9/27/2010

அமைதியா, ஜெரூஸலக் குடியேற்றமா என்பதை இஸ்ரேல் அரசாங்கம் விரைவாக தெரிவு செய்ய வேண்டும்


பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் ஐ. நா. பொதுச் சபையில் உரையாற்றுகின்றார். நேரடிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாக யூதக் குடியேற்றங்களின் தற்காலிக நிறுத்தம் நீடிக்கப்பட வேண்டுமென்கிறார்.
இஸ்ரேல் அரசாங்கம் யூதக் குடியேற்றங்களை நிரந்தரமாக நிறுத்தும் வரை அமைதி கிடையாது. அமைதியா, ஜெரூஸலக் குடியேற்றமா என்பதை இஸ்ரேல் அரசாங்கம் விரைவாக தெரிவு செய்ய வேண்டுமென ஐ. நா. வில் உரையாற்றிய பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மஃமூத் அப்பாஸ், அமைதியைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் நாங்கள் தெளிவாகவும் உறுதியாகவுமுள்ளோம்.
இறுதியான பேச்சுவார்த்தைக்குள் நுழையத் தீர்மானித்துவிட்டோம். சர்வதேசம் எதிர்ப்பார்ப்பது போல் பலஸ்தீன அரசின் சுயாட்சியை நிறுவவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். இரண்டு நாடுகள். இரண்டு எல்லைகள் என்பதே எங்கள் நோக்கு. ஆனால், கிழக்கு ஜெரூஸலம், மேற்குக் கரை ஆகிய பிரதேசங்களில் இஸரேலின் யூதக் குடியேற்றங்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளதாகவும் மஃமூத் அப்பாஸ் உரையாற்றினார்.
மத்திய கிழக்குப் பிரச்சினைனக்கு இறுதித் தீர்வுகாண நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் 2008 ம் ஆண்டு தடைப்பட்டன. காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாலும், கிழக்கு ஜெரூஸலம், மேற்குக் கரை என்பவற்றில் இஸ்ரேலின் திட்டமிட்ட யூதக் குடியேற்றங்கள் தொடர்ந்ததாலும் இந்தப் பேச்சுக்கள் தடைப்பட்டன.
பின்னர் 2010 ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் எகிப்து, அமெரிக்கா முன்னெடுத்த முயற்சிகளால் இஸ்ரேல், பலஸ்தீனர்களிடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்பமான இந்த மறைமுகப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க, எகிப்து அதிகாரிகள் இஸ்ரேல், பலஸ்தீன் சார்பாகப் பங்கேற்றனர். இதை முன்னிட்டு பத்து மாதங்களுக்கு இஸ்ரேலின் திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
செப்டம்பர் 26 வரை இதன் கால எல்லையாகும். மறைமுகப் பேச்சுக்கள் எதிர்பார்த்த திருப்தியளித்ததால் நேரடிப் பேச்சுக்கள் ஆரம்பமாகின. இதில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு. பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ், எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோர் பங்கேற்றனர். ஐ- நா. வின் 65 வது பொதுக் கூட்டம் ஆரம்பமானதையடுத்து மூன்றுவாரங்களுக்கு மத்திய கிழக்கு நேரடிப் பேச்சுக்கள் இடை நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் யூதக் குடியேற்றங்களை நிறுத்தி வைக்க இஸ்ரேல் விடுத்த கால எல்லையும் (செப். 26) முடிவடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் ஐ. நா. வில் உரையாற்றியுள்ளார். இஸ்ரேலின் யூதக் குடியேற்ற நிலைப்பாடு, பலஸ்தீனர்களின் எதிர்காலத் தலைநகர் ஜெரூஸலம் என்ற கொள்கைக் கிடையில் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி பெரும்முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளார். சமாதானம் நிச்சயத்தன்மையிலிருந்து தூரத்திலுள்ளதாக இஸ்ரேல், பலஸ்தீனத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
செப்டம்பர் 26 ற்குப் பின்னர் இஸ்ரேல் குடியேற்றங்கள் மீண்டும் தொடருமா, இல்லையா என்பது பற்றி இஸ்ரேல் பிரதமரிடமிருந்து தெளிவான வார்த்தைகள் இது வரைக்கும் வெளியாகவில்லை. இதுவரை குடியேற்றப்பட்ட முப்பதாயிரம் யூதர்களும் பலஸ்தீனர்களின் அதிகாரத்துக்குள் வரவேண்டுமென்கிறார் அப்பாஸ்.

0 commentaires :

Post a Comment