சித்த ஆயுர்வேத மருத்துவத்தின் மீது மக்களின் நாட்டம் அண்மைக் காலமாக அதிகரித்த வண்ணமுள்ளது. இதற்குப் பிரதான காரணம் பக்க விளைவுகள் அற்ற பணச் செலவு குறைவான, நீண்டகால தேக ஆரோக்கியத்தை அளிக்கும் வல்லமை சித்த வைத்திய முறைக்கு உள்ளமையாகும்.
இதனை நன்குணர்ந்த அரசாங்கம் இந்த நடப்பு வருடத்தினை சித்த ஆயுர்வேத அபிவிருத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தி கெளரவமளித்து, இந்த வைத்திய முறையின் மகத்துவத்திற்கு மதிப்பளித்துள்ளது.
இவ்வாறு மட்டக்களப்பு மண்முனை வடக்கு சித்த ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் தலைவரான சித்த ஆயுர்வேத வைத்தியர் கே. நடராசா குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சபா மண்டபத்தில் மண்முனை வடக்கு சித்த ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் விசேட பொதுக் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்திற்கு தலைமை வகித்த சித்த ஆயுர்வேத வைத்தியர் கே. நடராசா அங்கு மேலும் பேசுகையில்:-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் ஒரேயொரு சித்த ஆயுர்வேத பாதுகாப்புச் சபையாக எமது சபை மட்டுமே இயங்கி வருகின்றது. இந்த ஆண்டில் நாம் மூன்று செயற்றிட்டங்களை அமுல்படுத்தவுள்ளோம். இதற்கு சகல சித்த ஆயுர்வேத மருத்துவர்களினதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும். இதற்கென நாம் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் உதவி, ஒத்தாசை நிதியீட்டம் என்பவற்றை எதிர்பார்க்கின்றோம்.
வரலாறு காணாத வகையில் பிரமாண்டமான மூலிகை கண்காட்சியை நடாத்துதல், பல்வேறு மூலிகைகளின் தாவரவியல் பெயர், குணப்படுத்தும் நோய்கள், குணப்படுத்தும் விஞ்ஞான ரீதியான விளக்கம் அடங்கிய கைநூலொன்றையும் வெளியீடு செய்தல், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து விட்டு பல்கலைக்கழக அனுமதி வாய்ப்பை இழந்த மாணவர்களை உள்வாங்கி சித்த ஆயுர்வேத யோகா சிகிச்சை நிலையம் ஒன்றை ஸ்தாபித்து இரண்டு வருடகால பயிற்சியளித்து இம் மாணவர்களுக்கு தராதரப் பத்திரம் வழங்கி சிறந்த சித்த ஆயுர்வேத மருத்துவர்களை உருவாக்குதல் போன்ற யோசனைகளை பிரபல யோகா சிகிச்சை நிபுணர் செல்லையா துரையப்பா முன்மொழிந்துள்ளார். நாம் அவற்றை நடைமுறைப்படுத்த சித்தமாகவுள்ளோம்.
பப்பாசி இலைச் சாற்றை பயன்படுத்தி ஆட்கொல்லி நோயான டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் வைத்திய முறையை எமது சங்க உறுப்பினரான யோகா சிகிச்சை நிபுணர் செல்லையா துரையப்பா கண்டறிந்துள்ளமை மகிழ்ச்சிதரும் விடயமாகும் என்றார்.
0 commentaires :
Post a Comment