தவணை கடனும் கிடைத்தது. வழமையாக எம்மை எதிர்க்கும் ஜேர்மனியும் பிரித்தானியாவும் எமக்கு ஆதரவாக வாக்களித்தன.
பொதுநலவாய நாடுகளின் ஆதரவைப் பெற முடியாது போனதாக அடுத்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 118 நாடுகள் உள்ளன. இவற்றிடையே வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன.
அந்த நாடுகள் தெளிவாக எமக்கு ஆதரவு வழங்கின. இலங்கைக்கு எதிராக ஐ.நா. செயலாளர் விசாரணைக் குழு அமைப்பதை அவை எதிர்த்தன.
எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முடிவு செய்த பின்னரே எனக்கு எதிராக முன்வைக்க குற்றச்சாட்டுகள் தேடப்பட்டன.
ஜனாதிபதியின் கீழ் பணிபுரியும் போது நாம் செய்யும் பணிகளை ஜனாதிபதி பாராட்டி ஊக்குவிப்பார். ஆரம்ப காலம் முதலே நான் கஷ்டப்பட்டு செயற்பட்டதாலே நான் இந்தளவு உயர் நிலைக்கு வந்தேன்.
இந்தப் பிரேரணையால் என் மீதான நம்பிக்கை கடுகளவேனும் குறையப் போவதில்லை.
0 commentaires :
Post a Comment