10/07/2010

இந்தியாவில் புதிய மொழி

  இந்தியாவின் வடகிழக்கில் தொலைதூரத்து ஒதுக்குப்புறப் பகுதி ஒன்றில் புதிய மொழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோரோ என்று அழைக்கப்படும் இந்த மொழி இந்தியாவின் வடகிழக்கில் இமயமலை பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் பேசப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் மொழி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தின்போது இனம் காணப்பட்டுள்ள இந்தக் கோரோ மொழி, அது சார்ந்த மொழிக் குடும்பத்திலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் மாறுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஆய்வு
நேஷனல் ஜியாகரஃபிக் தொலைக்காட்சிக்காக அழிந்து வரும் மொழிகள் குறித்த ஒரு நிகழ்ச்சிக்கான தயாரிப்பில் நிபுணர்கள் ஈடுபட்டிருந்தபோதே மிகச் சிலரால் இந்தக் கோரா மொழி பேசப்படுவது தெரியவந்தது.
அருணாச்சல பிரதேசத்தின் தொலைதூரத்து ஒதுக்குப்புறப் பகுதிகளில் சிறிதளவே அறியப்பட்டிருந்த வேறு இரண்டு மொழிகளை தேடிச் சென்றபோதுதான், இது வரை பதிவு செய்யப்படாததும், முற்றிலும் மாறுபட்டதுமாக இருந்த இந்தக் கோரோ மொழியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மொழியானது இந்தியாவில் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கிய திபேத்திய பர்மிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் கோரோ மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய வேறு எந்த மொழியும் இந்த மொழிக் குடும்பத்தில் இல்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அழிவின் விளிம்பில்...
உலகில் தற்போது அறியப்பட்டுள்ள 6909 மொழிகளில் பாதியளவு அழிந்து போகக் கூடிய நிலையில் உள்ளது என்று கருதப்படுகிறது. அந்த வகையில் கோரோ மொழியும் பலவீனமான நிலையிலேயே உள்ளது.
கோரோ மொழி எழுத்து வடிவில் இல்லை என்பதும் அதை தற்போது 800 முதல் 1200 பேர் வரையிலானவர்களே பேசிவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment