10/28/2010

கடந்த 30 வருடங்களாக தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்கள் மேலும் தொடரக் கூடாது

   

திருகோணமலைக்கு விஜயம் செய்த பிரதமர் தி.மு. ஜயரட்ன அம்மாவட்டத்திலுள்ள இந்துக்கோயில்களின் புனரமைப்புக்கென சுமார் 231 இலட்ச ரூபாவை வழங்கினார். 231 ஆலயங்களுக்கும் தலா ஒரு இலட்ச ரூபா வீதம் வழங்கினார். திருகோணமலை அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது பிரதமர் காசோலையை வழங்குவதையும், பிரதியமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், திருமலை அரச அதிபர் ஆகியோரையும் படத்தில் காண்க      எல்லா இனத்தவர்களும் இந்த நாட்டில் சகோதரர்கள் போல வாழ வேண்டும் என்பதுதான் எமது ஜனாதிபதியின் சிந்தனை யாகும். இதனை பலப்படுத்து வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் செயல்பட வேண்டும். எந்த ஒரு காரணத்திற்காகவோ அரசியல் வாதிகளின் சூழ்ச்சிகளில் மயங்கி விடவேண்டாம். கடந்த 30 வருடகாலமாக தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்களின் சின்னமாக விதவைகளும், அனாதைகளான சிறுவர்களும், வசதியாக குடியிந்த வர்கள் வீடுகள் இல்லாத நாடோடிகள் போன்று கூடாரங் களில் வாழும் நிலைமையை முற்றதாக மாற்றி வட, கிழக்கை செழிப்புறச் செய்வதற்கான பல திட்டங்கள் அமுல் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடந்த வியாழக் கிழமை பகல் அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் கல்லோயா இந்து பரிபாலன சபையின் தலைவரும், ஆலயத்தின் தலைவருமான மாகாண சபையின் பிரதம பொறி யியலாளர் வ. கருணநாதன் தலை மையில் அம்பாறை மாவட்டத்தில் அழிந்து போன இந்து ஆலயங் களை புனரமைப்புச் செய்வதற்கு முதல் கட்டட நிதி உதவிக்கான காசோலை வழங்கும் வைபவத்தில் பிரதம மந்திரி தி. மு. ஜயரட்ன குறிப்பிட்டார்.
பிரதமரின் குழுவினரை ஆலய வளாகத்தின் முன்னால் ஆலயத் தலைவர் வ. கருணநாதன் மலர்மாலை அணிந்து வரவேற்று ஆலய நிர்வாகிகள் புடைசூழ மேடைக்கு அழைத்துவரப் பட்டார். மேடையில் வைத்து ஆலயத்தின் செயலாளர் கவிமணி என். மணிவாசகன் பிரதமர் ஜயரட்னாவுக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். யுத்தம், இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த இந்து ஆலயங்களை புனரமைப்புச் செய்வது தொடர் பாக இந்து கலாசார அமைச்சின் அம்பாறை மாவட்ட கலாசார அதிகாரி எஸ்.
 குணநாயகம் சமர்ப்பித்த அறிக்கையில் முதல் கட்டமாக 41 ஆலயங்கள் புனரமைப்புச் செய்வதற்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளை பிரதமர் ஜயரட்ன சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைத்தார். இந்த வைபவத்தில் அமைச்சர் பி. தயாரத்தினா பேசுகையில் அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் வரலாற்றுப்புகழ்பெற்ற ஆலயம் நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் போது இப்பகுதியில் உள்ள சில விசமிகளின் இந்த ஆலயம் சேதமாக்கப்பட்டது. கல்லோயா இந்து பரிபாலன சபையினரின் முயற்சியால் புனரமைப்புச் செய்யப்பட்ட போதிலும் அவை முழுமையானது அல்ல இதனை சிறந்த முறையில் புனரமைப்புச் செய்ய வேண்டுமென்றார்.
பிரதமர் ஜயரட்ன மேலும் பேசுகையில் நான் கம்பளைப் பகுதியைச் சேர்ந்தவன் அங்கும் அம்பாறை போன்று மூவினமக்களும் குடியிருக்கிறார்கள். அங்குள்ள மதவழிபாட்டுத் தலங்களுக்கும் உதவியுள்ளேன். அங்குள்ள இந்து ஆலயங்களுக்கு நான் சென்று வழிபடுவது எனது வழக்கமாக இருந்துவருகிறது என்றார்.
இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஏற்றவாறு அரச ஊழியர்களுக்கான வகுப்புகள் மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிங்கள மொழிப்பாடசாலை மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள் வதற்கும், தமிழ் மொழிப் பாடசாலைகளில் சிங்களத்தைக் கற்றுக் கொள்வதற்கும் தற்போது ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இலங்கை ஒரு சிறிய நாடு இதனை எந்தக்காரணத்தைக் கொண்டு கூறுபோடமுடியாது. எல்லா இனத்தவர்களும் சகோதர்கள் போல் வாழ வேண்டுமென்று சுட்டிக்காட்டினார். பிரதமரின் பேச்சை அப்படியே ஏ. எச். எம். அஷ்வர் எம். பி. தமிழ் மொழியில் மொழிபெயர்த்துப் பேசினார்.
இந்த வைபவத்தில் மாகாண சபை அமைச்சர் எம். உதுமாலெவ்வை, உறுப்பினர் எஸ். செல்வராஜா, ஆகியோரும் கலந்துகொண்டார்கள். பிரதமர் அம்பாறை பள்ளிவாசல், பெளத்த விகாரை ஆகியவைகளுக்கும் விஜயம் செய்து அங்குள்ள பிரமுகர்களுடனும் கலந்துரையாடினார்.

0 commentaires :

Post a Comment